Published:Updated:

``சின்னப் பசங்களை ஆடவிட்டு வேடிக்கை காட்டுறீங்களா?” - கொதித்த ஓ.பி.எஸ்; ஆவேச எடப்பாடி!

ஓ.பி.எஸ் - எடப்பாடி

சுதந்திர தினவிழாவில் சமாதான ஓட்டப்பந்தய நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறது அ.தி.மு.க. இரண்டு தலைவர்களின் வீட்டிலும் பேசப்பட்டவை என்னென்ன... அவற்றின் பின்னணித் தகவல்கள் என்னென்ன?

``சின்னப் பசங்களை ஆடவிட்டு வேடிக்கை காட்டுறீங்களா?” - கொதித்த ஓ.பி.எஸ்; ஆவேச எடப்பாடி!

சுதந்திர தினவிழாவில் சமாதான ஓட்டப்பந்தய நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறது அ.தி.மு.க. இரண்டு தலைவர்களின் வீட்டிலும் பேசப்பட்டவை என்னென்ன... அவற்றின் பின்னணித் தகவல்கள் என்னென்ன?

Published:Updated:
ஓ.பி.எஸ் - எடப்பாடி

கொரோனாவால் சுதந்திர தினவிழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இல்லாத குறையை, அமைச்சர்கள் நிகழ்த்திய `வீட்டுக்கு வீடு தாவுதல்’ நிகழ்ச்சி நிவர்த்தி செய்துவிட்டது. ஓ.பி.எஸ் வீட்டுக்கும் எடப்பாடி வீட்டுக்கும் இடையே மினி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை அமைச்சர்கள் நடத்தி முடித்திருக்கிறார்கள். ஆட்சி முடியும் தறுவாயில், முதல்வராக தான் ஏற்றப்போகும் கடைசி சுதந்திர தினக் கொடியை இவ்வளவு டென்ஷனோடு ஏற்றுவோம் என எடப்பாடியும் கருதியிருக்க மாட்டார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க-வில் நடைபெறும் ‘யார் முதல்வர் வேட்பாளர்?’ கண்ணாமூச்சியைத் தொடங்கிவைத்தவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. `எடப்பாடியார் என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்துவிட்டு, களத்தைச் சந்திப்போம். எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம். களம் காண்போம். வெற்றி கொள்வோம். 2021-ம் நமதே’ என அவர் போட்ட ட்வீட் சர்ச்சை வெடியைக் கொளுத்திப் போட்டது. அடுத்தடுத்து அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் என ஆளுக்கொரு கருத்தை முன்வைக்க, அ.தி.மு.க-வின் வெப்பநிலை கொரோனா காய்ச்சலைவிட எகிறியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி அ.தி.மு.க தலைமையகத்தில், கட்சியின் சட்ட வல்லுநர்களுடன் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். கொரோனா காலத்தில் தேர்தல் பிரசாரத்தை வடிவமைப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை கேட்டது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அத்துடன், `யார் முதல்வர் வேட்பாளர்?’ என்கிற சர்ச்சை குறித்தும் விவாதித்துள்ளனர். இதைத் தொடர்ந்துதான், `கட்சியினர் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். தாய்வழி வந்த தங்கங்களெல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே...’ என்று ஓ.பி.எஸ்-ஸிடமிருந்து ட்வீட் வந்தது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

அடுத்தநாளே, ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் எடப்பாடி, ஓ.பி.எஸ் இருவரையும் ஒன்றாக மேடையேற்றி சமாதானம் செய்துவைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. `அப்பாடா... ஓய்ந்தது சண்டை!’ எனக் கரைவேட்டிகள் மூச்சுவிட்ட அடுத்த சில மணி நேரங்களில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்னொரு பஞ்சாயத்தை ஆரம்பித்துவைத்தார். கடம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜூ, ``2021-ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியே தேர்தலைச் சந்திப்போம்’’ என்று கூறியதை ஓ.பி.எஸ் தரப்பு ரசிக்கவில்லை. அன்று இரவே `அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ்’ என்கிற போஸ்டரை ஒட்டச் சொல்லி, தேனிக்கு உத்தரவு பறந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று நடந்த சமாதானப்படலம் குறித்துக் கட்சியின் சீனியர் ஒருவரிடம் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"எடப்பாடி பழனிசாமியின் கொங்கு மண்டல விவகாரங்களுக்குள் ஓ.பி.எஸ் தலையிடுவதில்லை. அதேபோல, தன்னுடைய ஆளுகைக்குள் வரும் தென் மண்டலத்துக்குள் வேறு யாரும் மூக்கை நுழைக்கக் கூடாது என்பது அவரது பாலிசி. 2017-ல் அணிகள் ஒன்றிணைந்தபோதே இதுபற்றியெல்லாம் விரிவாகப் பேசப்பட்டு, ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ இருவரையும் கையில் எடுத்துக்கொண்டு தென் மாவட்டங்களில் தனக்கெதிராக எடப்பாடி அரசியல் செய்வதாக ஓ.பி.எஸ் கொதித்துப் போயிருக்கிறார். நேற்று அமைச்சர் வேலுமணியின் ஏற்பாட்டில் இரு தரப்பும் சமாதானம் ஆகிவிட்ட நிலையில், கடம்பூர் ராஜூ கொளுத்திய வெடியால் மீண்டும் தீ பற்றிக்கொண்டது.

சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்
சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்

மூன்று நாள்களுக்கு முன்னரே ஏற்பாடு செய்திருந்த `நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ்’ என்கிற போஸ்டரை, ஓ.பி.எஸ் குடும்ப உறுப்பினர் ஒருவரின் உத்தரவின்பேரில் 14-ம் தேதி இரவு தேனி முழுக்க ஒட்டினர். நேற்று காலை கொடியேற்றும் நிகழ்வுக்காக முதல்வர் கோட்டைக்கு கிளம்பும்போது, இவ்விஷயம் உளவுத்துறை மூலமாக அவர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. கடுகடுப்போடு கிளம்பிய முதல்வர், கடும் டென்ஷனோடுதான் கொடியை ஏற்றினார். அதே டென்ஷன் ஓ.பி.எஸ்-ஸுக்கும் இருந்தது. போதாத குறைக்கு, `மக்களின் அன்பும் ஆதரவும் பெற்ற நான், மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறேன். மக்களுக்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டே இருப்பேன்...’ என்றெல்லாம் பேசியதை ஓ.பி.எஸ் ரசிக்கவில்லை. `இவரு மட்டும்தான் மக்களுக்காக உழைக்குறாரா?’ என்று வெளிப்படையாகவே அருகிலிருந்த அமைச்சர் ஒருவரிடம் கடுகடுப்புடன் கமென்ட் அடித்தார். அந்த அமைச்சரால் பதிலுக்கு எதுவும் பேச முடியவில்லை.

சுதந்திர தினவிழா முடிந்ததும் வீட்டுக்குக் கிளம்பிய முதல்வர், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணியை அழைத்து, `நேத்து சமாதானம் செஞ்சுவெச்சீங்க... இன்னிக்கு போஸ்டர் முளைச்சிருக்கு பாத்தீங்களா?’ எனக் கொதித்துவிட்டு புறப்பட்டுவிட்டார். ஜெயலலிதாவுக்கு 30 டிகிரியில் வளைந்து வணக்கம் போடுவதைப்போல சில நிர்வாகிகள் எடப்பாடிக்கும் கும்பிடு போட்டதைப் பார்த்து ஓ.பி.எஸ்-ஸுக்கு பற்றிக் கொண்டது. யாருடனும் பேசாமல் `விருட்’டென வீட்டுக்குக் கிளம்பிவிட்டார். `இது என்னடா வம்பாப் போச்சு?’ எனக் குழப்பமடைந்த அமைச்சர்கள், அமைச்சர் ஜெயக்குமார் அறையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில், இரு தரப்பிலும் பேசி சுமூகமான முடிவை ஏற்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. பல அமைச்சர்களுக்கும் அவரவர் துறை அலுவலகங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவறையெல்லாம் ரத்து செய்துவிட்டு, இரு தரப்பையும் சமாதானம் செய்ய கிரீன்வேஸ் சாலைக்குப் புறப்பட்டனர்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

முதலில் ஓ.பி.எஸ்-ஸின் பொதிகை இல்லத்துக்கு அமைச்சர்களின் கார் பறந்தது. எதுவும் அறியாதவர்போல, `வாங்கப்பா, என்ன எல்லாரும் ஒண்ணா வந்திருக்கீங்க?’ என ஓ.பி.எஸ் அமைச்சர்களை வரவேற்றார். சூடாக இஞ்சி டீயும் ஸ்நாக்ஸும் பறிமாறப்பட்டன. `உங்களுக்குத் தெரியாததாண்ணே... இப்படி ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு இருந்தா, கட்சிக்குத்தானே அவமானம்...’ என விவாதத்தை அமைச்சர் தங்கமணி முதல் ஆளாக ஆரம்பித்தார். `யாருங்க கட்சியை அவமானப்படுத்துறது... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ட்வீட் போடச் சொன்னது யாரு... எனக்கு எதுவும் தெரியாதுனு நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா? கட்சியோட ஒருங்கிணைப்பாளர் நான். ஆனா, என்னையவே அனுமதி இல்லாம மாவட்டத்துக்குள்ள வரக் கூடாதுனு ஆர்.பி.உதயகுமார் சொல்றாப்ல. இதையெல்லாம் பார்த்துக்கிட்டு நான் சும்மா இருக்கணுமா? ராஜேந்திர பாலாஜியை மாவட்டப் பொறுப்பாளர் பொறுப்புலருந்து இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள நீக்கணும். அவருக்கு ஓ.கே.வானு கேட்டுச் சொல்லுங்க’ என்று ஓ.பி.எஸ் ஆவேசமாகியுள்ளார்.

`எல்லாத்தையும் பேசித் தீர்த்துக்கலாம்ணே... சீனியர் நீங்களே இப்படிக் கொதிச்சா நல்லாவா இருக்கும்’ என அமைச்சர் ஜெயக்குமார் சமாதானப்படுத்தவும், ஓ.பி.எஸ் எழுந்துவிட்டார். `சும்மா என்னைய சமாதானப்படுத்துற வேலை வேண்டாம். எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த முதல்வர்னு ராஜேந்திர பாலாஜியைத் தூண்டிவிட்டு ட்வீட் போடவெச்சது மிதுனும் சுனிலும்தான். முதலமைச்சர் பையன்கறதுனால என்ன வேணாலும் பண்ணலாமா... கட்சிக்குள்ள அவங்களுக்கு என்ன வேலை... ரெண்டு சின்னப் பசங்களை ஆடவிட்டு வேடிக்கை காட்டுறீங்களா?’ என டென்ஷனில் கத்த, அமைச்சர்களுக்கே ஒருகணம் வியர்த்துவிட்டது. `இருங்கண்ணே, அவருகிட்டேயே பேசிட்டு வர்றோம்’ என ஓ.பி.எஸ்-ஸிடம் சொல்லிவிட்டு எடப்பாடியின் வீட்டுக்குப் புறப்பட்டனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அங்கு அவர் முகத்தைத் திருப்பிக் வைத்துக்கொண்டு இருந்திருக்கிறார். `கட்சியைக் கட்டுப்பாட்டோட இருக்கச் சொல்லுங்கனு சொன்னா, `தாய் வழி வந்த தங்கங்களெல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே’னு பாட்டுப் பாடுறாரு. `அம்மா அடையாளம் காட்டி நான் நேர்வழியில முதலமைச்சர் ஆனவன். எடப்பாடி பெஞ்சுக்குக் கீழே தவழ்ந்து வந்து முதலமைச்சர் ஆனவர்’னு சொல்ல வர்றாரா? இந்த ஊமைக் குசும்பெல்லாம் வேற எங்கேயாவதுவெச்சுக்கணும். அவர் வீட்டு ஆளுங்க சொல்லித்தானே போஸ்டர் ஒட்டியிருக்காங்க... இது அவருக்குத் தெரியாதா?’ என்று எடப்பாடி ஆவேசமாகவும் அமைச்சர்களால் எதுவும் பேச முடியவில்லை. முதல்வரின் மகன் மிதுனும், அ.தி.மு.க-வின் தேர்தல் ஆலோசகர் சுனிலும் சில தவறான மூவ்களை எடுத்ததே இவ்வளவு பிரச்னைக்கும் காரணம் என முதல்வரிடம் விளக்கப்பட்டது.

முதல்வரைச் சமாதானப்படுத்திய அமைச்சர் வேலுமணி, `நாம எப்போ சறுக்குவோம், மேல ஏறி சவாரி பண்ணலாம்னு காத்துக்கிட்டு இருக்காங்க. இந்த நேரத்துல இதெல்லாம் தேவையா? கட்சியில என்ன முடிவெடுக்குறதா இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் பேசி ஒண்ணா முடிவெடுங்க. ஏற்கெனவே, பலமுறை எச்சரிக்கை கொடுத்தும் யாரும் கேட்கறது இல்லை. இந்த முறை கண்டிப்போட அறிக்கைவிடலாம். யாரும் மீடியாவுல, சமூக வலைதளங்கள்ல தேவையற்ற கருத்துகளைப் பகிரக் கூடாதுனு சொல்லுங்க. ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூவையெல்லாம் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க’ என்றிருக்கிறார். அதன் பிறகே முதல்வருக்குச் சமாதானம் ஏற்பட்டிருக்கிறது.

download

`அனைத்து நிலைகளிலும் செயல்பட்டுவரும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், எந்தவித முன்யோசனையும் இன்றி கழகத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இன்னபிற ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இதை மீறுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கறாராகக் குறிப்பிடப்பட்டு, ஓர் அறிக்கை உடனடியாகத் தயார் செய்யப்பட்டு, அதை ஓ.பி.எஸ்-ஸிடம் நேரில் காண்பித்து கையெழுத்துப் பெற்றனர். `இதே மாதிரி எத்தனை அறிக்கையில கையெழுத்து வாங்குறீங்கனு நானும் பார்க்குறேன்’ என ஓ.பி.எஸ் கூறியுள்ளார். மதியம் 2 மணியைத் தாண்டிவிட்டதால் பசியில் இருந்த அமைச்சர்கள் சிலர், `அண்ணே, இதுக்கு மேல ரவுண்ட் அடிக்க முடியாது. பசி தாங்கலை, சீக்கிரம் முடிங்கண்ணே...’ என கமென்ட் அடிக்க, ஓ.பி.எஸ் ரிலாக்ஸ் ஆகிவிட்டார். தற்போதைக்கு இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்றார் அந்த சீனியர் தலைவர்.

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி
ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி

`கடந்த ஒரு வாரத்துக்கு முன்புவரை தேனி தொகுதியில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளை ஓ.பி.எஸ் வழங்கிவந்தார். ஒரு மீடியாவும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. கொரோனா தடுப்புப் பணிகளில் ஆய்வு மேற்கொண்டிருந்த எடப்பாடியின் மீதுதான் மீடியாவின் பார்வை பதிந்திருந்தது. எடப்பாடி தரப்பு எடுத்த சில தவறான `மூவ்’களால் ஒதுங்கியிருந்த ஓ.பி.எஸ் முன்னுக்கு வந்துவிட்டார்’ என்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், இன்னும் என்னென்ன வெடிகள் வெடிக்க காத்திருக்கின்றனவோ?

பொறுத்திருந்து பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism