இந்தியாவை உலுக்கிய டாப் 15 ஊழல் குற்றச்சாட்டுகள்! #EndCorruption
சுதந்தர இந்தியாவின் இத்தனை ஆண்டுக்கால அரசியல் வரலாற்றில் நடைபெற்ற டாப் 15 ஊழல் குற்ற வழக்குகளின் விவரங்களை இந்த கட்டுரைத் தொகுப்பில் காணலாம்...

போபர்ஸ் ஊழல்:
சுவீடன் நாட்டு போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகள் வாங்குவதற்காக,1986-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. 1,437 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, இந்திய அரசியல் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் 64 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த ஊழல் விவகாரத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபட்டன.

இந்த ஊழல் தொடர்பாக, போபர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்டின் அர்ட்போ, இடைத்தரகர் குவாத்ரோச்சி, சத்தா, ராஜீவ் காந்தி, பாதுகாப்புச் செயலாளர் பட்நாகர், தொழிலதிபர்களான இந்துஜா சகோதரர்கள் உள்ளிட்டோர்மீது, சிபிஐ குற்றப்பத்திரிகையைப் பதிவுசெய்தது. இந்த ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, 1989-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது.
'2-ஜி' ஸ்பெக்ட்ரம்:
கடந்த 2007-ம் ஆண்டு, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தபோது, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் உரிமம் வழங்கியதில், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வரை மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஆ.ராசா பதவி விலக நேரிட்டது.

இந்தியச் சுதந்தரத்துக்குப் பிறகு நடந்த ஊழல்களில், மிகப் பெரிய முறைகேடு வழக்காக இது பார்க்கப்பட்டது. இந்த ஊழல் குற்றச்சாட்டு நாட்டையே உலுக்கியது.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ராஜா, கனிமொழி உள்ளிட்ட 19 பேர் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்தது.
வக்ஃப் வாரிய நில மோசடி:
கர்நாடக மாநில வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள 57 ஆயிரம் ஏக்கர் நிலம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.

இந்த நிலம், நலிந்த மற்றும் ஏழை மக்களுக்கு முஸ்லிம் தொண்டு நிறுவனத்தின்மூலம் நன்கொடையாக வழங்கப்பட வேண்டியதாகும். இதுதொடர்பான விசாரணை தற்போது நடைபெற்றுவருகிறது.
காமன்வெல்த் விளையாட்டு ஊழல்:
2010-ம் ஆண்டு, புதுடெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின்போது, சிறிதும் பெரிதுமாகப் பல்வேறு வகையில் 95 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவிற்கு ஊழல்கள் தாண்டவமாடின.

இதுதொடர்பான வழக்கு நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் அமைப்பாளராகச் செயல்பட்ட சுரேஷ் கல்மாடி, இந்த வழக்கின் முக்கியமானவராகக் கருதப்பட்டார். காமன்வெல்த் ஊழல், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது.
முத்திரைத்தாள் மோசடி - தெல்கி ஊழல்:
2003-ம் ஆண்டு, ஒட்டுமொத்த இந்தியாவையும் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்த முத்திரைத்தாள் மோசடிமூலம் மத்திய அரசுக்கு ரூ.30,000 கோடி இழப்பு ஏற்பட்டது. 350 போலி தரகர்கள் மூலம் நாட்டிலுள்ள பெரிய வங்கிகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும், பங்குச் சந்தை நிறுவனங்களுக்கும் போலி முத்திரைத்தாள்களை விற்றதாக, அப்துல் கரீம் டெல்கி என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

2006-ம் ஆண்டு ஜனவரி மாதம், தெல்கி மற்றும் பல்வேறு கூட்டாளிகளுக்கு 30 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல்:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் நிலக்கரித்துறை அமைச்சகம் செயல்பட்ட காலத்தில், நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. சுமார் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு காரணமாக 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெற்றுவருகிறது.
சத்யம் நிறுவன ஊழல்:
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முறையற்ற கணக்குப் பதிவின்மூலம் பல கோடி ரூபாயை இந்நிறுவனம் மோசடி செய்தது. இதனைக் கண்டறிந்த கார்ப்பரேட் அஃபேர்ஸ் அமைச்சகத்தின் தீவிர மோசடிப் புலனாய்வு அலுவலகம், நிறுவனச் சட்டங்களின் அடிப்படையில் 7 வழக்குகளைப் பதிவு செய்தது.

சத்யம் கணினி நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு நிறுவனத்தின் கணக்குகளைத் தவறாகக் காட்டி, 14,000 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக ராஜுவிடம் சிபிஐ அதிகாரிகளால் விசாரணை நடத்தினர். ராஜு உள்பட 10 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 14,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் வெறும் 6 மாத சிறைத்தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன.
ஆதர்ஷ் ஊழல்:
கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு வழங்குவதற்காக அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்ட ஆதர்ஷ் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தக் குடியிருப்புகளில், அரசியல்வாதிகளுக்கும் உயிருடன் உள்ள ராணுவ உயரதிகாரிகளுக்கும், அதிகாரிகளின் உறவினர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சி தலைவர்களின் பெயர்களும் ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு பட்டியலில் இருப்பது விசாரணையில் உறுதியானது. இதனையடுத்து, மகாராஷ்டிரா முதல் மந்திரி அசோக் சவான் பதவி விலகினார்.
சவப்பெட்டி ஊழல்:
கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கான சவப்பெட்டிகளை வாங்க, அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சவப்பெட்டிகளுக்கு உண்மையான விலையை விட, 13 மடங்கு அதிகமாக விலை கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. தவிர, மூன்று ராணுவ அதிகாரிகள் மீதும் சிபிஐ குற்றம் சாட்டியது. இறுதியில், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என சிபிஐ அறிவித்ததால், வழக்கு முடிவடைந்தது.
ஹவாலா ஊழல்:
பா.ஜ.க ஆட்சிக்காலத்தில், பிரபல ஹவாலா முகவர்கள், ஜெயின் சகோதரர்கள் மூலம் சுமார் ரூ.1,000 கோடியை இந்திய அரசியல்வாதிகள் ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இவ்விவகாரத்தில், பி.ஜே.பி மூத்த தலைவர் அத்வானி, சுக்லா, ஷிவ் சங்கர், ஷரத் யாதவ், பல்ராம் ஜாக்கர், மதன் லால் குரானா உள்பட பலர்மீது குற்றம் சாட்டப்பட்டது. போதுமான ஆதாரங்கள் இல்லாததால், இவ்வழக்கில் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை.
பங்குச் சந்தை ஊழல்:
'பிக் புல்' என்று அழைக்கப்பட்ட பங்குச் சந்தை தரகர் ஹர்ஷத் மேத்தா, போலி வங்கி ஆவணங்களின்மூலம் பங்குச் சந்தையில் சுமார் 4,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷத் மேத்தா மீது, அவர் சாகும் (2001) வரை வழக்கு நடைபெற்றது. அவரது மரணத்துக்குப் பின்னர் இவ்வழக்கு கைவிடப்பட்டது.

கதவுடன் பரேக் என்ற பங்குச் சந்தை தரகர், க்ளோபல் ட்ரஸ்ட் வங்கி மற்றும் மாதவ்புரா மெர்க்கண்டைல் கூட்டுறவு வங்கி ஆகிய வங்கிகளின் பங்குகளை மார்க்கெட்டில் சுழலவிட்டுக் கொண்டிருந்தார். அப்படி இருக்கும்போது, 1992-ம் ஆண்டில் கனரா வங்கியிலிருந்து ரூ.48 கோடியைச் களவாடியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அந்தக் குற்றத்திற்காக அவர் கைதுசெய்யப்பட்டார். மேலும், அவருக்கு இந்தியப் பங்கு வணிகத்தில் ஈடுபட 2017-ம் ஆண்டு வரை தடை விதிக்கப்பட்டது.
கால்நடைத் தீவன ஊழல்:
1996-ம் ஆண்டு, பீகார் மாநில முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது, கால்நடைகளுக்குத் தீவனங்கள் வாங்கியதாகப் போலி ரசீதுகள் தயாரித்து சுமார் 950 கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த லாலு பிரசாத், முக்கியக் குற்றவாளி எனப் புகார் கூறப்பட்டது. லாலு ஆட்சியிலிருந்தபோது அவரது வீட்டில் சிபிஐ சோதனை நடந்தது.

1997-ம் ஆண்டு, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு கைது செய்யப்பட்டதை அடுத்து, மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார் லாலு பிரசாத். இந்த ஊழல் சம்பந்தப்பட்ட நான்கு வழக்குகளிலும், லாலு குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நான்காவது வழக்கில், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 60 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டுமென்றும் நீதிமன்றம் தீர்ப்பும் வழங்கியது.
வியாபம் ஊழல்:
மத்தியப்பிரதேசத்தில் தொழில் முறை தேர்வுகளுக்கான வாரியம், 'வியாபம்'. வியாபம் மூலம் நடக்கும் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாகச் சர்ச்சை எழுந்தது. தொழிற்கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெற்றிருப்பது அம்பலமானது. பல இடங்களில் நுழைவுத் தேர்வுகளை மாணவர்களுக்குப் பதிலாக போலியான நபர்கள் எழுதினர்.

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், தகுதியற்ற மாணவர்களுக்கு இடமளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. அதிகாரிகள், அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. பல ஆண்டுகளாக நடந்த வியாபம் மெகா ஊழலில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பெயரும் அடிபட்டது. இந்த வழக்கில் 2,000 பேருக்கு மேல் கைதான நிலையில், 49 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கு:
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு, இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 1991 முதல் 1996 வரை தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி நடந்தது.

வருமானத்துக்கு மீறி சொத்துக்குவிப்பு, ஸ்பிக் பங்கு விற்பனை, நிலக்கரி ஊழல், டான்ஸி நிலம், கலர் டிவி ஊழல், சுடுகாட்டுக்கூரை ஊழல் எனப் பல ஊழல்கள் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கலர் டிவி ஊழல் வழக்கில் ஜெயலலிதா கைதுசெய்யப்பட்ட நிலையில், ஊழல் வழக்குகளால் 2 முறை முதல்வர் பதவியை இழந்தார், ஜெயலலிதா.
ரஃபேல் ஊழல்:
காங்கிரஸ் ஆட்சியின்போது, கடந்த 2012-ம் ஆண்டு பிரான்ஸிடம் இருந்து 126 போர் விமானங்கள் வாங்க இந்தியா முடிவு செய்திருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் தோல்வியடைந்து, மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைத்த பிறகு, முன்பிருந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்து அறிவிப்புகள் வெளியாயின. இதில் முந்தைய அரசு, ஒரு விமானத்தை வாங்கவிருந்த விலை, சுமார் ரூ. 526 கோடி. இந்த அரசு வாங்க நிர்ணயித்த தொகை, ரூ. 1,670 கோடி!

மத்திய அரசு செய்திருந்த இந்த ஒப்பந்தத்தில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இதுதொடர்பாக இந்திய அரசிடம் விளக்கம் கேட்டது. ரஃபேல் விமான ஒப்பந்த நடவடிக்கை, விலை நிர்ணயம் ஆகியவற்றில் முறைகேடு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சீராய்வு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, விசாரணை நடந்துவருகிறது.