Published:Updated:

உதயநிதி - கனிமொழி... பிரித்துப் பார்த்து ‘திரிபுவாதம்’ செய்யாதீர்கள்!

தங்கம் தென்னரசு
பிரீமியம் ஸ்டோரி
தங்கம் தென்னரசு

- தடதடக்கிறார் தங்கம் தென்னரசு

உதயநிதி - கனிமொழி... பிரித்துப் பார்த்து ‘திரிபுவாதம்’ செய்யாதீர்கள்!

- தடதடக்கிறார் தங்கம் தென்னரசு

Published:Updated:
தங்கம் தென்னரசு
பிரீமியம் ஸ்டோரி
தங்கம் தென்னரசு

`தேர்தல் தோல்விகள், தலைமைப் பிரச்னை, ரெய்டு, வழக்கு’ எனத் திரும்பிய பக்கமெல்லாம் பிரச்னைகளோடு அ.தி.மு.க திண்டாடிக்கொண்டிருக்கும்போது, `தேர்தல் வெற்றி, புத்தக வெளியீடு, 69-வது பிறந்தநாள், இளைஞர் அணியில் மகளிர் சேர்க்கை’ என உற்சாகத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறது தி.மு.க. இந்தச் சூழலில், தமிழகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பேசினோம்...

“முன்னாள் சபாநாயகர் மற்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தி.மு.க அரசு கைதுசெய்திருக்கும் விதம் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறதே?’’

“இந்த விவகாரத்தில், விமர்சனம் செய்கிற வகையில் எந்த விஷயமும் இல்லையே... ஜெயக்குமார், வீட்டுக்குச் சென்ற காவல்துறை, வழக்கு குறித்த விவரங்களை அவருக்கு வாசித்துக் காட்டி, ‘கைதுசெய்வதாக’க் கூறுகிறார்கள். அவரும் காவலர்களோடு நடந்து சென்று காரில் ஏறுகிறார். மற்றபடி மனித உரிமை மீறல் என்று சொல்லக்கூடிய வகையில், குண்டுக்கட்டாக யாரும் அவரைத் தூக்கிச் செல்லவில்லையே... ஜெயலலிதா தலைமையிலான முன்னாள் அ.தி.மு.க அரசு, கலைஞரைக் கைதுசெய்யும்போது நடைபெற்றதுபோல், கண்ணியக்குறைவான செயல் எதுவும் நடைபெறவில்லையே!’’

“சிறையிலிருந்து வெளிவர முடியாதபடி, அடுத்தடுத்து ஜெயக்குமார் மீது வழக்குகள் பாய்வது, பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார்களே?’’

“பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்வதற்கு இதில் என்ன இருக்கிறது? வழக்கு தொடுக்கும் அளவுக்கான காரியங்களை அவர் செய்திருக்கிறார். அதன் அடிப்படையில்தான் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. முகாந்திரமே இல்லாமல் வழக்கு தொடுத்தால்தான் அது பழிவாங்கும் நடவடிக்கை. அரசியல்வாதிகள் என்றாலே, இது போன்று பல்வேறு வழக்குகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்தான். இது பழிவாங்கும் நடவடிக்கையென்றால், கடந்தகாலத்தில், எங்கள்மீது அ.தி.மு.க-வினர் வரிசையாகத் தொடுத்த வழக்குகளெல்லாம் பழிவாங்கும் நடவடிக்கைகள்தான் என்று ஜெயக்குமாரே ஒப்புக்கொள்கிறாரா?’’

“முதல்வரின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், சந்திரசேகர ராவுக்கு அழைப்பில்லையா அல்லது அவர்கள் வரவில்லையா?’’

“இது புத்தக வெளியீட்டு விழா. எனவே, குறிப்பிட்ட தலைவர்களை மட்டுமே அழைத்திருக்கிறார்கள். அவர்களும் தவறாது கலந்துகொண்டிருக்கிறார்கள். மேடையில், அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தாலே இது தெரியும்.’’

“காங்கிரஸ் தவிர்த்த தேசியக் கூட்டணியைக் கட்டமைக்க முயன்றுவரும் தலைவர்கள், ‘ராகுல் காந்தி கலந்துகொள்ளும் விழாவில் பங்கேற்க விரும்பவில்லை’ என்கிறார்களே?’’

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. இது புத்தக வெளியீடு எனும் இலக்கிய விழா. எனவே, இதை முழுமையான அரசியல் மேடையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கலைஞர் நினைவு விழா, சிலைத் திறப்பு விழாவுக்குச் சிலரை அழைத்தோம். ‘சமூகநீதிக் கூட்டமைப்பு’க்காக அகில இந்திய அளவிலான அனைத்துத் தலைவர்களுக்கும் கடிதம் எழுதி அழைப்பு விடுத்திருக்கிறோம். எனவே எத்தனையோ விழாக்கள் கொண்டாடுகிறோம். எல்லா விழாக்களுக்கும் எல்லோரையும் அழைப்பதில்லை. நாம் அழைத்தும் அவர்கள் கலந்து கொள்ளாவிட்டால்தான் பிரச்னை. அப்படி எந்தப் பிரச்னையும் இதில் இல்லை.’’

உதயநிதி - கனிமொழி... பிரித்துப் பார்த்து ‘திரிபுவாதம்’ செய்யாதீர்கள்!

“தேர்தலில் வெற்றிபெற்ற அ.தி.மு.க கவுன்சிலர்கள், தி.மு.க-வில் இணைந்துவருகிறார்களே... இதுதான் தி.மு.க-வுடனான அ.தி.மு.க சங்கமமா?’’

(சிரிக்கிறார்). “இதை நீங்கள் ‘சங்கமம்’ என்று சொல்கிறீர்கள்... நான் ‘இணைப்பு’ என்று சொல்கிறேன். ஏனெனில், அ.தி.மு.க-வினர் அவர்களாகவே விருப்பப்பட்டுத்தான் தி.மு.க-வில் வந்து இணைகிறார்கள். யாரும், யாரையும் கடத்திக்கொண்டு வரவில்லை!’’

“கே.கே.எஸ்.எஸ்.ஆரில் ஆரம்பித்து, செந்தில் பாலாஜி வரையிலாக அ.தி.மு.க-விலிருந்து வந்தவர்களுக்கே தி.மு.க-வில் முக்கியத்துவம் தரப்படுகிறதே ஏன்?’’

“ஒரு கட்சி அல்லது இயக்கம், திறமைகள் எங்கிருந்தாலும் அதைக் கண்டெடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்தவகையில், திறமைகள் எங்கேயிருந்தாலும், அதைக் கட்சிக்கும், நாட்டுக்கும் பயன்படுத்திக்கொள்ளும் முனைப்பு நம் முதலமைச்சரிடம் இருக்கிறது. அதேசமயம், தி.மு.க-வில் நீண்டகாலம் உழைத்து வருபவர்களுக்கும் உரிய அங்கீகாரத்தை, பிரதிநிதித்துவத்தை தலைவர் அளித்தேவருகிறார். எனவே, கட்சியில் அனைவருக்குமே சமச்சீரான முக்கியத்துவம் இருக்கிறதேயொழிய, ‘இவர் வேண்டியவர்; இவர் வேண்டாதவர்’ என்ற பாகுபாடெல்லாம் தி.மு.க-வில் இல்லை!’’

“ஆனால், தி.மு.க இளைஞர் அணியில், புதிதாக மகளிரையும் உறுப்பினராக்கும் முடிவு, உதயநிதி - கனிமொழி இடையே போட்டியை உருவாக்கியிருக்கிறதே?’’

“புதிதாகப் பெண் உறுப்பினர்களை மகளிரணியில் இணைப்பதென்பது, மகளிரணி பொறுப்பாளரின் கடமை. அதேபோல், கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சும் வகையில், இளைஞர் அணியிலும் புதிதாக மகளிர் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான முனைப்பில் உதயநிதி செயல்படுகிறார். ஆக, இருவருமே கட்சிக்குத்தானே பலம் சேர்க்கிறார்கள். எனவே, இதை நீங்கள் தனித்தனியே பிரித்துப் பார்த்து, திரிபுவாதம் செய்யத் தேவையில்லை.’’

“ ‘சென்னை சங்கமம் விழா’வை முடக்கும்விதமாக, ‘நம்ம ஊர் திருவிழா’ நடத்தியதும்கூட கனிமொழியின் அரசியலை ஓரங்கட்டுகிற ஒரு முயற்சிதான் என்கிறார்களே?’’

(சிரிக்கிறார்) “இப்படியெல்லாம் கற்பனையான செய்திகள் உலவுகின்றன என்பதை உங்கள் கேள்விகள் மூலமாகத் தெரிந்துகொள்கிறேன். ‘சங்கமம்’ என்பது ஒரு வாரம் அல்லது பத்து நாள்கள் பொங்கலையொட்டி நடத்தப்படுகிற பிரமாண்ட நிகழ்ச்சி. ஆனால், கடந்த பத்து வருட அ.தி.மு.க ஆட்சியில், நாட்டுப்புறக் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வகையில் எந்த நிகழ்ச்சியுமே நடத்தப்படவில்லை. அதிலும் குறிப்பாக, கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காலகட்டத்தில், நாட்டுப்புற நிகழ்ச்சி நடத்துகிற கலைஞர்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவேதான், ‘நாட்டுப்புறக் கலைகளுக்கு மீண்டும் உயிரூட்ட வேண்டும்’ என்று முதலமைச்சர் கூறினார். அதனடிப்படையில், ‘நம்ம ஊர் திருவிழா’ என்ற புதிய நிகழ்ச்சியை உருவாக்கி நடத்தினோம். மற்றபடி இது குறித்த செய்திகள் எல்லாமே வதந்திதான்!’’