Published:Updated:

கோயம்பேடு விவகாரத்தில் என்ன நடந்தது?! -15 நிமிடம் நீண்ட விளக்கம் கொடுத்த முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னையில் தங்கி பணிபுரிந்த வெளிமாவட்ட ஊழியர்கள், ஊரடங்கு காரணமாக சென்னையை விட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். அவர்களில் சிலரால் தொற்று ஏற்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். மாநில மக்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, ‘தமிழகத்தில் வேளாண் பணிகளுக்கு ஏற்கெனவே தளர்வு அறிவிக்கப்பட்டது. விவசாய விளைபொருள்கள் தடையின்றி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. அத்தியாவசிய பொருள்கள் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் நலம்பெறுகின்றனர்.

கொரோனா
கொரோனா

தமிழக அரசின் தீவிர முயற்சியால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுவருகிறது. சென்னையில் தங்கி பணிபுரிந்த வெளிமாவட்ட ஊழியர்கள், ஊரடங்கு காரணமாக சென்னையை விட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். அவர்களில் சிலரால் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சென்னை, அதிகமான மக்கள் வசிக்கும் பகுதியாகும். ஆசியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டாக கோயம்பேடு திகழ்ந்துவருகிறது. வியாபாரிகள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் என சுமார் 20 ஆயிரம் பேர் பணிபுரிந்துவருகின்றனர். கோயம்பேடு சந்தையை முதலிலேயே வேறு இடத்துக்கு மாற்ற விரும்பினோம். ஆனால், அதற்கு வியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை. கோயம்பேடு பகுதியில் கொரோனா எளிதாகப் பரவும் என அதிகாரிகள் மூலம் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கோயம்பேடு பகுதியிலிருந்து வேறு இடத்துக்குச் சென்றால் நஷ்டம் ஏற்படும் என வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மறுத்தனர். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. துணை முதல்வர், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். வியாபார சங்க நிர்வாகிகளிடம் பேசினார். ஆனாலும் அவர்கள் அங்கிருந்து வெளியேறினால் நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் காரணமாக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.

தலைமைச் செயலகத்தில், வியாபார சங்க நிர்வாகிகளை துணை முதல்வர் அழைத்துப் பேசினார். வேறு இடத்துக்கு நீங்கள் சென்றால்தான் நோய்த்தொற்று பரவலைத் தடுக்க முடியும் எனக் கூறினார். நஷ்டம் ஏற்படும் என்பதால் தற்காலிக மார்க்கெட்டுக்கு செல்ல மறுத்தனர். மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையாளர், வேளாண் துறை செயலாளர் ஆகியோர் நேரடியாகச் சென்று ஆலோசனை வழங்கினர். நோய்த்தொற்று பரவினால் கோயம்பேடு மார்க்கெட்டை முழுவதுமாக மூட நேரிடும் என அறிவுறுத்தப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து தொற்று பரவியதால்தான், கொரோனா தொற்று அதிகரிக்கக் காரணமாகிவிட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டதும், கோயம்பேடு சந்தை மூடப்படுவதாக வியாபாரிகள் சங்கத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்டு தற்போது அங்கு கடைகள் இயங்கிவருகின்றன. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை; அதனால்தான் கொரோனா தொற்று பரவியது என தவறான தகவல்களை சிலர் கூறுகின்றனர். அரசு ஆரம்பத்தில் இருந்தே நடவடிக்கை எடுத்துவந்தது, நஷ்டம் ஏற்படும் என வியாபாரிகள் மறுத்தனர் இதுதான் உண்மை நிலை.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் அதிகமாக பணியாற்றிவருகின்றனர். அவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் கட்டணத்தை அரசே ஏற்கிறது. அதேபோல், வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழகத் தொழிலாளர்களை அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது.

வடமாநில தொழிலாளர்கள்
வடமாநில தொழிலாளர்கள்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீதிவீதியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது. இதன் காரணமாகத்தான் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. படிப்படியாகத் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இயல்பு நிலைக்குத் திரும்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் அரசு சிறப்பாகப் பணியாற்றியதால், வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளியில் செல்லும்போது, மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். அநாவசியமாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வீடு திரும்பியதும் கை, கால்களைக் கழுவ வேண்டும் இதைக் கடைப்பிடித்தால் நோய் பரவலை தவிர்க்க முடியும்.

அரசு ஆம்புலன்ஸ்
அரசு ஆம்புலன்ஸ்

மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் ஏற்படுத்த வேண்டும். பிற மாநிலத்திலிருந்து சரக்கு வாகனத்தை ஓட்டிவரும் டிரைவர்கள் மற்றும் கிளீனர்களை தனிமைப்படுத்த வேண்டும். கோடை காலமாக இருப்பதால், குடிநீர் பிரச்னை ஏற்படாமல் மாவட்ட ஆட்சியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். 10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்குச் சென்று வர சரியான போக்குவரத்து வசதியை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்த வேண்டும்.

தமிழகம் சிறு தொழில்கள் அதிகம் உள்ள மாநிலம். பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் 50 சதவிகித பணியாளர்களுடன் தொழில்களைத் தொடங்கலாம். அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி தொழில்களைத் தொடங்கலாம். தொழிலாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தொழிலாளர்கள், பரிசோதனை செய்த பின்னரே பணிக்கு அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இன்றைய பிரஸ் மீட்டில், பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 15 நிமிடங்கள் கோயம்பேடு விவகாரம் குறித்து மட்டும் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு