Published:Updated:

33 முதல் 76 சதவிகிதம் வரை வீழ்ச்சி! - பொருளாதார மந்தநிலையால் சரிந்த உள்ளாடை விற்பனை

ஆ.பழனியப்பன்

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை காரணமாக உள்ளாடைகளின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதார சரிவு
பொருளாதார சரிவு

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை குறித்து கடந்த சில வாரங்களாக பெரும் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. கடந்த 70 ஆண்டுகளில் இப்படியொரு பொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்ததில்லை என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியிருக்கிறார். பொருளாதார மந்தநிலை காரணமாக ஆட்டோமொபைல், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கானோர் வேலையிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதாரச் சரிவு
பொருளாதாரச் சரிவு

அதிக மதிப்பு கொண்ட பொருளாதார நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 7-வது இடத்துக்குச் சென்றுவிட்டது. 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. 22 - 24 சதவிகிதமாக இருந்த இந்திய ஏற்றுமதி 11 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. நிலக்கரி, ஸ்டீல், சிமென்ட் உள்ளிட்ட முக்கியமான எட்டுத் துறைகளின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அரசின் முதலீடும் தனியார் முதலீடும் குறைந்துவிட்டன.

பொருளாதார மந்தநிலை காரணமாக விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நட்சத்திர விடுதிகளில் தங்குபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் சுமார் 55 சதவிகித அறைகள் காலியாகக் கிடப்பதாக ஹோட்டல்கள் சங்கத்தினர் கூறுகின்றனர். கார் விற்பனை, வீடு விற்பனை, நில விற்பனை ஆகியவையும் சரிந்துள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விற்பனையும் வெகுவாக சரிந்துள்ளது.

நட்சத்திர விடுதி
நட்சத்திர விடுதி

இவற்றுடன், உள்ளாடைகளின் விற்பனையும் சரிந்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. உள்ளாடை விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவு, நாட்டின் பொருளாதார மந்தநிலையை உணர்த்துவதாகப் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியாவின் மொத்த ஆடைகள் சந்தையில், ரூ.27,931 கோடியுடன் 10 சதவிகிதத்தை உள்ளாடைகள் கொண்டிருக்கின்றன. கடந்த ஓராண்டில், இந்தியாவில் உள்ள முன்னணி உள்ளாடைகள் உற்பத்தி நிறுவனங்களில் 33 சதவிகிதம் முதல் 76 சதவிகிதம் வரை வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.