Published:Updated:

அமைச்சர் மீது மை தெளிப்பு; மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்குள் மை பேனா கொண்டுவரத் தடை!

சந்திரகாந்த் பாட்டீல்

மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்குள் மை பேனா கொண்டுவர தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் மீது மை தெளிப்பு; மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்குள் மை பேனா கொண்டுவரத் தடை!

மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்குள் மை பேனா கொண்டுவர தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
சந்திரகாந்த் பாட்டீல்

மகாராஷ்டிரா உயர்கல்வித்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் சமீபத்தில் புனேயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அளித்த பேட்டியில், ``அம்பேத்கர் பிச்சை எடுத்துதான் பள்ளி நடத்தினார்" என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதோடு அவர் மீது சிலர் மை தெளித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர் கைதுசெய்யப்பட்டார். அதோடு அமைச்சருக்கு பாதுகாப்புக்கு நின்ற 10 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேற்கொண்டு இது போன்று நடந்துவிடக்கூடாது என்பதற்காக சந்திரகாந்த் பாட்டீல் மீண்டும் புனே வந்தபோது முகத்துக்கு பிளாஸ்டிக் முகக்கவசம் அணிந்து கொண்டு வந்திருந்தார். நேற்று நாக்பூரில் தொடங்கிய மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் குளிர்காலக்கூட்டத்தொடரிலும் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. சட்டமன்றத்திலும் யாராவது சந்திரகாந்த் பாட்டீல் மீது மை தெளித்துவிடக்கூடாது என்பதற்காக சட்டமன்றத்துக்குள் வருபவர்கள் மை பேனா கொண்டு வருகிறார்களா என்பதை போலீஸார் சோதித்த பிறகே உள்ளே அனுமதித்தனர். இதில் எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. மற்ற யாரும் மை பேனாவுடன் அவைக்குள் வர தடைவிதிக்கப்பட்டது. இந்தப் பிரச்னை சட்டமன்றத்தில் எதிரொலித்தது. மை கண்ணில் பட்டால் புற்றுநோய் வரும் என்று சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

உடனே, ``இதுவரை அப்படி யாரும் கண்ணில் மை பட்டு புற்றுநோய் வந்து உயிரிழக்கவில்லை" என்றும், ``அமைச்சர் சுய புத்தியை இழந்துவிட்டார்" என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். ஷிண்டே அரசில் ஊழல் நிறைந்திருப்பதாக கூறி முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஏக்நாத் ஷிண்டே இதற்கு முந்தைய ஆட்சியில் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது குடிசைவாசிகளுக்கு வீடுகள் கட்ட ஒதுக்கிய நிலத்தை தனியாருக்கு ஒதுக்கியது தொடர்பான வழக்கு இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தனர்.