Published:Updated:

`பா.ஜ.க இல்லாத இந்தியா' - புதிய இலக்கு நோக்கி சந்திரசேகர ராவ், நிதிஷ் குமார் அண்ட் கோ!

தேஜஸ்வி - சந்திரசேகர ராவ் - நிதிஷ்

``பா.ஜ.க இல்லாத இந்தியாவை உருவாக்குவதே எங்களின் நோக்கம். அதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியாக ஒன்று திரள வேண்டும்!” - சந்திரசேகர ராவ்

`பா.ஜ.க இல்லாத இந்தியா' - புதிய இலக்கு நோக்கி சந்திரசேகர ராவ், நிதிஷ் குமார் அண்ட் கோ!

``பா.ஜ.க இல்லாத இந்தியாவை உருவாக்குவதே எங்களின் நோக்கம். அதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியாக ஒன்று திரள வேண்டும்!” - சந்திரசேகர ராவ்

Published:Updated:
தேஜஸ்வி - சந்திரசேகர ராவ் - நிதிஷ்

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரைச் சந்தித்திருக்கும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், `பா.ஜ.க இல்லாத இந்தியாவே நோக்கம்' எனக் கூறி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

தேஜஸ்வி - சந்திரசேகர ராவ் - நிதிஷ்
தேஜஸ்வி - சந்திரசேகர ராவ் - நிதிஷ்

மீண்டும் மூன்றாவது அணியமைக்கும் முயற்சி:

2024 - நாளுமன்றப் பொதுத்தேர்தலில் எப்படியேனும் மூன்றாவது அணியை அமைத்துவிட வேண்டும் என உறுதியாகச் செயல்பட்டுவருகிறார் தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ். இதற்காக பா.ஜ.க அல்லாத மாநில முதல்வர்களையும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்துவருகிறார். அந்த வரிசையில், கடந்த மாதம் பீகாரில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறி காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராகியிருக்கும் நிதிஷ் குமாரைச் சந்தித்திருக்கிறார். மேலும், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவையும், அவரின் தந்தை லாலு பிரசாத் யாதவையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சந்திரசேகர ராவ் - நிதிஷ் - தேஜஸ்வி சந்திப்பு:

பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டதையடுத்து, பா.ஜ.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டில் மிகத் தீவிரமாக இருக்கிறார் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவருமான நிதிஷ் குமார். இது எதிர்க்கட்சிகளின் கூடாரத்துக்கு வலுசேர்க்கும், மூன்றாவது அணி அமைக்கும் தனது நோக்கத்துக்கு கூடுதல் பலமாக இருக்கும் எனக் கருதிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று பீகாருக்கு நேரில் புறப்பட்டுச் சென்றார். அவரை பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் சேர்ந்து வரவேற்றனர்.

வரவேற்பு
வரவேற்பு

பின்னர் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சந்திரசேகர ராவ், தான் ஏற்கெனவே அறிவித்தபடி கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் நடந்த மோதலில் உயிரிழந்த பீகாரைச் சேர்ந்த ஐந்து ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், தெலங்கானாவில் உயிரிழந்த பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதியும் அடங்கிய காசோலையை முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் இணைந்து வழங்கினார். அதன் பிறகு, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்குச் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார்.

நிவாரண நிதி வழங்கியபோது...
நிவாரண நிதி வழங்கியபோது...

`பா.ஜ.க இல்லாத இந்தியா' - சந்திப்புக்குப் பிறகான பேட்டி:

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய நிதிஷ் குமார், ``தெலங்கானா தனி மாநிலமாக உருவாகத் தனி மனிதனாகப் போராடியவர் சந்திரசேகர ராவ். இவர் யார் என்பதை பா.ஜ.க-வினர் உணரவில்லை. வாஜ்பாய்க்கு மற்ற தலைவர்களை மரியாதையுடன் நடத்தும் பண்பு இருந்தது. ஆனால் அது பழைய காலமாகிவிட்டது. இப்போது இருப்பவர்களுக்கு விளம்பரம் மட்டுமே முக்கிய நோக்கமாக இருக்கிறது" என பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய சந்திரசேகர ராவ், ``நிதிஷ் குமார் என்னுடைய மூத்த சகோதரர் போன்றவர். பா.ஜ.க-வால் நாட்டில் ஏராளமான குழப்பங்கள், பிரச்னைகள் நடந்துவருகின்றன. திறமைமிக்க இந்தியர்கள் வெளிநாட்டுக்கு வெளியேறிச் செல்வதுபோல், இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு மூலதனங்களும் இந்தியாவைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றன. பா.ஜ.க இல்லாத இந்தியாவை உருவாக்குவதே எங்களின் நோக்கம். அதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியாக ஒன்று திரள வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

சந்திரசேகர ராவ், நிதிஷ்குமார்
சந்திரசேகர ராவ், நிதிஷ்குமார்

பா.ஜ.க-வின் விமர்சனம்:

இந்தச் சந்திப்பை பா.ஜ.க கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. குறிப்பாக, பா.ஜ.க மூத்த தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் மோடி, ``பிரதமர் மோடிக்கு முன்னால் நிற்க முடியாத, சொந்த மாநிலங்களில் தங்களின் செல்வாக்கை இழந்த, `நாட்டின் பிரதமராக ஆசைப்படும்' பகல் கனவு காணும் இரண்டு தலைவர்களின் சந்திப்பு" என மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

2019 தேர்தலில் நழுவிச் சென்ற மூன்றாவது அணி, 2024 தேர்தலில் கைகூடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.