Published:Updated:

உடையும் உலகநாயகனின் மக்கள் நீதி மய்யக் கனவு… அடுத்தடுத்து வெளியேறும் நிர்வாகிகள்… காரணம் என்ன?!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

2019 நாடாளுமன்றத் தேர்தல் முன்பாகவே பிரசாந்த் கிஷோர் கமல்ஹாசனைத் தொடர்புகொண்டிருக்கிறார். ‘’தமிழ்நாட்டில் உங்கள் கட்சிக்கு வேலை செய்ய விரும்புகிறோம்’’ என்று அவர் சொல்ல உடனடியாக சந்திப்புகள் நடந்திருக்கின்றன.

மக்கள் நீதி மய்யம் எனும் கப்பலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டைகள் விழுந்துகொண்டேயிருக்கின்றன. துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் வெளியேறியதில் இருந்து முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் என தினமும் பலர் கட்சியில் இருந்து விலகிக்கொண்டேயிருக்கிறார்கள். கப்பலின் கேப்டன் கமல்ஹாசன் வருத்தத்தோடு வேடிக்கைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறார்.

மே மாதம் 2-ம் தேதி தமிழ்நாடு சட்டசபைத்தேர்தல் முடிவுகள் வெளியான அன்று கமல்ஹாசன் வெற்றிபெற்றுவிடமாட்டாரா என்று தமிழ்நாடே தவித்தது. கமல்ஹாசன் தோல்வி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபோது எல்லா தரப்பு மக்களும் ‘’கமல்ஹாசன் தோற்றிருக்கக்கூடாது’’ எனப் புலம்பினார்கள். கமல்ஹாசனுக்கு வாக்களிக்காத கோவை தெற்கு தொகுதி மக்கள் மீது கொந்தளித்தவர்கள் அதிகம். தோல்விக்குப்பிறகு கமல்ஹாசன் தளர்ந்தபடி நடந்துபோகும் அந்த வீடியோவைப்பார்த்த ஒவ்வொரு ரசிகனும் கலங்கினான். மு.க.ஸ்டாலினின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டது என்பதால், கமல்ஹாசன்தான் அன்றைய நாளின் ட்ரெண்டிங் நாயகனாக இருந்தார். ஒட்டுமொத்த மக்களின் இரக்கப்பார்வையும் அவர்மேல் இறங்கியது. ஆனால், அடுத்த சில நாள்களிலேயே கமல்ஹாசன் மீதிருந்த இரக்கமும், பரிதாபமும் அப்படியே டாக்டர் மகேந்திரன் பக்கம் திரும்பிவிட்டது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

டாக்டர் மகேந்திரன் பக்கம் பக்கமாக அடுக்கிய குற்றச்சாட்டுகளுக்கு, ‘’களை’’, ‘’துரோகி’’, ‘’எப்போதோ நீக்கப்பட்டிருக்கவேண்டியவர்’’ என்று கமல்ஹாசனிடம் இருந்து ஒரு பதில் கடிதம் வரும் என டாக்டர் மகேந்திரன் அல்ல, தமிழ்நாடே எதிர்பார்க்கவில்லை. அரசியல் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடாக இருந்தது அந்தக் கடிதம்.

தேர்தலுக்கு முன்பாக ஆனந்த விகடனுக்குப் பேட்டியளித்த கமல்ஹாசனிடம், ‘’தி.மு.க-வின் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருக்கிறாரே’’ என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘’அது அவர்களுடைய தேர்வு. அவர் கெட்டிக்காரர். மக்கள் பலம் இருக்கக்கூடியவர்களுக்கு பலம் கூட்டக்கூடியவர். அதேசமயம் அவர் கணக்குப்பிள்ளை மாதிரியான ஒருவர்தான். கணக்குப்பிள்ளையை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பு உங்களிடம் செல்வம் இருக்கவேண்டும். அப்போதுதான் கணக்குப்பிள்ளைக்கு வேலை இருக்கும். செல்வத்தை கணக்குப்பிள்ளைகள் ஈட்டித்தரமாட்டார்கள்’’ என்று சொல்லியிருந்தார். இப்போது கட்சிக்குள் இந்தக் கணக்குப்பிள்ளை விவகாரம்தான் பூதாகரமாக வெடித்திருக்கிறது.

