Published:Updated:

மாநிலப் பிரிவினைகளும் தனிமாநிலக் கோரிக்கைகளும் : ஓர் வரலாற்றுப் பார்வை|பகுதி - 1

வரைபடம்
வரைபடம்

இந்தியாவில் மாநிலங்கள் எப்போது, ஏன், எப்படி, என்ன காரணங்களுக்காக பிரிக்கப்பட்டன. மொழிவாரி மாநிலங்கள் எப்படி உருவாக்கம் பெற்றன, இன்னும் தனிமாநில அந்தஸ்துக்காக போராடி வரும் மக்கள் யார், புதிய மாநில பிரிப்புக்கான தற்போதைய தேவை என்ன? அலசுகிறது இந்தத் தொடர்.

``இந்தியாவை பல சிறு மாநிலங்களாகப் பிரிக்கவேண்டும். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டை மூன்று மாநிலமாகப் பிரிக்கவேண்டும். அதுதான் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்" என சமீபத்தில் ஒருநீண்ட கட்டுரை எழுதி வெளியிட்டிருந்தார் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். அவருடைய இந்தக்கருத்துக்கு ஆதரவும், கடுமையான எதிர்ப்பும் கிளம்பி தமிழக அரசியலில் அது மாபெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

பெரிய மாநிலங்களைப் பிரித்து புதிய மாநிலங்கள்! -ராமதாஸ் கோரிக்கை வளர்ச்சிக்கு வழிவகுக்குமா? #LongRead

இந்த சூழ்நிலையில், இந்தியாவில் மாநிலங்கள் எப்போது, ஏன், எப்படி, என்ன காரணங்களுக்காக பிரிக்கப்பட்டன. மொழிவாரி மாநிலங்கள் எப்படி உருவாக்கம் பெற்றன, இன்னும் தனிமாநில அந்தஸ்துக்காக போராடி வரும் மக்கள் யார், புதிய மாநில பிரிப்புக்கான தற்போதைய தேவை என்ன? போன்ற கேள்விகளுக்கு உண்மைக்காரணங்களைக் கண்டறிய, பழைய வரலாற்றிலிருந்து பயணப்படுகிறது இந்தத் தொடர்.

ஆரம்பகால இந்தியா எப்படி இருந்தது?
சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும்:

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியா, 526 சமஸ்தானங்களைக் கொண்டிருந்தது. அவை மதராஸ், பம்பாய், வங்கம், டெல்லி என 15 மாகாணங்களாக நிர்வகிக்கப்பட்டு வந்தன. இந்தியா சுதந்திரம் பெற்ற பின் 1950-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போது, இந்திய மாநிலங்கள் பகுதி ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டன. இந்தப் பகுதிகள் முறையே முன்னாள் பிரிட்டிஷ் மாகாணங்கள், முன்னாள் மன்னர் சமஸ்தானங்கள் ( ராஜப் பிரமுகர்கள்) , முன்னாள் மன்னர் சமஸ்தானங்கள் (முதன்மை ஆணையர்கள்), யூனியன் பிரதேசங்கள் என வெவ்வேறு முறையில் நிர்வகிக்கப்பட்டன.

இந்திய வரைபடம்
இந்திய வரைபடம்

இந்தநிலையில் மொழிவாரியாக இந்திய மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற குரல்கள் தீவிரமாக எழு ஆரம்பித்தன. காரணம், இந்திய சுதந்திரத்துக்கு முன்பே 1920-ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் கட்சி மொழிவழிப்பிரதேச அடிப்படையில் கமிட்டிகள் அமைத்து செயல்பட்டது. குறிப்பாக, 1920-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், சுதந்திரத்திற்குப் பின் இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்படும் என உறுதியளித்திருந்தது. ஆனால், இந்திய சுதந்திரத்திற்குப்பின் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அதற்கு காரணம் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கான கோரிக்கையை ஆய்வு செய்த கமிஷன்கள் பரிந்துரைத்த கருத்துக்களே.

அப்படி என்ன சொன்னது அந்தக் கமிஷன்கள்?

தார் கமிஷன் பரிந்துரை:


1948-ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரத்தலைவரான டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் பரிந்துரையில், மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், சாதக பாதகங்களைக் கண்டறிய எஸ்.கே. தார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. தார் கமிஷன் என்றழைக்கப்பட இந்தக்குழு ஆய்வின் முடிவில்,``மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படுவது பிரிவினைக்கு வழிவகுக்கும் எனவே பொருளாதார மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்கவேண்டும்” எனப் பரிந்துரை செய்தது. தார் கமிஷனின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. புதிதாக ஜேவிபி கமிஷன் பிறந்தது.

JVP கமிட்டி
JVP கமிட்டி

ஜேவிபி கமிட்டி பரிந்துரை:

தார் கமிஷன் மீது நிலவிய அதிருப்தியின் காரணமாக அதே ஆண்டு ஜே.வி.பி கமிஷன் அமைக்கப்பட்டது. ஜேவிபி கமிட்டி (J- Jawaharlal Nehru, V- Vallabhbhai Patel, P- Pattabhi Sitaramayya (JVP)) என்பது ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகிய மூன்று தலைவர்களின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. இந்தக்கமிட்டியும் தார் கமிஷனின் பரிந்துரையை ஒப்புக்கொண்டது. 1949-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், ``மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்கக் கூடாது” எனத் தெரிவித்தது. குறிப்பாக சர்தார் வல்லபாய் பட்டேல், ``மொழிவழி பிரிந்து நிற்பது தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது என்ற பாடத்தை வரலாறு நமக்குக் கற்றுத் தந்துள்ளது” என்று உறுதிபடக் கூறியிருந்தார்.

இப்படியாக மொழிவாரி மாநிலக்கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு, நான்கு பிரிவுகளைக்கொண்ட பகுதிகளாக 1950-ம் ஆண்டு இந்திய அரசமைப்பானது உருவாக்கம் பெற்றது.

இத்தனைக் கமிஷன்களின் பரிந்துரைகளையும் தாண்டி, 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் தோன்றியது எப்படி? .....காத்திருங்கள் அடுத்த பகுதியில்!

அடுத்த கட்டுரைக்கு