Published:Updated:

`ஒருபக்கம் ஜெகன்; மறுபக்கம் கட்சிக்காரர்கள்!' - சந்திரபாபு நாயுடுவின் நிம்மதியைத் தொலைத்த உட்கட்சி மோதல்

பிரேம் குமார் எஸ்.கே.

ஆளும்கட்சியிடமிருந்து வரும் அழுத்தத்தால் கடும் பாதிப்புகளைச் சந்தித்துவரும் சந்திரபாபு நாயுடு, தற்போது உட்கட்சி மோதல் காரணமாகவும் சிக்கல்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளார்.

புத்தா வெங்கன்னா - கேசிநேனி ஸ்ரீனிவாஸ்
புத்தா வெங்கன்னா - கேசிநேனி ஸ்ரீனிவாஸ்

ஆந்திர மாநில அரசியலில் பல்வேறு அதிரடிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க-வும் சந்திரபாபு நாயுடுவுக்குக் கடும் நெருக்கடி கொடுக்கத் திட்டம் வகுத்து வருகிறது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் தெலுங்கு தேசம் கட்சிக்குள்ளேயே கடும் மோதல் வெடித்துள்ளது. புத்தா வெங்கன்னா - கேசிநேனி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கடந்த சில நாள்களாக சமூக வலைதளத்தில் கடுமையாக மோதி வந்தனர்.

சில நாள்களாக இவர்களது மோதல்தான் ஆந்திர அரசியலின் ஹாட் டாக். விஜயவாடாவின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் புத்தா வெங்கன்னா சமீபத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இவர்களின் சந்திப்பை கேசிநேனி ஸ்ரீனிவாஸ் விமர்சிக்க தெலுங்கு தேசம் கட்சியில் புயலைக் கிளப்பத் தொடங்கியது இந்த விவகாரம்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

இந்த மோதல் நேற்று உச்சக்கட்டத்தை எட்டியது. கேசிநேனி ஸ்ரீனிவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சந்திரபாபு நாயுடு காரு... உங்களுக்கு என்னைப் போன்ற நபர்கள் கட்சியில் வேண்டாம் என்றால் சொல்லிவிடுங்கள். நான் எனது மக்களவை உறுப்பினர் பதவியையும் கட்சி உறுப்பினர் என்பதையும் ராஜினாமா செய்து விடுகிறேன்.

ஆனால், என்னைப் போன்றவர்கள் கட்சியில் தொடர வேண்டும் என்று நீக்கள் விரும்பினால், தயவு செய்து உங்கள் செல்ல நாயைக் கட்டுப்படுத்தி வையுங்கள்” என்றார். இந்த ட்வீட் இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிறிது காலம் இருவரும் அமைதியாக இருக்கும்படி சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டதாகவும் விரையில் இருவரையும் அழைத்து அவர் பேசுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நான் சந்திரபாபு நாயுடுவின் விசுவாசி. அவர் என்னை உருவாக்கியவர். மற்றவர்கள் என்னை எப்படி அழைத்தாலும் எனக்குக் கவலை இல்லை. கட்சிக்காகவும் சந்திரபாபு நாயுடுக்காகவும் இந்த மோதலை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்
வெங்கன்னா

ஆளும்கட்சியிடமிருந்து வரும் அழுத்தத்தால் கடும் பாதிப்புகளை சந்தித்துவரும் சந்திரபாபு நாயுடு தற்போது உட்கட்சி மோதல் காரணமாகவும் சில சிக்கல்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளார். இந்த மோதல் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.