பிரசாந்த் கிஷோரை விடுத்து சங்க்யா சொல்யூஷன்ஸ் என கமல்ஹாசனின் அலுவலக முகவரியில் இருந்தே இன்னொரு வியூக நிறுவனம் தொடங்கப்பட்டது ஏன் என்பதுதான் கட்சியில் இருந்து விலகிய துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரனின் கேள்வி. ’’2021 சட்டமன்ற தேர்தலில் நமது தலைவரை முதலமைச்சராக்கி விட வேண்டும் என்கின்ற பெரிய கனவுடன் பயணிக்கத் தொடங்கினோம். நமது கனவிற்கு துணையாக இருக்கும் என்ற நோக்கத்தில் ஐபேக் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் 2019 ஏப்ரலில் கையொப்பமாகி 2019 செப்டம்பர் மாதம் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது. அதன்பிறகு 'சங்க்யா சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனத்தை தேர்தல் ஆலோசனை நிறுவனமாக உருவாக்கினர். அவர்கள் கட்சியின் பிரசாரத்துக்குப் பயனுள்ள வகையில் எந்தப் பணிகளையும் சரிவர செய்யாமல் கட்சிக்குப் பெரும் செலவுகளை மட்டுமே உயர்த்திக் கொண்டிருந்தனர் என்பது எனக்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் தெரிந்தது’’ என தனது விலகலுக்கான மிக முக்கியக் காரணமாக சங்க்யா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தைத்தான் குறிப்பிட்டிருந்தார் டாக்டர் மகேந்திரன்.

மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுடன் பிரசாந்த் கிஷோர்
மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுடன் பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் - கமல்ஹாசன் ஒப்பந்தம் ஏன் முறிந்தது?!

2019 நாடாளுமன்றத் தேர்தல் முன்பாகவே பிரசாந்த் கிஷோர் கமல்ஹாசனைத் தொடர்புகொண்டிருக்கிறார். ‘’தமிழ்நாட்டில் உங்கள் கட்சிக்கு வேலை செய்ய விரும்புகிறோம்’’ என்று அவர் சொல்ல உடனடியாக சந்திப்புகள் நடந்திருக்கின்றன. I-PAC டீம் தமிழ்நாட்டில் சில தொகுதிகளில் இறங்கி வேலைபார்க்க ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டம் பற்றியும் முழுமையான விவரங்கள் எடுத்து, யாருக்கு செல்வாக்கு இருக்கிறது, யாருக்கு இல்லை, தொகுதியின் பிரச்னை, இங்கே எந்த விஷயத்தைப்பேச வேண்டும் என எல்லா டேட்டாவையும் எடுத்திருக்கிறார்கள். தனது டீம் கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் பிரசாந்த் கிஷோர், கமல்ஹாசனுக்கு சில ஆலோசனைகள் தந்திருக்கிறார்.

அதில் முக்கியமானது கட்சியின் நிர்வாக அமைப்பில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மொத்தம் 5 துணைத்தலைவர்கள் வேண்டும் என்பது உள்பட பல மாறுதல்கள், சீரமைப்புகளை அவர் சொல்லியிருக்கிறார். ஆனால், இந்த மாற்றங்களை கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன், கமல்ஹாசனின் தனிப்பட்ட ஆலோசகர் டிவி மகேந்திரன் இருவருமே விரும்பவில்லை என்பதோடு, பிரசாந்த் கிஷோர் கமல்ஹாசனை நெருங்குவது தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் நினைத்தார்கள் என்கிறார்கள். இதனால், கமல்ஹாசனிடம் ‘’நாமே தனி நிறுவனம் தொடங்கலாம். I-PAC நிறுவனத்துக்கு நாம் கொடுக்கும் பணத்தில் பத்தில் ஒரு மடங்கு செலவு செய்தால்போதும்’’ என்று சொல்லி சங்க்யா சொல்யூஷன்ஸ் எனும் நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. இது டாக்டர் மகேந்திரனின் ஒப்புதலோடும்தான் நடந்தது என்கிறார்கள்.

கமல் மற்றும் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுடன் பிரசாந்த் கிஷோர்
கமல் மற்றும் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுடன் பிரசாந்த் கிஷோர்
கமல்ஹாசனோடு கூட்டு, எஸ்.பி.வேலுமணியோடு நட்பு… யார் இந்த `டிவி' மகேந்திரன்?!

மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் விலகலுக்குக் காரணம் என்ன?!

‘’தோற்பதில் தவறில்லை. தோல்வி நிறைய பாடங்களைக் கற்றுத்தரும். ஆனால், அந்தத் தோல்வியில் இருந்து எந்தப் பாடமும் கற்கமாட்டேன் என்று அடம்பிடித்தால் நஷ்டம் யாருக்கு?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் கட்சியின் மீது அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள். கமல்ஹாசனுக்கு ஆதரவாகப் பேசச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்றும் சிலர் சொல்கிறார்கள். இன்று பத்மபிரியா, சந்தோஷ்பாபு ஆகியோர் விலகியிருக்கும் நிலையில் அடுத்தடுத்த நாள்களில் கட்சியின் இன்னும் சில முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவார்கள் எனத் தெரிகிறது.

கமல்ஹாசனின் ‘துரோகி’ கடிதத்தை யார் எழுதியது?!

கமல்ஹாசன் பெயரில் வெளிவந்த டாக்டர் மகேந்திரனுக்கு எதிரான கடிதத்தை கவிஞர் சினேகன் எழுதியதாகக் கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க டிவி மகேந்திரன் மற்றும் சங்க்யா சொல்யூஷன்ஸின் வற்புறுத்தலால் நடந்ததாகத் சொல்கிறார்கள். கமல்ஹாசனின் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கங்கள், கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கங்கள் என அனைத்தையும் நிர்வகிப்பது சங்க்யா சொல்யூஷன்ஸ் என்றும் சொல்கிறார்கள். அந்தக் கடிதமும் கமல்ஹாசனிடம் டிஜிட்டல் கையொப்பம்தான் பெறப்பட்டிருக்கிறது.

''என்னைப் பொருத்தவரை விமர்சனங்களை ஏற்றுக்கொண்டால் மேம்படுவோம். ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் மேம்படமுடியாது. என்னை செதுக்கியவை எல்லாம் விமர்சனங்கள்தான். என்னுடைய நடிப்பையெல்லாம் யாரும் ஆரம்பத்தில் வரவேற்கவில்லை. 'எம்ஜிஆர், சிவாஜி இருக்கும்போது எதை நம்பி நீயெல்லாம் ஹீரோவா வந்த?' என நான் நடத்திய முதல் செய்தியாளர் சந்திப்பில் என்னை ஒரு நிருபர் கடுமையாக விமர்சித்தார். நான் கோபப்படவில்லை. அவரை ஆள்வைத்து அடிக்கவில்லை. அவர் சொன்னதில் இருக்கும் உண்மையைப் புரிந்துகொண்டேன். அவர் சொன்னதில் இருந்த நேர்மையான விமர்சனம் புரிந்தது. ஒரு நடிகனிடம் இதையெல்லாம் எதிர்பார்க்கிறார்கள் எனத் தேடித்தெரிந்துகொண்டேன். என்னை பாலசந்தர் மாதிரியான ஒரு இயக்குநரிடம் கொண்டுபோய் ஒப்படைத்துவிட்டேன். இப்படித்தான் கமல்ஹாசன் என்கிற நடிகன் உருவானான்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

என்னைப்பற்றியும் தரம்தாழ்ந்த விமர்சனங்கள் வருகின்றன. அந்தக் குரல்களையெல்லாம் ஓயக்கூடாது. கெட்டிலில் இருக்கும் விசில் போல அவை. என்னைத் தரம்தாழ்ந்து விமர்சித்தவரை, மீம் போட்டவரை என்னைப் பாராட்டி மீம் போட வைக்கவேண்டும் என்றுதான் நான் யோசிப்பேன்'’ என்று விமர்சனங்கள் குறித்து விகடனில் பேசியிருக்கிறார் கமல்ஹாசன்.

இப்போது அவர்மீதும், அவருக்கு நெருக்கமானவர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கட்சியின் முக்கிய நிர்வாகிகளே சொல்கிறார்கள். எப்போதும் விமர்சனங்களைத் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளும் கமல்ஹாசன் இப்போது என்னசெய்யப்போகிறார் என ஒவ்வொரு தொண்டனும், ரசிகனும் காத்திருக்கிறான்!
அடுத்த கட்டுரைக்கு