Published:Updated:

தங்க முட்டையிடும் வாத்தை ஏன் தனியாருக்கு தர வேண்டும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பொதுக்காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா
பொதுக்காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா

பொதுக்காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா

பிரீமியம் ஸ்டோரி

சமீபத்தில், ‘பொதுக்காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா 2021’-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது மத்திய அரசு. இதையடுத்து, ‘நல்ல லாபத்தில் இயங்கிவரும் பொதுக்காப்பீட்டு நிறுவனங்களைத் தனியார்மயமாக்கக் கூடாது’ என்று எதிர்க்கட்சியினரும், பொதுக்காப்பீட்டுத்துறை ஊழியர்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். மத்திய அரசோ, ‘இது தனியார்மயம் அல்ல; நிறுவனத்தின் பங்குகள் மட்டுமே விற்கப்படும்’ என்கிறது. ஆனால், “100 சதவிகிதப் பங்குகளை விற்பதற்கு வழிசெய்துவிட்டு, தனியார்மயம் அல்ல என்று சொல்வதன் லாஜிக் என்ன?” என்று கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்புகிறார்கள் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள். என்னதான் நடக்கிறது இந்த விவகாரத்தில்?

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

காப்பீட்டுத்துறையில் சர்ச்சைகள் தொடங்கியது நேற்று இன்றல்ல... இந்தியாவில் ஆரம்பத்தில் தனியார் நிறுவனங்கள் மட்டுமே காப்பீட்டுத்துறையில் செயல்பட்டுவந்த நிலையில், 1950-களில் அந்த நிறுவனங்களில் முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்தன. பல ஆண்டுகளாக இந்தப் பிரச்னை நீடித்த நிலையில், 1971-ம் ஆண்டு தனியார் காப்பீட்டு நிறுவனங்களை தேசியமயமாக்கினார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. மொத்தம் 107 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தேசியமய மாக்கப்பட்டு நேஷனல் இன்ஷூரன்ஸ், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்ஷூரன்ஸ், யுனைடெட் இந்திய இன்ஷூரன்ஸ் என நான்கு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அன்றைக்கு மொத்தம் 19.5 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனங்களின் இன்றைய மதிப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாய்.

1999-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசுதான் முதன்முறையாக காப்பீட்டுத்துறையில் தனியாருக்கு அனுமதி அளித்தது. அதன் பிறகு, இந்தியாவில் ஏராளமான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின. இந்த நிலையில்தான், பொதுக்காப்பீட்டு சட்டத் திருத்த மசோதாவை பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

மத்திய அரசின் இந்த மசோதாவுக்கு எதிராகத் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டுவரும் பொதுக்காப்பீட்டுத்துறை ஊழியர்கள் சங்கத்தின் தென் மண்டல பொதுச்செயலாளர் ஆனந்த், இந்த மசோதா ஏற்படுத்தும் விளைவுகளை நம்மிடம் விவரித்தார்...

ஆனந்த், நாராயணன் திருப்பதி
ஆனந்த், நாராயணன் திருப்பதி

“தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதால்தான் அவை தேசியமயமாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியடைந்து, 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில், மிக மோசமான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. `பொதுக்காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளில் குறைந்தபட்சம் 51 சதவிகிதத்தை மத்திய அரசு கட்டாயம் வைத்திருக்க வேண்டும்’ என்கிறது சட்ட விதிமுறை. அந்த விதிமுறையைத்தான் தற்போது மாற்றியிருக்கிறார்கள். இது தனியார் மயமாக்கலுக்கான முதல்படி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ, ‘பொதுக்காப்பீட்டு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கும் திட்டம் இல்லை; சந்தைப் போட்டியைச் சமாளிக்கவும், நிதி ஆதாரத்தைத் திரட்டவுமே இந்த மசோதாவை நிறைவேற்றியிருக்கிறோம்’ என்கிறார். ஏற்கெனவே நிதி ஆயோக், ‘யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸை தனியாருக்கு விற்கலாம்’ என்று கூறியிருக்கிறது. அதேபோல, இந்த மசோதாவிலும் ‘100 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்குக் கொடுக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கொள்கை முடிவெடுக்கும் அதிகாரம் தொடங்கி இயக்குநர்களை நியமிக்கும் அதிகாரம் வரை அனைத்தும் தனியாரிடம் போய்விடும்.

தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் மட்டுமே சேவையை வழங்கிவருகின்றன. ஆனால், பொதுக்காப்பீட்டு நிறுவனங்களோ 60 சதவிகிதம் நகர்ப்புறங்களிலும், 40 சதவிகிதம் கிராமப்புறங்களிலும் சேவையை வழங்கி வருகின்றன. ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகளுக்கான காப்பீடு என்பது பொதுத்துறை நிறுவனங்களின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். உதாரணத்துக்கு, பொதுக்காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மிக மிகக் குறைந்தபட்சமாக 12 ரூபாய் பிரீமியத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்குக் காப்பீடு எடுக்க முடியும். இப்படிச் சிறிதும் பெரிதுமாக நாடு முழுவதும் 50 கோடிப் பேருக்கு மேல் பொதுத்துறை நிறுவனங்கள்தான் காப்பீடு வழங்குகின்றன. இந்த நிலையில், பொதுக்காப்பீட்டு நிறுவனங்களில் தனியார் ஆதிக்கம் வந்துவிட்டால், பிரீமியம் தொகை உயர்த்தப்பட்டு, கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்களுக்குக் காப்பீடு என்பதே எட்டாக்கனியாகிவிடும்.

எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது சிறப்பான சேவையையும், நல்ல லாபத்தையும் ஈட்டிவரும் பொதுக்காப்பீட்டுத்துறை நிறுவனங்களை எதற்காகத் தனியாருக்கு கொடுக்க வேண்டும் என்பதே எங்களது கேள்வி. யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் மட்டுமே 17,000 கோடி ரூபாய்க்கு மேல் பிரீமியம் தொகையைத் திரட்டியுள்ளது. இதன் மூலம் ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசுக்கு கணிசமாக ஈவுத்தொகை கிடைத்துவருகிறது. இப்படி தங்க முட்டையிடும் வாத்தை தனியாருக்கு ஏன் கொடுக்க வேண்டும்?” என்கிறார் ஆதங்கத்துடன்!

தங்க முட்டையிடும் வாத்தை ஏன் தனியாருக்கு தர வேண்டும்?

ஆனந்த் கேட்டிருக்கும் அதே கேள்வியை பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம்... “உலகமயமாக்கல் கொள்கை வந்த பிறகு, காப்பீடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தனியாரின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாகவும் அவசியமானதாகவும் மாறியிருக்கிறது. இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில் காப்பீட்டுத்துறையில் தனியாரை அதிக அளவில் அனுமதித்தால்தான், இன்னும் நிறைய பேர் காப்பீடு பெறுவார்கள். அந்த வகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள பொதுக் காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா வரவேற்கத்தக்கது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு