Published:Updated:

ஒன்றிய சேர்மன் பதவி: `இரு தரப்பாகப் பிரிந்து மல்லுக்கட்டும் திமுக!' - பரபரக்கும் மரக்காணம்

கடந்த சில தினங்களாக ஒன்றிய கவுன்சிலர்களைத் தங்களுக்கு ஆதரவாகத் திரட்டுவதில் இரு தரப்பும் தீவிரம் காட்டிவந்தனர்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட புதிதாகப் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் வார்டு வரையறைக்காக நடைபெறாமல் இருந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல், கடந்த அக்டோபர் மாதம் 6, 9 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. அக்டோபர் 12-ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பெருவாரியான இடங்களை தி.மு.க கூட்டணியே கைப்பற்றியிருந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியே அதிக அளவிலான இடங்களைக் கைப்பற்றியது.

விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, மாவட்ட சேர்மனாக ஜெயச்சந்திரனும், துணை சேர்மனாக ஷீலாதேவியும் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர். மாவட்டத்தில் மொத்தமுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில், 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கான சேர்மன், துணை சேர்மன் பதவியிடங்களுக்கு மட்டுமே மறைமுகத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மரக்காணம் ஒன்றியத்தில் மட்டும் மறைமுகத் தேர்தல், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. சேர்மன் பதவியைப் பிடிப்பதற்கு தி.மு.க-வினர் இரு தரப்பாகப் பிரிந்து, `நீயா... நானா!' என்ற போட்டியில் ஈடுபட்டதே இந்தத் தேர்தல் ஒத்திவைக்கப்பட முக்கியக் காரணமாக அமைந்துபோனது.

பாதுகாப்புப் பணியில் காவல்துறை
பாதுகாப்புப் பணியில் காவல்துறை

மரக்காணம் ஒன்றியத்தில், மொத்தமுள்ள 26 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 9-ம் தேதி நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தி.மு.க -17, அ.தி.மு.க- 3, சுயேச்சை - 3, பா.ம.க -2, வி.சி.க - 1 இடங்களை முறையே கைப்பற்றின.

மரக்காணம் ஒன்றிய சேர்மன் பதவி: திமுக-வில் இரு தரப்பினர் இடையே போட்டி - மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு

பெரும்பான்மைக்கு 14 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், தி.மு.க கூட்டணி மட்டுமே 18 இடங்களைக் கைப்பற்றியிருந்ததால், சுலபமாக சேர்மேன் பொறுப்பைப் பிடித்துவிடலாம் என்ற நிலை தி.மு.க-வுக்கு இருந்தது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக இருக்கும் கே.எஸ்.மஸ்தான், கட்சியின் சார்பில் மரக்காணம் ஒன்றிய சேர்மன் பதவிக்குப் போட்டியிட, தயாளன் என்பவருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார். இதனால், தி.மு.க கட்சியிலேயே பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயணித்துவரும் நல்லூர் கண்ணன் தரப்பு அப்செட்டில் இருந்தனர். இந்த நிலையில், மரக்காணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் தயாளனுக்கும், மரக்காணம் மத்திய ஒன்றிய தி.மு.க செயலாளர் நல்லூர் கண்ணனுக்கும் இடையே பலமான போட்டி ஏற்பட்டது.

கவுன்சிலர் பதவிக்கு நிற்கக் கூட ஆளில்லை, நாம் ஏன் வளரவில்லை? -ஆலோசனைக் கூட்டத்தில் ராமதாஸ் ஆதங்கம்!

இதனால் மரக்காணம் தி.மு.க-வில் உட்கட்சிப்பூசல் பூதாகரமானது. ``20 ஆண்டுகளுக்கு மேலாக நல்லூர் கண்ணன் ஒன்றியச் செயலாளராக இருந்தபோதிலும், கட்சியில் சேர்ந்து ஓரிரு ஆண்டுகளே ஆன தயாளன் தன் ஆதரவாளர் என்ற ஒரே காரணத்துக்காக அமைச்சர் மஸ்தான் அவருக்கு ஆதரவளிக்கிறார்" என்று தி.மு.க-வினர் ஆதங்கத்திலிருந்தனர். இந்த நிலையில், அக்டோபர் 20-ம் தேதி நடந்த ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மறைமுகத் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் தயாளன் (திமுக) தரப்பு.
மறைமுகத் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் தயாளன் (திமுக) தரப்பு.

அதையடுத்து, அக்டோபர் 22-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறவிருந்தது. பல ஆண்டுகளாக திமுக கட்சியிலிருந்த நல்லூர் கண்ணனுக்கு, அ.தி.மு.க., பா.ம.க., சுயேச்சை மற்றும் தன் கட்சியைச் சேர்ந்த சில கவுன்சிலர்களின் ஆதரவும் இருந்தது. இதனால், நல்லூர் கண்ணன் வெற்றிபெறும் சூழல் ஏற்பட்டதால், கண்ணனை மனுத்தாக்கல் செய்யவிடாமல் மற்றொரு தி.மு.க தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே உச்சகட்ட வார்த்தை மோதலும் ஏற்பட்டது. அதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், கைகலப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர்.

ஒன்றிய சேர்மன் பதவியைப் பிடிப்பதில் பலத்த போட்டி ஏற்பட்ட நிலையில், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் தரப்பினர், ``தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்" என மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதையடுத்து, மறுதினமே (23.10.2021), கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகள் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாகக் கண்ணன் நீக்கிப்படுவதாக துரைமுருகன் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் கண்ணன். இந்த வழக்கு கடந்த 11-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ``உறுப்பினர்களின் பாதுகாப்பையும், அவர்களுக்கு அழுத்தம் தரப்படாமல் இருப்பதையும் தேர்தல் ஆணையமும் காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும். மறைமுகத் தேர்தலுக்கான தேதியைத் தேர்தல் ஆணையம் விரைவில் தெரிவிக்க வேண்டும்" என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்று (22.11.2021) மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதனால், கடந்த சில தினங்களாக ஒன்றிய கவுன்சிலர்களை தங்களுக்கு ஆதரவாகத் திரட்டுவதில் இரு தரப்பும் தீவிரம் காட்டிவந்தனர்.

அர்ஜூனன் - தயாளன்
அர்ஜூனன் - தயாளன்

தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடமும், எஸ்.பி அலுவலகத்திலும் மனு கொடுத்திருந்தார் கண்ணன். இதற்கிடையே, ஏந்தூர் பெண் கவுன்சிலர் கஸ்தூரி (தி.மு.க) என்பவரை கண்ணன் தரப்பினர் நேற்று முன்தினம் கடத்திச் சென்றதாக அவர் கணவர் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஆன்லைன் மூலம் எஸ்.பி அலுவலகத்துக்கு மனு அளித்திருக்கும் கஸ்தூரி, ``என்னிடம் சிலர் ஓட்டுக் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். அதனால், என் கணவரின் அனுமதியோடு என் தாயார் வீட்டுக்கு வந்திருக்கிறேன். என் கணவரைக் கட்டாயப்படுத்தி இப்படிப் புகார் கொடுக்கவைத்திருக்கின்றனர். அந்தப் புகார்மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்" எனக் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது . இந்த நிலையில், இத்தனை பரபரப்புக்கும் மத்தியில், இன்று காலை மரக்காணம் ஒன்றிய சேர்மன் பதவிக்கான மறைமுகத் தேர்தல் தொடங்கியது. பிரச்னை ஏற்படாமலிருக்க சுமார் 200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஊழலில் உடையும் தடுப்பணை! - அமைதி காக்கும் தி.மு.க... கொந்தளிக்கும் விவசாயிகள்...

நல்லூர் கண்ணன் தி.மு.க கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதால், அவரின் சார்பாக அர்ஜூனன் (தி.மு.க) என்பவரும், அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளர் தயாளனும் (தி.மு.க) ஒன்றிய சேர்மன் பதவிக்கு இன்று கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். மறைமுகத் தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 14 வாக்குகளைப் பெற்ற தயாளன் வெற்றிபெற்றதாகவும், அவரை எதிர்த்து போட்டியிட்ட அர்ஜூனன் 12 வாக்குகளைப் பெற்று தோல்வியுற்றதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

தயாளன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைமறியல்
சாலைமறியல்

இந்த மறைமுகத் தேர்தலில் குளறுபடி நடந்திருப்பதாகக் கொதிக்கும் அர்ஜூனன் தரப்பினர், ``தங்களுக்கே 14 வாக்குகள் பதிவாகின, அதை மாற்றி அறிவித்துவிட்டனர். வீடியோ ஃபுட்டேஜ் மீது நம்பிக்கையிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு தொடர்வோம்" என்று கூறி மரக்காணம் ஈ.சி.ஆர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய சேர்மன் பதவிக்கான மறைமுகத் தேர்தலைத் தொடர்ந்து, தற்போது மரக்காணம் ஒன்றிய துணை சேர்மன் பதவிக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு