Published:Updated:

ஆச்சர்யமா இருக்கே... அப்படியா? - 70 வயது... நோ சுகர்... நோ பிபி!

சைதை துரைசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
சைதை துரைசாமி

சைதை துரைசாமியின் தாரக மந்திரம்

சைதாப்பேட்டையின் முன்னாள் எம்.எல்.ஏ., சென்னையின் முதல் அ.தி.மு.க மேயர் எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் சைதை துரைசாமி. அவருக்கு ஒரு சுவாரஸ்யமான உணவுப் பழக்கம் உண்டு. உணவை 48 முறை மென்று அது கூழாகிய பிறகே விழுங்குவாராம்.

மனிதர் ஓர் இட்லியுடன் சாப்பிட உட்கார்ந்தால், எழுந்திருக்க 20 நிமிடங்கள் ஆகும். சாப்பிடும்போது மொபைல்போன், டி.வி பார்க்கும் பழக்கம் கிடையாது. ``ஆமை வேகத்துல சாப்பிட்டா, எப்பண்ணே மத்த வேலையைப் பார்க்கிறது?’’ என ஆதரவாளர்கள் கேட்டால், ‘‘உணவைக் குடிக்க வேண்டும். தண்ணீரைச் சாப்பிட வேண்டும். எனக்கு 70 வயசு ஆகிடுச்சு. இதுவரைக்கும் சுகர், பிபி-னு எதுவும் கிடையாது. அதுக்கு என்னோட இந்த உணவுப் பழக்கம்தான் காரணம்” என்று கூலாகச் சொல்கிறார் துரைசாமி. கடந்த 35 வருடங்களாக இந்த உணவுப் பழக்கத்தை யாருக்காகவும் அவர் காம்ப்ரமைஸ் செய்துகொண்டதில்லை.

மேயராக இருந்த காலத்தில், ஒரு கேன் நிறைய சுக்கு, மிளகு, கருப்பட்டி கலந்த டீயைக் கொண்டுவந்து தன் அலுவலக வாசலில் வைத்துவிடுவார் சைதை துரைசாமி. யார் வேண்டுமானாலும் அதைப் பருகலாம். இந்த மூலிகை டீயைக் குடிக்கவென்றே மாநகராட்சி அலுவலகத்துக்கு வருபவர்கள் ஏராளம்.

ஆச்சர்யமா இருக்கே... அப்படியா? - 70 வயது... நோ சுகர்... நோ பிபி!

தன் பதவிக்காலத்தில், முதல் தானிய வகை உணவு கேன்டீனை ரிப்பன் பில்டிங்கில் திறந்தார். 1999-2000 ஆண்டு காலகட்டத்திலேயே, இயற்கை உணவு உற்பத்தியிலும், உணவுப் பழக்க வழக்கத்திலும் ஒத்த கருத்துடையவர்களைக் கொண்டு ‘இயற்கை உணவு மாநாட்டை’ சென்னையில் நடத்தினார். சித்தர்கள் வழிவந்த உணவுப் பழக்கத்தைத் தமிழக இளைஞர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்பது இவரது பெருவிருப்பம்.

கொரோனா காலத்துக்கு முன்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸைப் பார்ப்ப தற்காக சைதை துரைசாமி சென்றிருந்தார். சம்மணம் போட்டு அமர்ந்திருந்தவர், கையைக் கீழே ஊன்றாமலேயே எழுந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப்போன ராமதாஸ், ‘‘இந்த வயசுலயும் எப்படிப்பா இப்படி உடம்பை மெயின்டெயின் பண்ற?’’ என்று வியந்திருக்கிறார்.

பல கோடி ரூபாய்க்கு அதிபதி என்றாலும், இன்றும் கோரைப்பாயில்தான் படுத்து உறங்குகிறார். இதற்காகவே அவர் எங்கே சென்றாலும் அவர் காரில் ஒரு கோரைப்பாய் எப்போதும் பயணிக்கும். தன்னைச் சந்திக்கும் இளைஞர்களிடம், ‘‘தினமும் எட்டு பேரீச்சம்பழம் எடுத்துக்கோங்க!” என்று சொல்வதோடு அதற்கான காரணத்தையும் டீட்டெய்லாகக் குறிப்பிடுவாராம்.

“நொறுங்கத் தின்றால் நூறு வயது!” என்பது சைதை துரைசாமியின் தாரக மந்திரம். ``இந்த மந்திரத்தைக் கடைப்பிடித்தே இன்னும் 50 ஆண்டுகள் வாழ்வேன்’’ என்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz