Published:Updated:

அம்பானி, அதானி கையில் இந்திய செய்தி ஊடகங்கள்... விளைவுகள் என்னென்ன?!

அம்பானி, அதானி

இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் அம்பானி, அதானி ஆகிய பெரும் தொழிலதிபர்களின் கைகளுக்குப் போகும் சூழலில், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

அம்பானி, அதானி கையில் இந்திய செய்தி ஊடகங்கள்... விளைவுகள் என்னென்ன?!

இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் அம்பானி, அதானி ஆகிய பெரும் தொழிலதிபர்களின் கைகளுக்குப் போகும் சூழலில், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

Published:Updated:
அம்பானி, அதானி

நிலக்கரி, சுரங்கம், மின்சாரம், துறைமுகம், விமான நிலையம் என்று பல்வேறு தொழில்களை நடத்துகிற இந்தியாவின் முன்னிணி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானியும், கௌதம் அதானியும் தற்போது ஊடக அதிபர்களாகவும் மாறியிருக்கிறார்கள். ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளைச் சீர்தூக்கிப் பார்த்து விமர்சனம் செய்கிற, சமூகத்தில் நடைபெறும் நியாய அநியாயங்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துகிற பணிகளைச் செய்துவரும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணைய இதழ்கள் ஆகியவற்றை கைப்பற்றுவதில் அம்பானியும் அதானியும் போட்டிபோடுகிறார்கள்.

அதானி
அதானி

‘நேஷனல் சேனல்கள்’ எனப்படும் ஆங்கில, இந்தி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் மாநில மொழிகளில் இயங்கும் செய்தி சேனல்கள் ஆகியவற்றில் பெரும்பாலானவை அம்பானி, அதானி ஆகியோரின் கைப்பிடிக்குள் போய்விட்டன. தற்போது, என்.டி.டி.வி எனப்படும் நியூ டெல்லி டெலிவிஷன் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் 29.18 சதவிகிதப் பங்குகளை அதானி மீடியா குழுமம் வாங்கிவிட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி, அரசியல் வட்டாரத்திலும் ஊடக வட்டாரத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூத்த பத்திரிகையாளரான பிரணாய் ராய், அவரின் மனைவி ராதிகா ராய் ஆகியோர் இணைந்து என்.டி.டி.வி-யை 1988-ம் ஆண்டு தொடங்கினார்கள். ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை ஓரளவுக்கு விமர்சனம் செய்கிற தொலைக்காட்சியாக என்.டி.டி.வி இருந்துவருகிறது. இந்த நிலையில், மத்திய ஆட்சியாளர்களுக்கு மிகவும் நெருக்கமான அதானி குழுமத்தின் பிடிக்குள் என்.டி.டி.வி செல்கிறது. அதானி குழுமத்தைச் சேர்ந்த ஏ.எம்.ஜி மீடியா நெட்வொர்க்ஸ், என்.டி.டி.வி-யின் 29.18 சதவிகிதப் பங்குகளை வாங்கியிருக்கிறது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
reliance ambani

'ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தின் பங்குகளில், 25 சதவிகிதத்துக்கும் அதிகமானவற்றை வாங்கிவிட்டால், மேற்கொண்டு வாங்கப்போகும் பங்குகள் குறித்த வெளிப்படையான அறிவிப்பை வெளியிடலாம்' என்று செபியின் விதிமுறைகள் உள்ளன. இதன்படி, என்.டி.டி.வி., நிறுவனத்தின் மேலும் 26 சதவிகிதப் பங்குகளையும் வாங்கப் போவதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், “என்.டி.டி.பி நிறுவனர்களின் ஒப்புதல் ஏதுமின்றி பங்குகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இதுபற்றி எங்களிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நாங்கள் எங்கள் இதயமான ஊடகத்துறையில் எதையும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். நாங்கள் பத்திரிகை துறைக்காக பெருமையுடன் நிற்போம். 61 சதவிகிதப் பங்குகள் எங்கள் வசமே இருக்கின்றன" என்று என்.டி.டி.வி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பெரும் கார்ப்பரேட்களின் கைகளுக்கு ஊடகங்கள் போய்விட்டால், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கக்கூடிய ஊடகத்தின் கதி என்ன என்பது பற்றி கேள்வி எழுந்திருக்கிறது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கரிடம் பேசினோம்.

“பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பெரும் தொழிலதிபர்கள், தங்கள் பிசினஸ் நலனுக்காக ஊடகத் தொழிலுக்குள் நுழைகிறார்கள். தற்போது, இது ஒரு புது ட்ரெண்டாக இருக்கிறது. ஊடகம், பத்திரிகை ஆகியவற்றை மட்டுமே தொழிலாகக் கொண்டிருப்பவர்கள், நம்பகத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக செய்திகளில் ஒருவித சமநிலையைக் கடைப்பிடிப்பார்கள். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு இந்திய ஊடகங்கள் செல்லும் நிலையில், அந்த ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் எந்தளவுக்கு நம்பகத்தன்மை இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

ஆர்.விஜயசங்கர்
ஆர்.விஜயசங்கர்

ஊடகங்களுக்கு சுதந்திரமும் சமூகப் பொறுப்பும் மிக மிக அவசியம். அப்படிப்பட்ட சிந்தனைகளை மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பெரும் தொழிலதிபர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஊடகங்களில் பெரும் பகுதி வேறு தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களின் கைகளுக்குப் போய்விட்டால், அரசின் மீது கண் வைக்கும் ‘வாட்ச் டாக் ஜர்னலிசம்’ முடிவுக்கு வந்துவிடும். ஊடக சுதந்திரம் முற்றிலும் காலியாகிவிடும்.

இத்தகைய தொழிலதிபர்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு ஊடகத்தின் மூலமாக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பது முக்கிய நோக்கமாக இருக்காது. தங்கள் தொழில்களைப் பாதுகாத்துக்கொள்ள ஊடகங்களை அவர்கள் பயன்படுத்துவார்கள். அவர்கள் நடத்துகிற தொழில்கள் குறித்து எதிர்மறையான, விமர்சன ரீதியான செய்திகள் எதுவும் அந்த ஊடகங்களில் வெளிவராது. அதுதான் அவர்களுக்கு முக்கியம். ‘சந்தை’யில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளின் கட்டுப்பாட்டுக்குள் ஊடகம் செல்வதால், அவர்கள் நினைப்பதுதான் செய்தி என்ற நிலை ஏற்படும்” என்கிறார் விஜயசங்கர்.

இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளரான ப்ரியனிடம் பேசியபோது, “பத்திரிகை அதிபர்களுக்கு வேறு எந்தத் தொழிலும் இல்லாமல் இருந்தால், பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பற்ற முடியும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டின் அதிபரான மறைந்த கோயங்கா சொன்னதுதான் இப்போது என் நினைவுக்கு வருகிறது” என்று பேச ஆரம்பித்தார். “கோயங்கா சொன்ன அந்த கருத்தைப் போலவே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவும் சொல்லியிருக்கிறார். இந்தக் கருத்து மிகவும் முக்கியமானது. கோயங்காவின் தொழில் பத்திரிகை நடத்துவது மட்டும்தான். அதனால்தான், அவசரநிலை விமர்சித்து அவரது பத்திரிகையில் துணிச்சலாக எழுத முடிந்தது... இந்திரா காந்தியை எதிர்க்க முடிந்தது.

பல்வேறு தொழில்களைச் செய்கிறவர்கள் ஊடகங்களை நடத்தினால், ஆட்சியாளர்களை விமர்சித்து செய்தி வெளியிடுவதில் பிரச்னை ஏற்படும். நேர்மையாக செய்தி வெளியிட்டாலோ, ஆட்சியாளர்களை விமர்சித்தாலோ, அந்த ஊடக அதிபரால் நடத்தப்படும் வேறு தொழில்களுக்கு ஆட்சியாளர்களால் நெருக்கடி தரப்படும்.

ப்ரியன்
ப்ரியன்

இந்த சூழலில், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஊடகங்களை நடத்துவதற்கான உரிமை இருக்கிறது. ஆனால், உண்மையான அக்கறையுடன், பாரபட்சமின்றி ஊடகத்தை அவர்கள் நடத்துவார்களா என்பது கேள்விக்குறி. ஆட்சியாளர்களுக்கு சங்கடங்களைக் கொடுக்கும் விதத்தில் அவர்களின் ஊடகங்களில் செய்திகள் வராது. ஒரு தொழிலதிபரின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் தொடர்ச்சியாகப் பிடிபடுகின்றன. அது குறித்த செய்தியெல்லாம் அவர்களின் ஊடகங்களில் வெளிவராது” என்கிறார் ப்ரியன்.

இன்னொரு முக்கிய விஷயம். தேர்தல்களில் ஊடகங்கள் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன. கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் இருக்கும் ஊடகங்கள், தங்களுக்கு சாதகமான கட்சிகளுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்புகளை வெளியிடும் ஆபத்தும் இதில் இருக்கிறது. அவர்கள் வெளியிடும் கருத்துக்கணிப்பு எந்தளவுக்கு நேர்மையாக இருக்கும் என்பது முக்கியமான கேள்வி.

தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் பல்வேறு துறைகளில் தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு சொந்தமாக ஊடகங்கள் இருக்கிறது. இப்போது அதானி என்.டி.டி.வி நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதன் மூலம் இந்த விவகாரம் நாட்டில் பேசுபொருள் ஆகி இருக்கிறது.