Published:Updated:

பேரூராட்சிக் கூட்டத்தில் வெடித்த உட்கட்சிப்பூசல்; திமுக கவுன்சிலர்கள்‌ உட்பட 11 பேர்‌ வெளிநடப்பு!

வெளிநடப்பு

பேரூராட்சிப் பணிகளில் கணக்கிலடங்காத அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது எனக் கூறி அதிமுக, அமமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர்களும் பேரூராட்சி மன்றத் தலைவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

பேரூராட்சிக் கூட்டத்தில் வெடித்த உட்கட்சிப்பூசல்; திமுக கவுன்சிலர்கள்‌ உட்பட 11 பேர்‌ வெளிநடப்பு!

பேரூராட்சிப் பணிகளில் கணக்கிலடங்காத அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது எனக் கூறி அதிமுக, அமமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர்களும் பேரூராட்சி மன்றத் தலைவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Published:Updated:
வெளிநடப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சி இருக்கிறது. 18 வார்டுகள்கொண்ட இந்தப் பேரூராட்சியில் தி.மு.க - 10, அ.தி.மு.க - 3, அ.ம.மு.க - 1, காங்கிரஸ் - 1, சி.பி.எம் - 1, சுயேச்சை - 2 இடங்களில் வெற்றி பெற்று கவுன்சிலர்கள் தேர்வுசெய்யப்பட்டிருக்கின்றனர். மெஜாரிட்டி கவுன்சிலர்கள்கொண்ட தி.மு.க தரப்பிலிருந்து கவுன்சிலர் சுஜிதா மேரி பேரூராட்சி மன்றத் தலைவராகச் செயலாற்றிவருகிறார். இந்த நிலையில், மம்சாபுரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் அலுவலகக் கூட்டரங்கில் பேரூராட்சித் தலைவர் சுஜிதா மேரி தலைமையில் நேற்று நடைபெற்றது.

மன்றத் தலைவர்
மன்றத் தலைவர்

அந்தக் கூட்டத்தில், பேரூராட்சித் திட்டப்பணிகள்‌, வரவு-செலவு திட்ட கணக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் ஒரு பகுதியாக பேரூராட்சிப் பணிகள் தொடர்பாக 10 தீர்மானங்கள் வாசிக்கத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இதில், பேரூராட்சியின் வரவு-செலவு திட்ட கணக்குகள், பிறப்பு-இறப்பு பதிவு வகை கணக்குகளான முதல் இரண்டு தீர்மானங்கள் கவுன்சிலர்கள்‌ ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டன.

பேரூராட்சிப் பணிகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த மீதி எட்டு தீர்மானங்களுக்கும் கவுன்சிலர்கள்‌ கூட்டத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, ``நிறைவேற்றப்படாத பணிகள் மற்றும் முறையான அறிவிப்பின்றி முடிக்கப்பட்ட பணிகளுக்குக் கூட்டத்தில் தீர்மானம் வாசித்து கவுன்சிலர்கள் ஒப்புதல் பெறுவது முறையற்றது. பேரூராட்சிப் பணிகளில் கணக்கிலடங்காத அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது" எனக் கூறி அ.தி.மு.க., அ.ம.மு.க கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, தி.மு.க. கவுன்சிலர்களும் பேரூராட்சி மன்றத் தலைவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

பேரூராட்சி கூட்டம்
பேரூராட்சி கூட்டம்

இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பேசிய தி.மு.க கவுன்சிலர்கள், ``பேரூராட்சிக் கூட்டத்திலும், வார்டு சார்ந்த பணிகளின்போதும் கவுன்சிலர்களிடம் மரியாதைக்குக்கூட ஒப்புதல் பெறப்படுவதில்லை. எங்களுக்கு எந்த இடத்திலும் மரியாதை தருவதில்லை. எனவே, கூட்டத்தில் வாசிக்கப்படும் மற்ற 8 தீர்மானங்களையும் புறக்கணிக்கிறோம்" எனக் கூறி கூட்டத்திலிருந்து தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர், அ.தி.மு.க., அ.ம.மு.க கவுன்சிலர்கள் உட்பட 11 பேர் வெளிநடப்பு செய்தனர்.

தி.மு.க கவுன்சிலர்களின் உட்கட்சிப்பூசலாலும், கவுன்சிலர்கள் ஒத்துழைப்பில்லாததாலும் மம்சாபுரம் பேரூராட்சி கூட்டத்தில் மற்ற 8 தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியாமல்போனது. இந்தப் பரபரப்பைத் தொடர்ந்து, பாதுகாப்புக்காக பேரூராட்சியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.