Published:Updated:

`என்கிட்டயே பிளாஸ்டிக் ஃபைலை நீட்டுறீங்களே..!' - மருத்துவர்களிடம் கடுகடுத்த செம்மலை எம்.எல்.ஏ

நவீன் இளங்கோவன்
ரமேஷ் கந்தசாமி

சட்டமன்றப் பேரவை பொது நிறுவனக் குழுவினர் ஆய்வுக்கு வருகிறார்கள் என்றதும், ஈரோடு அரசு மருத்துவமனையைத் துடைத்து சுத்தம்செய்து பளிச்சென வைத்திருந்தனர்.

Inspection in GH
Inspection in GH ( ரமேஷ் கந்தசாமி )

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனக் குழு, ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாகப் பல்வேறு துறைகள்குறித்து ஆய்வு நடத்தினர். ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர்த் திட்டம், பவானிசாகர் அணை, பெருந்துறை சிப்காட் ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தியவர்கள், நேற்று ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். சட்டமன்றப் பேரவை பொது நிறுவன குழுத் தலைவர் எம்.எல்.ஏ செம்மலை தலைமையில் உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, குழுத் தலைவர் செம்மலை மருத்துவர்களிடம் நடத்திய கூட்டத்தில், “ சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை டாக்டர்கள் இல்லை, மருந்துகள் இல்லை என்று கூறி பக்கத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை செய்யக்கூடாது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கக்கூடாது.

Inspection in Erode GH
Inspection in Erode GH

புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள், பணிக்கு முன்கூட்டியே வந்துவிட வேண்டும். காலாவதி மாத்திரைகளை வைத்திருக்கக் கூடாது. விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை வேறு மருத்துவமனைகளுக்கு செல்லுமாறு நீங்கள் பரிந்துரை செய்வதாக எங்களுக்குப் புகார் வந்துள்ளது. இதுபோன்ற நிலை இருக்கக் கூடாது” என்றார். அந்தச் சமயம் பார்த்து கூட்டம் நடந்த அறைக்குள் நுழைந்த முதியவர் ஒருவர், ''விபத்தில் தலையில் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வந்தா, சேலத்துக்கு கொண்டுபோங்கன்னு அனுப்பிடுறாங்க. தயவுசெஞ்சு இங்கயே என்னன்னு பார்த்து உயிரை காப்பாத்தச் சொல்லுங்கய்யா'' என்று குமுறினார்.

இதைக்கேட்டு கோபமடைந்த எம்.எல்.ஏ செம்மலை, “ஏன் சேலத்துக்கு அனுப்புறீங்க. இங்க தலையை ஸ்கேன் பண்ண முடியாதா... நாம ஏன் ரிஸ்க் எடுக்கணும்னு வேற மாவட்ட ஆஸ்பத்திரிக்கு அனுப்பக்கூடாது. தவிர்க்க முடியாத காரணம் என்றால் மட்டும்தான் அனுப்ப வேண்டும்” என்றவரிடம், மருத்துவமனை சம்பந்தமாகத் தகவல்களை பிளாஸ்டிக் ஃபைலில் போட்டு மருத்துவர்கள் கொடுத்தனர். அந்த ஃபைலை வாங்கிய எம்.எல்.ஏ செம்மலை, ‘'ஏம்மா... பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாதுன்னு நாங்க எல்லா இடத்துலயும் விழிப்பு உணர்வு செஞ்சிக்கிட்டு வர்றோம். நீங்க என்னடான்னா என்கிட்டயே பிளாஸ்டிக் ஃபைலை நீட்டுறீங்களே!’' என கடுகடுத்தார்.

மருத்துகளின் இருப்பைப் பார்வையிடும் குழு
மருத்துகளின் இருப்பைப் பார்வையிடும் குழு

தொடர்ந்தவர், ``700 படுக்கை வசதியுடன், 2500 புறநோயாளிகள் வந்து செல்லும் ஈரோடு அரசு மருத்துமனையை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்ற முடியாத நிலை உள்ளது. ஆனாலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இணையான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும் என்பதோடு, ரூ.67.76 கோடி செலவில் இது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.