Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்... தொடங்கியது உட்கட்சிப் பூசல்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான்
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்பது மாவட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது அ.தி.மு.க.

பிரீமியம் ஸ்டோரி

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நிறைவுபெற்றதை அடுத்து, முக்கிய கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றன. அதேசமயம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளால், பிரதான கட்சிகளில் உட்கட்சிப் பூசல்கள் வெடிக்கத் தொடங்கிவிட்டன. அந்தக் கட்சிகளுக்குள் என்ன நடக்கிறது?

ஒழிக கோஷம்... தீக்குளிப்பு முயற்சி... பற்றியெரியும் தி.மு.க

தோல்வி மட்டுமல்ல... மிகப்பெரிய வெற்றியும்கூட அதிகார மோதலை ஏற்படுத்திவிடும் என்பதற்கு உதாரணமாகியிருக்கிறது தி.மு.க. அந்தக் கட்சியில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் பல்வேறு மாவட்டங்களில் நடந்த உள்ளடி வேலைகள் ஸ்டாலினுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு தி.மு.க-விலேயே இருவர் போட்டியிட்டிருக்கிறார்கள். இதில் சபாநாயகர் அப்பாவு, எம்.பி ஞானதிரவியம் தலைமையில் ஒரு டீமும், மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ அப்துல் வஹாப் தலைமையில் ஒரு டீமும் அடித்துக்கொண்டதில் ரணகளமாகியிருக்கிறது திருநெல்வேலி தி.மு.க.

சிவகங்கை மாவட்டத்தில் கண்ணங்குடி, காளையார்கோவில் ஒன்றியங்களுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ தமிழரசியை பெரியகருப்பன் டீம் மொத்தமாகப் புறக்கணித்ததில், “பெண் என்பதால், புறக்கணித்துவிட்டார்கள்; அ.ம.மு.க-விலிருந்து வந்த மாரியப்பன் கென்னடியை முன்னிலைப்படுத்துகிறார்கள்” என்று வெடித்திருக்கிற்து தமிழரசி தரப்பு. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம் ஒன்றியத் தலைவர் பதவிக்கு மாவட்டச் செயலாளர் தேவராஜ் பரிந்துரைத்த நபரை பா.ம.க., அ.தி.மு.க கவுன்சிலர்கள் ஆதரவுடன் தோற்கடித்துவிட்டதாக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு எதிராக தி.மு.க நிர்வாகிகளே, “துரோகி கதிர் ஆனந்த் ஒழிக... அ.தி.மு.க-வின் கைக்கூலி கதிர் ஆனந்த் ஒழிக” என்று கோஷமிட்டதுடன் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இவையெல்லாம் உதாரணங்கள் மட்டுமே... நடந்து முடிந்த மறைமுகத் தேர்தலையொட்டி பல்வேறு மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களுக்கு இடையில் பிரச்னைகள் பூதாகரமாக வெடித்துள்ளன. “அனைத்துத் தேர்தல்களிலும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே அனுபவிக்கிறார்கள். கட்சிக்காக உழைத்தவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. இது தொடர்ந்தால் வரப்போகும் நகர்ப்புறத் தேர்தலில் எப்படி வேலை செய்ய முடியும்?” என்று கொதிக்கிறார்கள் கட்சியின் அடிமட்டத்தில் பணியாற்றும் நிர்வாகிகள்!

“மா.செ-க்களை மாற்ற வேண்டும்!” - அலறும் அ.தி.மு.க நிர்வாகிகள்...

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்பது மாவட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது அ.தி.மு.க. இதையடுத்து, “கடந்த ஆட்சியில் அள்ளிக்குவித்தவர்கள், கையை இறுக்க மூடிக்கொண்டதே தோல்விக்குக் காரணம்” என்று கொதிக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். தேர்தல் செலவுக்குப் பணம் கேட்டுச் சென்றவர்களிடம், “சட்டமன்றத் தேர்தலுக்குச் செலவு செய்த கடனையே இன்னும் அடைக்க முடியவில்லை” என்று மாவட்டச் செயலாளர்கள் பலரும் கைவிரித்திருக்கிறார்கள். “ஆளுங்கட்சியாக இருந்தபோது கோடி கோடியாகச் சம்பாதித்த மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் அள்ளிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை; கிள்ளியாவது கொடுத்திருக்கலாம். ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கே இப்படியென்றால் மாநகராட்சி, நகராட்சித் தேர்தல்களில் பணம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. செலவு செய்யத் தயாராக இல்லாதவர்களை மாற்றிவிட்டு பணத்தை இறக்கத் தயாராக இருப்பவர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்க வேண்டும்” என்று பல்வேறு மாவட்டங்களிலும் கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான்
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான்

“யார் துரோகிகள்?” - கொதிக்கும் பா.ம.க நிர்வாகிகள்...

தேர்தல் தோல்வியை அடுத்து, “துரோகிகள் கட்சியைவிட்டு இப்போதே விலகிச் செல்லலாம்’ என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பது நிர்வாகிகளைக் கொதிக்க வைத்திருக்கிறது. “ஐயா எங்களை துரோகிகள் என்கிறார். ஆனால், அவர் மட்டும் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறி தொண்டர்களுக்கும், நம் சமூகத்துக்கும் துரோகம் செய்யவில்லையா? அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்துகொண்டே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வுடன் அண்டர் டீலிங் வைத்துக்கொண்டது துரோகம் இல்லையா? இப்போதும்கூட 47 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர்கள், 120-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், 150-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்து கவுன்சிலர்கள் என வெற்றிபெற்றிருக்கிறோம். இதில் கட்சித் தலைமையின் பங்கு எதுவும் இல்லை... உள்ளூர் செல்வாக்கு காரணமாகவே இவர்களெல்லாம் வெற்றிபெற்றிருக்கிறார்கள். கட்சித் தலைமை தன்னிச்சையாக முடிவெடுத்து, 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறது. அந்த விஷப் பரீட்சைக்கு நாங்கள் தயாரில்லை” என்று கொந்தளிக்கிறார்கள் நிர்வாகிகள்!

“வார்த்தையை வாரி இறைச்சுடுறாரு!” - புலம்பும் நாம் தமிழர் தம்பிகள்...

ஒவ்வொரு தேர்தல் தோல்விக்குப் பிறகும் நாம் தமிழர் கட்சியிலிருந்து கணிசமான நிர்வாகிகள் கழன்று, மாற்றுக் கட்சிகளில் தஞ்சமடைவது வாடிக்கையாகிவிட்டது. “அண்ணன் வாயைவெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறாரு... விளைவுகளை யோசிக்காம வார்த்தையை வாரி இறைச்சுடுறாரு... ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேரத்துல நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விமர்சனம் செஞ்சதாலேயே கிராமப்புறத்துல யாரும் ஓட்டுப் போடலை. அந்த ரணமே இன்னும் ஆறலை... அதுக்குள்ள, ‘சைவ சித்தாந்தத்தில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மீண்டும் இணைய வேண்டும்; கிறிஸ்தவம் ஐரோப்பிய மதம்... இஸ்லாம் அரேபிய மதம்’னு பேசுனதுல அந்தச் சமூகத்து மக்களும் எங்க மேல கொந்தளிப்புல இருக்குறாங்க. அதனாலேயே கிராமப்புறங்கள்ல கட்சியோட கீழ்மட்ட நிர்வாகிகள் பலரும் தி.மு.க உட்பட மாற்றுக் கட்சிகளுக்கு மாறிக்கிட்டிருக்காங்க” என்றார்கள் அழாத குறையாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு