Published:Updated:

ஜெயலலிதா 2½ ஆண்டுக்கு... ராமதாஸ் 2½ ஆண்டுக்கு - இன்றைக்கு சிவசேனா கேட்பதை அன்றே கேட்ட ராமதாஸ்!

சுழற்சி முறையில் முதல்வர் பதவிகேட்டு சிவசேனா முரண்டு பிடித்ததால்தான் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த கோஷத்தை 18 ஆண்டுகளுக்கு முன்பே புதுச்சேரியில் எழுப்பியது பா.ம.க. சுவாரஸ்யம் மிக்க அதன் வரலாறு இது!

ராமதாஸ்
ராமதாஸ் ( Photo: Vikatan )

பொதுத்தேர்தல் முடிந்தால் அமைச்சரவை பதவியேற்பு நடக்கும். மாறாக மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்திருக்கிறது. காரணம் சுழற்சி முறை ஆட்சி. இந்த சுழற்சி முறை ஆட்சிக்கு இந்தியாவில் முதன்முறையாக விதை போட்டது பா.ம.க.

பா.ம.க. - சிவசேனா
பா.ம.க. - சிவசேனா

மகாராஷ்டிரா சட்டசபைக்குக் கடந்த மாதம் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டதில் பி.ஜே.பி 105 இடங்களையும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 இடங்களைக் கைப்பற்றியது. தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. சிறிய கட்சிகள் 16 இடங்களையும், சுயேச்சைகள் 13 இடங்களையும் பிடித்தனர்.

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில், ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. 161 இடங்களில் வெற்றிபெற்ற பி.ஜே.பி - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவசேனா கட்டையைப் போட்டது. ``முதல்வர் பதவியைச் சுழற்சி முறையில் தங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் அளிக்க வேண்டும்'' எனச் சொன்னது சிவசேனா. முதல்வர் பதவியைச் சரிசமமாகப் பகிர்ந்து கொள்வது, ஆட்சியில் சமபங்கு ஆகியவை தேர்தலுக்கு முன்பே பேசி முடிவு செய்யப்பட்ட விஷயம் எனக்கூறியது. ஆனால், பி.ஜே.பி இதனை ஏற்கவில்லை.

சிவசேனா
சிவசேனா

ஆட்சி அமைக்கும் முயற்சியில் முதலில் பி.ஜே.பி-க்கும் அடுத்து சிவசேனாவுக்கும் அழைப்பு விடுத்தார் கவர்னர் பகத்சிங் கோஷியாரி. பி.ஜே.பி ஒதுங்கி கொண்டது. சிவசேனா ஆட்சி அமைக்க அவகாசம் கேட்ட நிலையில் திடீரென ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலைக்கு மகாராஷ்டிரா போனதற்குக் காரணம் `சுழற்சி முறை முதல்வர்' கோஷம்தான். இந்த சுழற்சி முறை ஆட்சி அஸ்திரத்தை முதன்முதலில் எறிந்தவர் டாக்டர் ராமதாஸ். புதுச்சேரி ஆட்சியை தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்வதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தம் அது. சரியாக 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாற்றின் பின்னணியைப் பார்ப்போம்.

2001-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தன தமிழ்நாடும் புதுச்சேரியும். தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடந்து கொண்டிருந்தது. வாஜ்பாய் அமைச்சரவையில் தி.மு.க, பா.ம.க அமைச்சர்கள் அங்கம் வகித்தனர். இப்படியான சூழலில் முகாம் மாற தயாராகிக் கொண்டிருந்தது பா.ம.க. அதற்கான சூழல்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு தெரிய ஆரம்பித்தன.

ராமதாஸ்
ராமதாஸ்
Photo: Vikatan

2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதுச்சேரி லாஸ்பேட்டை கல்லூரி சாலையில் நடந்த பா.ம.க-யின் லாஸ்பேட்டை தொகுதி மாநாட்டில் பேசிய ராமதாஸ், ``2001-ம் ஆண்டு புதுச்சேரியில் பா.ம.க. ஆட்சி அமைக்கும்'' என அடித்துச் சொன்னார். அவர் சொன்னதை உண்மை ஆக்குவதைப் போலக் காய்கள் நகர்த்தப்பட்டன. தேர்தலுக்கு 3 மாதங்கள் முன்பு அரசியல் யுக்திகளைப் பயன்படுத்த ஆரம்பித்தது பா.ம.க. புதுச்சேரி முதல்வர் பதவியின் மீது ராமதாஸின் பார்வை படிந்திருந்தது.

