Election bannerElection banner
Published:Updated:

பிரதமர் பேச்சு எழுப்பியிருக்கும் சர்ச்சையும் அதன் பின்னணியும்!

மோடி
மோடி

`காலனிய மனப்பான்மைகொண்டவர்களால் இந்திய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. இந்தியத்துவத்துக்காக தியாகம் செய்வர்களுக்கு வரலாற்றில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை’ என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கும் கருத்துகள் சர்ச்சையை எழுப்பியிருக்கின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம், பஹ்ரைச்சில் மகாராஜா சுகல்தேவ் நினைவுச்சின்னம் மற்றும் சித்தவுரா ஏரி மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 16) அடிக்கல் நாட்டினார். மகாராஜா சுகல்தேவ் பெயர் சூட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிக் கட்டடத்தை பிரதமர் திறந்துவைத்தார். அப்போது, `இந்திய வரலாறு என்பது காலனி ஆதிக்கம் அல்லது காலனி மனப்பான்மை கொண்டவர்களால் எழுதப்பட்டது.

இந்திய வரலாறு, சாதாரண மக்கள் தங்கள் நாட்டுப்புறங்களில் வளர்த்து, தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்து வந்தது. இந்தியாவுக்காகவும், இந்தியத்துவத்துக்காகவும் அனைத்தையும் தியாகம் செய்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. வரலாறு படைத்தவர்களுக்கு எதிராக, வரலாற்று ஆசிரியர்கள் இழைத்த அநீதி இப்போது சரிசெய்யப்பட்டுவருகிறது’ என்று பிரதமர் மோடி பேசினார்.

மோடி
மோடி

இந்திய சுதந்திரப் போராட்டம் உள்ளிட்ட இந்திய வரலாறு தொடர்பான நூல்கள் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆதரவு வரலாற்றாளர்களால் எழுதப்பட்டவை என்பது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க தரப்பினரின் நீண்டகால குற்றச்சாட்டு. ஆகவே, அவற்றை மாற்றி எழுதுவதற்கான முயற்சியில் கடந்த காலங்களில் மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது பா.ஜ.க தரப்பு ஈடுபட்டது. அப்போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது, மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், புதிதாக வரலாற்றை எழுதுவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. தற்போது, இந்திய வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய அவசியம் குறித்து பிரதமர் பேசியிருக்கிறார். இதுவும் பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து வலதுசாரி சிந்தனையாளரான ஸ்ரீராம் சேஷாத்ரியிடம் பேசினோம்.

``சரியான வரலாறு, உண்மையான வரலாறு இங்கு சொல்லித்தரப்படவில்லை. கஜினி முகமது 17 முறை படையெடுத்து வந்தார் என்று வரலாற்றில் படித்திருக்கிறோம். ஆனால், 17 முறையும் அவரை யார் விரட்டியடித்தார் என்ற விவரம் நம் வரலாற்றில் இல்லை. அதேபோல, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி ஒரு சில விஷயங்கள் பாடப்புத்தகத்தில் இருக்கின்றன. ஆனால், `சுதந்திர இந்தியா’ என்று 1943-ல் ஸ்தாபனம் செய்து, `நான்தான் முதல் பிரதமர்’ என்று சொல்லி கொடியேற்றிய வரலாறு பலருக்கும் தெரியாது. ஆங்கிலேயர்கள் பற்றிப் பேசும்போது ராபர்ட் கிளைவ் செய்தவை குறித்து விலாவாரியாக சொல்லித்தரப்படுகிறது. ஆனால், நம் பாரம்பர்யம் என்ன என்பது பற்றி நம் வரலாற்றில் இல்லை.

ஸ்ரீராம் சேஷாத்ரி
ஸ்ரீராம் சேஷாத்ரி

நம் நாட்டின் மீது படையெடுத்தவர்கள் இங்கிருந்து எவ்வளவு கொள்ளையடித்துச் சென்றார்கள் என்பது போன்ற உண்மைகளை நாம் சொல்லித்தரவில்லை. ஓர் அடிமை ஆட்சியாகத்தான் நாம் சொல்லிக்கொடுத்திருக்கிறோம். முகலாயர்கள் எத்தனையோ செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் செய்த கொடுமைகள் பற்றியும் நாம் சொல்லித் தர வேண்டும். திப்பு சுல்தானும், ஹைதர் அலியும் எத்தனை கிராமங்களை எரித்தார்கள், மதமாற்றம் செய்தார்கள் என்ற வரலாற்றை சொல்லித் தர வேண்டும். ஆனால், இது போன்ற உண்மைகள் சொல்லித்தரப்படுவதில்லை.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் பற்றி இரண்டு பாடங்களுடன் முடிந்துவிடுகிறது. அவர்களைப் பற்றிச் சொல்லிக்கொடுக்க ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. தாஜ்மஹால் பற்றிச் சொல்லித் தரும் நாம், நம் ஊரில் அமைந்திருக்கும் தஞ்சை பெரிய கோயில் பற்றிச் சொல்லித் தருவதில்லை. நம் பாரம்பர்யம் நம் மக்களுக்கு போய்ச் சேர வேண்டும் என்கிற அக்கறையே நம்மிடம் இல்லை. கொனார்க் கோயிலை எப்படி வடிவமைத்தார்கள் என்பது பற்றி நம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை. மொகலாயர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி ஆகியவை பற்றித்தான் அதிகமாகச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

