அரசியல்
அலசல்
Published:Updated:

கோவையில் கோலோச்சுவது யார்? - முட்டிமோதும் அமைச்சர்கள்!

கோவை
பிரீமியம் ஸ்டோரி
News
கோவை

கோவையில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள்தான் மிடுக்காக வலம்வருகிறார்கள்.

கொரோனா வார்டுக்குள் பி.பி.இ கிட்டுடன் என்ட்ரி கொடுத்தது முதல், பிரதமர் மோடியைச் சந்தித்தபோது கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கோரிக்கை வைத்தது வரை நீள்கிறது முதல்வர் ஸ்டாலினின் கோவை மீதான பாசப்பட்டியல். என்னதான் இப்படி அக்கறை செலுத்தினாலும் கோவையை ஆட்சி செய்ய, தி.மு.க-வில் ஒரு மக்கள் பிரதிநிதிகூட இல்லை. அதனாலேயே, தி.மு.க-வின் மாவட்டப் பொறுப்பாளர்கள் தொடங்கி பிற மாவட்ட அமைச்சர்கள் வரை கோவையை கன்ட்ரோல் எடுப்பது யார் என்று முட்டிமோதி வருகிறார்கள்!

கோவையில் கோலோச்சுவது யார்? - முட்டிமோதும் அமைச்சர்கள்!

‘அரசு நிகழ்ச்சிகளைக் கட்சி நிகழ்ச்சிபோல நடத்தக் கூடாது’ என்று தி.மு.க தலைமை உத்தரவிட்டிருந்தாலும், கோவையில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள்தான் மிடுக்காக வலம்வருகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற அரசு ஆய்வுக் கூட்டம் ஒன்றில் அமைச்சர், கலெக்டர், டி.ஆர்.ஓ-வுக்கு இணையாக அவர்கள் அருகிலேயே தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், மருதமலை சேனாதிபதி ஆகியோர் அமர்ந்து அதிகாரம் செலுத்தினார்கள். இந்தக் கூட்டத்தில் கோவை எம்.எல்.ஏ-க்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

‘யார் பெரியவர்?’ என்ற கோதாவில் தி.மு.க நிர்வாகிகள் தங்களுக்குள் மோதிக்கொள்வதும் அடிக்கடி நடக்கிறது. சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேரு கோவை வந்தபோது, பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரமும், மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியும் ஒருமையில் பேசி மல்லுக்கட்டிக்கொண்டார்கள். கட்சி மேலிடம் வரை இந்த விவகாரம் சென்று, கட்சித் தலைமை சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கண்டித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதன் பிறகும் பஞ்சாயத்துகள் ஓயவில்லை என்று நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள் சில சீனியர் தொண்டர்கள்...

கோவையில் கோலோச்சுவது யார்? - முட்டிமோதும் அமைச்சர்கள்!

“தமிழ்நாட்டிலேயே கொரோனா தடுப்புக்காக, முதல்வர் நிவாரண நிதித் திட்டத்துக்கு அதிக நிதி கொடுத்தது கோவை மாவட்டம்தான். இதிலும் ஏகப்பட்ட தகராறுகள் எழுந்தன. தடாகம் பகுதியிலுள்ள செங்கல்சூளைகள் தனது எல்லையில் வருவதால், மாவட்டப் பொறுப்பாளர் பையா கிருஷ்ணன், சூளை அதிபர்களிடம் நிவாரண நிதி வசூலிக்கச் சென்றுள்ளார். அப்போது, ‘நான்தான் செங்கல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர். நீங்கள் எப்படி எங்கள் ஏரியாவுக்கு வரலாம்?’ என்று மற்றொரு மாவட்டப் பொறுப்பாளரான சி.ஆர்.ராமசந்திரன் எகிறியுள்ளார். கட்டி உருளாத குறையாக இருவரும் மோதிக்கொண்டதைப் பார்த்த செங்கல்சூளை உரிமையாளர்கள் அதிர்ந்துவிட்டார்கள்.

உள்ளூர் உடன்பிறப்புகள் இப்படியென்றால், அமைச்சர்கள் சிலரும் ‘பசை’யான கனவுகளுடன் கோவையை முற்றுகையிடுகிறார்கள். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், கோவையிலும் ஆதிக்கம் செலுத்தலாம் என நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், கொரோனா தடுப்புப் பணிக்காக ராமச்சந்திரனுடன் அமைச்சர் சக்கரபாணியும் சேர்த்தே கோவைக்கு அனுப்பப்பட்டார். இவர்களில் சக்கரபாணி கைதான் ஓங்குகிறது. காரணம், முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன் இவருக்கு இருக்கும் நெருக்கம்.

ராமச்சந்திரன் - சக்கரபாணி
ராமச்சந்திரன் - சக்கரபாணி

கடந்த முறை எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, தி.மு.க கொறடாவாக இருந்தவர் சக்கரபாணி. இப்போது முன்னாள் அமைச்சர் வேலுமணி அ.தி.மு.க கொறடாவாக இருக்கிறார். தனது சொந்த மாவட்டமான திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமியைத் தாண்டி எதுவும் செய்ய முடியவில்லை என்பதால், வேலுமணியின் நெருக்கத்தை வைத்துக்கொண்டு கோவையில் லாபி செய்கிறார் சக்கரபாணி.

கடந்த சில ஆண்டுகளாகவே கோவை மாவட்டம் மீது எ.வ.வேலுவுக்கு ஒரு கண் இருக்கிறது. நா.கார்த்திக்கை மாவட்டப் பொறுப்பாளர் ஆக்கியதில் வேலுவின் பங்கு மிக அதிகம். அதுமட்டுமல்ல... தொழில்ரீதியாக தனக்கு வேண்டப்பட்ட ஜெயக்குமாரின் மனைவி மீனா ஜெயக்குமாரை, தி.மு.க மாநில மகளிரணி துணைச் செயலாளர் ஆக்கியதும் எ.வ.வேலுதான். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் மீனா ஜெயக்குமாரை மேயராக்கி, கோவையில் தனது ஆதிக்கத்தைத் தொடர வேண்டும் என்பதே வேலுவின் நோக்கம்.

நா.கார்த்திக் - பையா கிருஷ்ணன்
நா.கார்த்திக் - பையா கிருஷ்ணன்

அமைச்சர் கே.என்.நேரு, ஆட்சிக்கு வரும் முன்பே முதன்மைச் செயலாளர் என்ற அடிப்படையில் கொங்கு மண்டலம் முழுவதும் கள ஆய்வு செய்திருந்தார். பொள்ளாச்சி தி.மு.க எம்.பி சண்முகசுந்தரத்துக்கும், நேருவின் சகோதரர் மணிவண்ணனுக்கும் இடையே நல்ல பழக்கம் இருக்கிறது. சண்முகசுந்தரம் மூலம் தனது அதிகாரத்தை கோவையில் செலுத்த நினைக்கிறார் நேரு. முன்பெல்லாம் அமைதியாக இருந்த சண்முகசுந்தரம், கடந்த சில வாரங்களாக அதிகாரத்துடன் வலம்வருவதைவைத்தே இதைப் புரிந்துகொள்ளலாம்.

கோவையில் கோலோச்சுவது யார்? - முட்டிமோதும் அமைச்சர்கள்!
சேனாபதி

கரூர் மாவட்டத்தை தி.மு.க-வின் கோட்டை ஆக்கியிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் கோவையின் மீது தீராத ஆசை. கட்சியினர் இடையே அவர் ஆதிக்கம் செலுத்தாவிட்டாலும், அதிகாரிகள் மட்டத்திலும், கோவை தொழில் அமைப்பினர் மத்தியிலும் லாபி செய்துவருகிறார். இவர்களைத் தவிர, தொண்டாமுத்தூர் தொகுதியில் வேலுமணிக்கு எதிராகப் போட்டியிட்ட கார்த்திகேய சிவசேனாபதியும் கோவையை மையமாகவைத்து சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கிவருகிறார்” என்றார்கள் விரிவாக.

யார் பொறுப்புக்கு வந்தாலும், மக்கள் நலப்பணிகளை அக்கறையுடன் செய்தால் மட்டுமே கோவையில் தி.மு.க கோலோச்ச முடியும்!