2001 பிப்ரவரி 5-ம் தேதி திடீரென, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பா.ம.க விலகுவதாக அறிவித்தார் ராமதாஸ். பா.ம.க-வைச் சேர்ந்த எரிசக்தித் துறை அமைச்சர் சண்முகமும், பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பொன்னுசாமியும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர். அடுத்த நாள் அதாவது 2001பிப்ரவரி 6-ம் தேதி போயஸ் கார்டனுக்குப்போய், கூட்டணிக்கு அச்சாரம் போட்டார் ராமதாஸ். ``தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பா.ம.க விலக தி.மு.க-வே காரணம்'' என்றார் ராமதாஸ்.

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை ராமதாஸ் சந்தித்த போது...
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை ராமதாஸ் சந்தித்த போது...
Photo: Vikatan

ஆனால், வேறு சில காரணங்களும் இருந்தன. வட தமிழகத்தில் வன்னியர்கள் ஆதரவோடு பெரிய சக்தியாக பா.ம.க-வை மாற்றியிருந்தார் ராமதாஸ். புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகள் வட தமிழகத்துக்குள்தான் வருகின்றன. `தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம்' என வெளிப்படையாக பா.ம.க சொல்லி வந்தபோதும் புதுச்சேரியைப் பற்றி வாய்திறக்கவில்லை. 2001 தேர்தல் நேரத்தில்தான் அந்த கோஷத்தை வைத்தது.

புதுச்சேரி சட்டசபை
புதுச்சேரி சட்டசபை
Photo: Vikatan

அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்த போது `புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்கவேண்டும்' என ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தார் ராமதாஸ். 2001 தேர்தலில் தமிழகத்தில் 27 தொகுதிகளும் புதுச்சேரியில் 10 தொகுதிகளும் பா.ம.க-வுக்கு ஒதுக்கினார் ஜெயலலிதா. `புதுச்சேரியில் சுழற்சி முறை ஆட்சி நடைபெறும். அதில் முதல் இரண்டரை ஆண்டு பா.ம.க. ஆட்சி செலுத்தும்' என ஒப்பந்தம் போட்டு ஜெயலலிதாவும் ராமதாஸும் அதில் கையெழுத்திட்டனர். அதுவரை நடந்த தேர்தல்களில் நடக்காத விசித்திர ஒப்பந்தமாக அது அமைந்தது.

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை ராமதாஸ் சந்தித்த போது...
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை ராமதாஸ் சந்தித்த போது...
Photo: Vikatan

அப்போது புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. புதுச்சேரியில் பா.ம.க-வின் ஆட்சி பங்கீட்டைக் காங்கிரஸ் ஏற்கவில்லை. ராமதாஸும் விட்டுத் தராமல் பிடிவாதமாக இருந்தார். தமிழகத்தில் கூட்டணி முடிவுசெய்யப்பட்டபோதும் புதுச்சேரி கூட்டணியில் குழப்பம் நீடித்தது. புதுச்சேரி சட்டசபையின் மொத்த இடங்கள் 30. ``புதுச்சேரியில் காங்கிரஸ், த.மா.கா ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்து 9 தொகுதிகள் வழங்கப்படும். அ.தி.மு.க 11 தொகுதிகளில் போட்டியிடும். பா.ம.க. 10 தொகுதிகளில் நிற்கும்'' எனச் சொல்லி காங்கிரஸுக்குக் கெடு விதித்தார் ராமதாஸ்.

அப்போது புதுச்சேரி காங்கிரஸ் முதல்வராக இருந்த சண்முகம், பிரச்னையை சோனியாவின் கவனத்துக்குக் கொண்டுசென்றார். பிறகு ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார். புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமியும் முதல்வர் சண்முகமும் த.மா.கா தலைவர் மூப்பனாரைச் சந்தித்து பேசினார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிரச்னையை தீர்க்க ஜெயலலிதாவே தலையிட்டார். சண்முகத்துடனும் ராமதாஸுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார் ஜெயலலிதா. அதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வேறுவழியில்லாமல் புதுச்சேரியில் காங்கிரஸ் - த.மா.கா கூட்டணி தனியாகப் போட்டியிட முடிவு செய்தது. உடனே ராமதாஸ், ``புதுச்சேரியில் த.மா.கா - காங்கிரஸ் கட்சிகள் தனிக்கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் கூடுதல் தொகுதிகள் கேட்போம்'' என்றார். ஆனால், ஜெயலலிதா அப்படிக் கூடுதல் தொகுதிகள் எதையும் கொடுக்கவில்லை. 20 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட்டது.

ஜெயலலிதாவுடன் ராமதாஸ்
ஜெயலலிதாவுடன் ராமதாஸ்
Photo: Vikatan

உடன்பாடு ஏற்படாததால் த.மா.கா - காங்கிரஸ் கட்சிகள் ஒரு அணியாகவும் அ.தி.மு.க. - பா.ம.க. கட்சிகள் இன்னொரு அணியாகவும் தேர்தலை எதிர்கொண்டன. ஆனால், இந்த இரண்டு அணிகளும் தமிழகத்தில் ஒரே அணியில் இருந்ததுதான் விந்தை.

புதுச்சேரி தேர்தல் களம் தகிக்க ஆரம்பித்தது. ``பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக்குவோம், ஆண்டுதோறும் அன்னையர் தினம் கொண்டாடப்படும், இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக்குவோம், புதுச்சேரியைச் சிங்கப்பூராக மாற்றுவோம்" எனப் புதுச்சேரிக்கு மட்டும் தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பா.ம.க. கிட்டத்தட்ட புதுச்சேரி முழுவதையும் சுற்றிவந்து பிரசாரம் செய்தார் ராமதாஸ். தேர்தல் முடிவு பா.ம.க-வுக்கு பலத்த அடியைக் கொடுத்தது. `புதுச்சேரியில் ஆட்சி' என்கிற ராமதாஸின் ஆசையில் மண் விழுந்தது.

புதுச்சேரி சட்டசபை
புதுச்சேரி சட்டசபை

தமிழகத்தில் 27 தொகுதிகளில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்ற பா.ம.க., புதுச்சேரியில் போட்டியிட்ட 10 தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை. காங்கிரஸ் 11, த.மா.கா 2 எனக் காங்கிரஸ் - த.மா.கா கூட்டணி 13 இடங்களைக் கைப்பற்றியது. எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் அ.தி.மு.க-வின் ஆதரவைக் காங்கிரஸ் நாடியது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய நிபந்தனையற்ற ஆதரவை அளித்தார் ஜெயலலிதா. மீண்டும் முதல்வரானார் சண்முகம்

``புதுச்சேரியில் தோற்றதற்காகத் துவண்டு போய்விடவில்லை. வீடுவீடாகச் சென்று ஆதரவு திரட்டியும், புதுச்சேரி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியவில்லை. இதே பிரசாரத்தை தமிழகத்தில் ஈடுபட்டிருந்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்போம்'' எனத் தோல்விக்குப் பொழிப்புரை கொடுத்தார் ராமதாஸ்.

2016 தேர்தல் பிரசாரத்தில் பா.ம.க
2016 தேர்தல் பிரசாரத்தில் பா.ம.க

அதன்பிறகு 2006, 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் புதுச்சேரி சட்டசபைக்குத் தேர்தல் நடந்தாலும் சுழற்சிமுறை ஆட்சி கோஷத்தை பா.ம.க முன்வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அங்கே ஆட்சி அமைப்பது பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கோஷத்தை வலுவாக எழுப்பியது. 2016 சட்டசபைத் தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராகச் சொல்லித் தனித்துப் போட்டியிட்டது பா.ம.க. ``தமிழகத்தின் ஆட்சியைப் பிடிப்போம்'' எனப் பிரசாரம் செய்தது. ஆனால், ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க முடியவில்லை.

அதன்பிறகு சுழற்சி முறை ஆட்சி கோஷம் பக்கத்து மாநிலமான கர்நாடகாவிலும் எதிரொலிக்க ஆரம்பித்தது. 2004-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரஸுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளிக்கக் காங்கிரஸ் கட்சியின் தரம்சிங் முதல்வர் ஆனார். 2006-ம் ஆண்டு காங்கிரஸுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது மதசார்பற்ற ஜனதா தளம். இதனால் 20 மாதங்களில் தரம் சிங் அரசு கவிழ்ந்தது. பிறகு மதசார்பற்ற ஜனதா தளம், பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்தது. ஆட்சியைச் சுழற்சி முறையில் பங்கீட்டுக் கொள்ள இரண்டு கட்சிகளும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். அன்றைக்குக் கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்ட பி.ஜே.பி-தான் இன்றைக்கு மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் ஆட்சியைப் பங்கிட்டுக் கொள்ள முரண்டுபிடிக்கிறது.

எடியூரப்பா, குமாரசாமி
எடியூரப்பா, குமாரசாமி

கர்நாடகாவில் அன்றைக்குப் போட்ட ஒப்பந்தப்படி மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராகவும் பி.ஜே.பி-யின் எடியூரப்பா துணை முதல்வராகவும் பதவியேற்றனர். 20 மாதங்கள் குமாரசாமி முதல்வராக இருந்த நிலையில் பிறகு எடியூரப்பா முதல்வர் ஆனார். ஆனால், அமைச்சர்கள் ஒதுக்கீட்டில் நடந்த மோதலில் குமாரசாமி ஆதரவை வாபஸ் பெற 7 நாட்களில் முதல்வர் பதவியை இழந்தார் எடியூரப்பா.

சுழற்சி முறை ஆட்சியில் இப்படிச் சிக்கல் ஏற்பட்ட முன் அனுபவம் இருந்தால்தான் என்னவோ மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு சுழற்சி முறையில் அளிக்காமல் பி.ஜே.பி ஜகா வாங்குகிறது.