அலசல்
Published:Updated:

கொரோனா தாக்கம்... நாட்டில் பணப்புழக்கம் இருக்கிறதா?

கொரோனா தாக்கம்...
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா தாக்கம்...

பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்திடம் பேசினோம்.

மருத்துவ நிலை அவசர ஊரடங்கால், மக்களிடத்திலும் குறு, சிறு தொழில் நிறுவனத்தினரிடமும் 80 சதவிகிதப் பணப்புழக்கம் குறைந்துவிட்டது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, “நாட்டில் பணப்புழக்கம் சீராக உள்ளது. பொருளாதாரம் சுணங்குகிறது என்றால், முதலில் பணப்புழக்கம்தான் குறையும். ஆனால், அப்படி எந்தச் சூழ்நிலையும் உருவாகவில்லை” என்கிறார். உண்மை நிலை என்ன... இனிவரும் நாள்களில் பணப்புழக்கம் எப்படியிருக்கும்?

இதுகுறித்து, பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்திடம் பேசினோம். “நுகர்வோர் மற்றும் தொழில்முனை வோர்களுக்கு கடன் கொடுத்து, அதன்மூலமாக நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்ய நினைக்கிறது ரிசர்வ் வங்கி. வங்கிகள், கடனுக்கான வட்டித்தொகையைக் குறைக்க வேண்டும். இதற்காகவே வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனுக்கு ரெப்போ வட்டிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பிற வங்கிகள் ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யும் தொகையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டிவிகிதம் குறைக்கப் பட்டுள்ளது.

பொருளாதாரம்
பொருளாதாரம்

சென்ற ஆண்டில் மட்டும் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டிவிகிதத்தை 135 புள்ளிகள் வரை குறைத்தது. தற்போது அதில் 50 சதவிகிதத்தைக் குறைத்திருக்கிறது. ‘நான் உங்களுக்கான வட்டிவிகிதத்தைக் குறைக்கிறேன். அதற்கு ஏற்றபடி மக்களுக்கான வீட்டுக் கடன், வாகனக் கடன்களுக்கு வட்டிவிகிதத்தை நீங்கள் குறையுங்கள். இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும்’ என வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனால், வங்கிகள் இதை கடைப்பிடிக்கவேயில்லை என்பதுதான் வேதனை.

வங்கிகளுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்தும், மக்களுக்கான வட்டிவிகிதத்தை வங்கிகள் குறைக்கவில்லை. புதிதாக கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் குறைந்துவருகிறது. வேலையிழப்புகள் அதிகரித்து வருகின்றன. நிறுவனங்களுக்கும் உற்பத்தி ஆர்டர் இல்லை. எனவே, கடன் பெற்று தொழிலில் முதலீடு செய்யவும் நிறுவனங்களும் தயக்கம்காட்டுகின்றன. பணப்புழக்கத்தை அதிகரிக்க ஆர்.பி.ஐ மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அவை நடைமுறைக்கு வரவில்லை. மக்களிடத்தில் பணம் போய்ச் சேராமல் நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியாது. இதே நிலை தொடர்ந்தால் பணப்புழக்கம் மேலும் குறையும்” என்றவர், நிதி நெருக்கடி நேரங்களில் உலகளவில் பின்பற்றப்படும் ஓர் உத்தியையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

கொரோனா தாக்கம்...
கொரோனா தாக்கம்...

“இதுபோன்ற பேரிடர் காலங்களில், ‘ஹெலிகாப்டர் மணி கான்செப்ட்’ என்ற ஓர் உத்தியை மத்திய அரசாங்கம் பின்பற்றுவதில் தவறில்லை. ஹெலிகாப்டர் மணி கான்செப்ட் என்றால், தேவையான அளவு பணத்தை அச்சிட்டு, அதை ஹெலிகாப்டரில் இருந்து தூவுவது இதன் பொருள். ஆனால், இது மறைபொருள்தான். நேரடியாக அப்படியே அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது. இதன்படி, மக்களின் வங்கிக்கணக்கில் தேவையான பணம் வரவுவைக்கப்படும். இது கடன் அல்ல. கொரோனா மாதிரியான பேரிடர் காலங்களில் மக்களின் வங்கிக்கணக்குகளில் இலவசமாக வரவுவைக்கப்படும் பணம். இதை கொண்டு, அவர்கள் தங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளலாம். நாட்டின் பணப்புழக்கமும் அதிகரிக்கும்.

அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள், நாட்டின் மொத்த ஜி.டி.பி சதவிகிதத்தில் 15 சதவிகிதத் தொகையை மக்களுக்காக ஒதுக்கியிருக்கும்போது, இந்தியா 0.5 சதவிகிதத் தொகையைக் கூட ஒதுக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. நாட்டின் நிதிப்பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் குறித்தெல்லாம் இந்த நேரத்தில் கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல், மக்களின் உடனடி பணத்தேவையை மத்திய அரசாங்கம் பூர்த்திசெய்ய வேண்டும். அப்போதுதான் பணப்புழக்கம் அதிகரிக்கும்’’ என்றார்.

ஜோதி சிவஞானம்
ஜோதி சிவஞானம்

நாட்டில் பணப்புழக்கம் குறைந்துள்ள தால், இந்தியாவில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டினர் இந்த வருடம் மட்டும் 5.04 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை விற்றுள்ளனர். இதனால், மேலும் பணப்புழக்கம் குறைந்து முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சத்தைப் போக்குவதற்காக 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட்டுகளிடமிருந்து வாங்கி தன்வசம் வைத்துக் கொள்ள முடிவுசெய்துள்ளது ரிசர்வ் வங்கி.

 நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

‘நாட்டின் நிதிநிலையை உற்று கண்காணித்துக்கொண்டிருக்கிறோம். எங்கள்மீதான மக்கள் நம்பிக்கையை இந்தத் தருணத்தில் உறுதிப்படுத்திக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். இந்தப் பத்திரங்களை வாங்குவதன் மூலம் எல்லா சந்தைப் பிரிவுகளிலும் நிலைத்தன்மையை மேம்படுத்த முடியும். பணப்புழக்கத்தையும் அதிகரிக்க முடியும்’ என அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

நிலைமை விரைவில் சீராகும் என நம்புவோம்!