Published:Updated:

“யார் உண்மையான சிவசேனா..?” - காய்நகர்த்தும் ஷிண்டே... தக்கவைப்பாரா உத்தவ் தாக்கரே?

உத்தவ் தாக்கரே
பிரீமியம் ஸ்டோரி
உத்தவ் தாக்கரே

ஒரே சின்னத்தைக் கேட்டு இரண்டு அணிகள் தேர்தல் கமிஷனை அணுகும்போது, கீழ்க்காணும் அம்சங்கள்தான் பிரதானமாக எடுத்துக்கொள்ளப்படும்.

“யார் உண்மையான சிவசேனா..?” - காய்நகர்த்தும் ஷிண்டே... தக்கவைப்பாரா உத்தவ் தாக்கரே?

ஒரே சின்னத்தைக் கேட்டு இரண்டு அணிகள் தேர்தல் கமிஷனை அணுகும்போது, கீழ்க்காணும் அம்சங்கள்தான் பிரதானமாக எடுத்துக்கொள்ளப்படும்.

Published:Updated:
உத்தவ் தாக்கரே
பிரீமியம் ஸ்டோரி
உத்தவ் தாக்கரே

பா.ஜ.க-வின் அதிரடியால் ஆட்சி பறிபோயிருக்கும் நிலையில், `கட்சியை மட்டுமாவது, உத்தவ் தாக்கரே தக்கவைத்துக்கொள்வாரா?’ என்ற கேள்வி மகாராஷ்டிர அரசியலில் மையம்கொண்டிருக்கிறது.

2019 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவிக்காக ஏற்பட்ட மோதலால், பா.ஜ.க - சிவசேனா கூட்டணி உடைந்தது. அதன் பிறகு சரத் பவாரின் தலையீட்டால், சிவசேனா தலைமையில் அமைந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியில், உத்தவ் தாக்கரே முதல்வரானார். அதிலிருந்து அந்த ஆட்சியைக் கவிழ்க்க தருணம் பார்த்து, காத்திருந்தது பா.ஜ.க.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இந்த நிலையில்தான் கடந்த ஜூன் 20-ம் தேதி உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில், 50 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட அதிருப்தி கோஷ்டி தனியாகப் பிரிந்தது. இதுதான் சமயம் என்று அவர்களை அலேக்காகத் தூக்கிய பா.ஜ.க, ஒரு வாரத்துக்கும் மேலாக அஸ்ஸாம் மாநிலத்தில் தங்கவைத்திருந்தது. ஏக்நாத் ஷிண்டேவுக்குத் தேவையான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்தவுடன் உத்தவ் தாக்கரே ஆட்சியைக் கவிழ்த்த பா.ஜ.க., அதிருப்தி கோஷ்டியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையில் புதிய அரசை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க-வின் அந்த மூவ்தான் சிவசேனா கட்சியின் எதிர்காலத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது.

துணை முதல்வர் பதவியை எதிர்பார்த்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியைக் கொடுத்ததுடன், “40 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக் கும் நாங்கள்தான் உண்மையான சிவசேனா’’ என்று ஷிண்டேவைச் சொல்ல வைத்திருக்கிறது பா.ஜ.க. அடுத்ததாக கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான, ‘வில் அம்பு’ சின்னத்துக்கும் உரிமை கோரவிருக்கிறார் ஷிண்டே. கரணம் தப்பினால் மரணம் என்ற இக்கட்டான சூழலில், சிவசேனாவைத் தக்கவைத்துக்கொள்ள சட்டரீதியான போராட்டத் துக்குத் தயாராகிவருகிறார் உத்தவ் தாக்கரே.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் புதிய சபாநாயகர் ராகுல் நர்வேகர், சிவசேனா அதிருப்தி கோஷ்டியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டேயை சட்டமன்ற சிவசேனா தலைவராக அங்கீகரித்து இருக்கிறார். மேலும் உத்தவ்தாக்கரேயிடம் இருக்கும் எஞ்சிய 16 எம்.எல்.ஏ.க்களும் தங்களது ‘கொறடா’ உத்தரவை மீறி புதிய சபாநாயகர் தேர்தல் மற்றும் அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தின் மீது வாக்களித்திருப்பதால் அவர்களை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று சபாநாயகரிடம் ஷிண்டே தரப்பு மனு கொடுத்துள்ளது. இதை எதிர்த்தும் உத்தவ் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறது.

இந்த விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தி ருக்கும் மக்களவையின் முன்னாள் செயலாளர் டி.ஆசாரியா, “ஒரே சின்னத்தைக் கேட்டு இரண்டு அணிகள் தேர்தல் கமிஷனை அணுகும்போது, கீழ்க்காணும் அம்சங்கள்தான் பிரதானமாக எடுத்துக்கொள்ளப்படும். சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் பெரும்பான்மை ஆதரவு எந்த அணிக்கு அதிகமாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்து, அதனடிப் படையில் யார் உண்மையான சிவசேனா என்பதைத் தேர்தல் கமிஷன் முடிவு செய்யும். கட்சி நிர்வாகிகளின் பெரும்பான்மை ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதைத் தேர்தல் கமிஷனால் கணிக்க முடியாதபட்சத்தில், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் எந்த அணிக்கு அதிகமாக இருக்கின்றனர் என்பதை கவனத்தில் கொண்டு தேர்தல் கமிஷன் சின்னத்தை ஒதுக்கும். அதேபோல, கட்சியில் எந்த அணிக்குச் செல்வாக்கு இருக்கிறது என்பதை கணிக்க, ஒவ்வோர் அணியிலும் இருக்கும் முக்கியத் தலைவர்கள், முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் நிர்வாகிகளின் எண்ணிக்கையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். அப்படியும் உறுதியான முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டால், சின்னத்தை முடக்கிவிட்டு, இரு அணிகளும் தனித்தனியாக புதிய கட்சியைப் பதிவு செய்யுமாறு தேர்தல் கமிஷன் கேட்டுக்கொள்ளும்” என்றார்.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

“ஏக்நாத் ஷிண்டேவின் அணிக்கு `உண்மையான சிவசேனா’ என்ற அங்கீகாரத்தைக் கொடுத்து விட்டால், புதிய கட்சியை ஆரம்பித்து அதை வளர்த்தெடுப்பது உத்தவ் தாக்கரேவுக்கு எளிதான காரியமாக இருக்காது” என்கிறார் மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்.

சிவசேனாவில் இருந்த பல முக்கியத் தலைவர்கள் ஷிண்டேவின் அணிக்குத் தாவிவிட்டதால், களத்தில் இறங்கி வேலை செய்ய உத்தவ் தாக்கரேவிடம் சொல்லிக்கொள்ளும்படி யாருமில்லை. அதேபோல ஏக்நாத் ஷிண்டேவைப் பெரிய அளவில் வளரவிடக் கூடாது என்று நினைக்கும் பா.ஜ.க., அடுத்த தேர்தலில் சொற்ப தொகுதிகளை ஒதுக்கி, அவரைத் தனது அடிமையாக வைத்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இது குறித்து சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் நீலம் கோரேயிடம் கேட்டபோது, “தொண்டர்கள்தான் எங்களின் பலம். அதனால் கட்சியைவிட்டு எத்தனை பேர் சென்றாலும் எங்களால் அதைப் புதிதாக மீட்டெடுக்க முடியும்” என்றார் சுருக்கமாக.

விரைவில் வரவிருக்கும் மும்பை மாநகராட்சித் தேர்தலில் தெரிந்துவிடும் என்கிறார்கள் மகாராஷ்டிர அரசியல் நோக்கர்கள். பார்க்கலாம்!