பர்மாவில் தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால், அவை தென்னிந்தியாவுக்கு வந்து சேரும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்... எவ்வளவு பெரிய மரக்கலன்கள் மூலம் யானைகளைப் போருக்கு கொண்டு சென்றார்கள் என்பதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்... அந்த வரலாற்று உண்மைகளை நம் மக்களுக்கு ஏன் சொல்லித் தரவில்லை. மகாராஜா சுகல்தேவ் பற்றிப் பிரதமர் பேசினார். மகாராஜா சுகல்தேவ் பற்றி இந்தியாவில் எத்தனை பேருக்குத் தெரியும்?

தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்

ஆரியவழி என்றெல்லாம் தமிழ்நாட்டில்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டைத் தாண்டி எந்த எம்.பி-யும் அது பற்றிப் பேசுவதாகத் தெரியவில்லை. ஆரிய வந்தேறி, கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்று சொல்வதற்கெல்லாம் எந்தச் சான்றும் இல்லை. மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் குழு 12,000 ஆண்டுகளுக்கு முன்பாக என்று ரெஃபரன்ஸ் பாயின்ட் வைத்திருக்கிறது. அப்படியென்றால், 12,000 ஆண்டுகள் வரையில் அறிவியல்பூர்வமான சான்றுகள் நம்மிடம் இருக்கின்றன.

அதிலிருந்து நம்முடைய பாரம்பர்யம், இலக்கிய வரலாறு, அறிவியல் வரலாறு எப்படி இருந்திருக்கின்றன என்பதைப் பார்கக வேண்டும். அதிலிருந்து ஆராய்ச்சி செய்து நமக்கு சொல்லித் தர வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இதில் வேத காலத்தைத் திணிக்கிறார்கள் என்றால் பரவாயில்லை. ஆங்கிலம் திணிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக முகலாய ஆட்சி திணிக்கப்பட்டிருக்கிறது. வேத காலம் வரை தெரிந்திருக்கிறது என்கிறபோது, அது திணிக்கப்படட்டும். அதைத் தெரிந்துகொள்ளலாமே... மற்றவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளும்போது, இதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான் என் கேள்வி” என்றார் ஸ்ரீராம் சேஷாத்ரி.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம்.

``வரலாறு படைத்தவர்களுக்கு வரலாற்றாளர்கள் அநீதி இழைத்துவிட்டார்கள் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். அப்படிச் சொல்வதற்கும், அப்படியொரு முடிவுக்கு வருவதற்கும் இவர் என்ன வரலாற்றாளரா என்பது முக்கியமான கேள்வி. வரலாறு பற்றிப் பேசுவற்கு வரலாற்று ஞானமும், வரலாறு பற்றிய கற்றலும் அவசியம். இவர், பிரதமர் என்ற அந்தஸ்த்தை வைத்துக்கொண்டு, வரலாற்றாளர்கள் மீது இப்படியொரு குற்றச்சாட்டைச் சுமத்துகிறார். இது ஏற்புடையதல்ல.

வலதுசாரிகளும் ஆர்.எஸ்.எஸ் நிலைப்பாடு கொண்டவர்களும்தான் இப்படிப்பட்ட கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, அவர்களின் கருத்துப்படி இந்திய வரலாறு எழுதப்படவில்லையாம். ஆனால், சர்வதேசப் புகழ்பெற்ற வரலாற்றாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் போன்றோர் முன்வைத்திருக்கும் வரலாற்றைத்தான், இவர்கள் விமர்சிக்கிறார்கள்.

அருணன்
அருணன்

ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் அல்ல. அவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள். அவர்கள் வருவதற்கு முன்பே இங்கு சிந்துவெளி நாகரிகம் இருந்தது. அது மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம். இவர்களோ, ஆரியர்களின் ரிக் வேதம்தான் பழைமையானது என்கிறார்கள். ரிக் வேதம் சொல்கிற நாகரிகத்துக்கும், சிந்துவெளி நாகரிகத்துக்கும் சம்பந்தமில்லை. இது போன்ற விஷயங்களைவைத்துத்தான் வரலாற்றாளர்களை அவர்கள் விமர்சிக்கிறார்கள்.

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் வெளியிலிருந்து வந்தவர்கள் என்றும், அவர்கள் அந்நியர்கள் என்றும் இவர்கள் சொல்லும்போது, நீங்கள் மட்டும் எங்கிருந்து வந்தவர்கள் என்ற கேள்வி இவர்களை நோக்கி வைக்கப்படுகிறது. ஆகவேதான், வரலாற்றையே மாற்றி எழுதுகிறார்கள். ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்றும், சிந்துவெளி நாகரிகம் என்பது ஆரியர்களுக்குச் சொந்தம் என்றும் சொல்கிறார்கள். அதை அதிகாரபூர்வமான வரலாறாக மாற்றுவதற்கு முயல்கிறார்கள். அதைத்தான் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

சசிகலா தேர்தலில் போட்டியிட சட்டரீதியிலான முயற்சிகள் பலனளிக்குமா? #TNElection2021

வரலாற்றை மாற்றி எழுதுவதற்காக மத்திய பா.ஜ.க அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அதில் இடம்பெற்றிருப்பவர்கள் பெரும்பாலோர் சம்ஸ்கிருதப் பண்டிதர்கள். பொய்யான வரலாற்றை உண்மையான வரலாறு என்று எழுதி பாடப்புத்தகங்களில் சேர்க்கப்போகிறர்கள். மிகப்பெரிய வரலாற்று மோசடி, சித்தாந்த மோசடி செய்யப்பார்க்கிறார்கள். அப்படியொரு குழு அமைக்கப்பட்டதற்கு எங்களைப் போன்றவர்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். அதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை தொகுதி எம்.பி-யான சு.வெங்கடேசன் உட்பட 32 எம்.பி-கள் அந்தக் குழுவைக் கலைக்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்போதெல்லாம் அது பற்றி பிரதமர் எதுவும் பேசவில்லை.

இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு பன்மைத்தன்மை வாய்ந்தது. இங்கு பல நாகரிகங்கள் உருவாகின. வெளியிலிருந்து வந்தன. ஒன்றோடு ஒன்று கலந்தன. ஆரியர்களை யாரும் வெறுக்கவில்லை. ஆனால், ஆரிய வரலாறு, ஆரிய கலாசாரம் ஆகியவை மட்டும்தான் இந்திய கலாசாரம் என்று சொல்வதைத்தான் எதிர்க்கிறோம். அதற்கு முன்பே திராவிடக் கலாசாரம் இங்கு இல்லையா? இப்போது ஆரிய மொழியான சம்ஸ்கிருதம் வட மாநிலங்களில் இருக்கிறது. திராவிட மொழி என்பது தனி மொழிக் குடும்பம். அதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதிலிருந்து வந்த மொழிகள் தெற்கே இருக்கின்றன. பல மொழிவழி தேசிய இனங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் அவர்கள் மறுக்கிறார்கள். வேதகால நாகரிகம் மட்டும்தான் நிஜமான நாகரிகம் என்று சொல்கிறார்கள். அதைப் பிறர் மீதும் திணிக்கிறார்கள்.

கீழடி
கீழடி

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் ஒற்றைப் பண்பாடு என்று சொல்லிக்கொண்டிருப்பது, வேதப் பண்பாடு மற்றும் ஆரியப் பண்பாட்டைத்தான். அதற்கு வரலாற்று ஆதாரமாக இவர்களாக இட்டுக்கட்டிக் கொடுக்கப்போகிறார்கள். ஒற்றைப் பண்பாடுதான் வேதப்பண்பாடுதான் என்றால், கீழடி போன்ற அகழாய்வுகளை இவர்கள் புறக்கணிப்பார்கள். அப்படியே கீழடி அகழ்வாய்வு முடிவுகள் வந்தாலும், அவை வேத நாகரிகத்துடன் சேர்ந்தவை என்று சொல்லிவிடுவார்கள்.

கீழடி என்பது தமிழர்களின் சங்க இலக்கியப் பண்பாடாக வெளிப்படுகிறது. ஏற்கெனவே, பூமிக்கு வெளியே இலக்கியமாக அது இருந்தது. இப்போது பூமிக்கு அடியிலிருந்து பௌதிகப் பொருளாக அது வெளிப்படுகிறது. அதனால்தான் மத்திய பா.ஜ.க அரசு கீழடி ஆய்வில் ஆர்வம் காட்டவில்லை. தமிழகத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு 7-வதுகட்ட அகழ்வாய்வை தமிழக அரசுதான் செய்துகொண்டிருக்கிறது. இது போன்ற ஆய்வுகளை மத்திய பா.ஜ.க அரசு காலி செய்ய முயலும். பிரதமரின் பேச்சிலிருந்து அது தெரிகிறது” என்றார் பேராசிரியர் அருணன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு