Published:Updated:

ஸ்டாலின் அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரின் சுவாரஸ்ய சம்பவங்கள்!

சட்டப்பேரவை - ஸ்டாலின்
சட்டப்பேரவை - ஸ்டாலின்

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடர் அன்பு, ஆதரவு, காரசார விவாதம், கேலி, கிண்டல், வெளிநடப்பு என ஒரு முழு கமர்ஷியல் சினிமா பார்த்த அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இதில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களைத் தொகுப்பாகப் பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ஆம் தேதி முடிவடைந்திருக்கிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்ன பல்வேறு வாக்குறுதிகளுக்கான அறிவிப்புகள் தொடங்கி வாக்குறுதிகளில் சொல்லப்படாத பல முக்கிய அறிவிப்புகளும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளன.

சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வுக்குக் கடைசி நேரத் தீர்மானம், முதல்வரே கண்டித்த பின்னரும் தொடர்ந்த பாராட்டு உரைகள், உதயநிதி ஸ்டாலினுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் என சில நெருடல்களும் இந்தக் கூட்டத்தொடரில் நாம் பார்க்க முடிந்தது. இந்தக் கட்டுரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் சில முக்கிய சம்பங்களின் தொகுப்பாக அமைகிறது.

ஸ்டாலின் அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரின் டாப் 10 அறிவிப்புகள்!

தொடர் வெளிநடப்புகள்

கூட்டம் தொடங்கிய நாளில் வெளிநடப்பு செய்யத் தொடங்கிய அ.தி.மு.க கடைசி நாள் வரை வெளிநடப்பு மட்டுமே செய்துகொண்டிருந்தது. வெள்ளை அறிக்கை குறித்து விவாதிக்க நேரம் கேட்டு, ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் தீர்மானம், கொடநாடு கொள்ளை கொலை தொடர்பாக விசாரணை, சிஏஏ, வேளாண் சட்டங்கள், நீட் தேர்வு ஆகியவற்றுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது எனத் தொடர்ந்து பா.ஜ.க-வுடன் வெளிநடப்பு செய்துகொண்டே இருந்தது. “எங்கள் ஆட்சிக்காலத்திலும் தி.மு.க இவ்வாறுதான் வெளிநடப்பு செய்தது” என அ.தி.மு.க-வினர் கூறினார். ஆனால், அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது தங்களின் தனிப்பட்ட விவகாரம் சார்ந்ததாக இருந்தது எனவும் சட்டப்பேரவைக்குள் அவர்கள் எழுப்பிய கேள்விகளும் விவாதங்களும் கூட சுயநலன் சார்ந்துதான் இருந்தன எனவும் விமர்சனங்கள் எழுந்தன.

பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்யும் அ.தி.மு.க-வினர்
பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்யும் அ.தி.மு.க-வினர்

கூட்டணிக் கட்சியாக இருந்தபோதும் அ.தி.மு.க., பா.ஜ.க. வெளிநடப்பு செய்த எந்த விவகாரத்திலும் பா.ம.க இணைந்து வெளிநடப்பு செய்யவில்லை. தி.மு.க கொண்டுவந்த பெரும்பாலான தீர்மானங்களை அவர்கள் பாராட்டியதோடு ஆதரவும் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புகழ்ச்சி மழையில் நனைந்த சட்டப்பேரவை வளாகம்!

கூட்டத்தொடர் தொடங்கி மானியக் கோரிக்கைகள்மீது அமைச்சர்கள் பதிலளித்ததுவரை நன்றாகச் சென்றுகொண்டிருந்த பட்ஜெட் விவாதங்கள் சில ஆளும் எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களின் புகழுரைகளால் கொஞ்சம் முகம் சுளிக்க வைத்தது. அ.தி.மு.க காலத்தில்தான் மாண்புமிகு-க்கள் அதிகம் இருக்கும் என்றால் தி.மு.க காலத்திலும் அதே தொடர்கிறது என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கின. ஒரு கட்டத்தில் தமிழ்நாடு முதல்வரோடு சேர்ந்து உதயநிதி ஸ்டாலினையும் புகழத் தொடங்கிவிட்டனர். புகழ்ச்சி உரைகள் எல்லை மீறுவதைப் பொறுக்காமல் ஸ்டாலினே புகழ்ந்து பேசுவதை விட்டுவிட்டு கோரிக்கைகளையும் அதற்கான பதிலையும் கேட்டுப் பெறுங்கள் எனச் சொல்லும் அளவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியது. ஆனாலும், நீ தூக்கிக் காட்டிய ஒரு செங்கல் புனித ஜார்ஜ் கோட்டையை நடுங்க வைத்த செங்கலதிகாரம். ஒரு கல் ஒரு கண்ணாடி எனக் கல்லுக்கும் உங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது எனப் புகழத் தொடங்கிவிட்டார்.

உதயநிதி - ஸ்டாலின்
உதயநிதி - ஸ்டாலின்

மேலும் ஒரு தி.மு.க எம்.எல்.ஏ ஒன்றானவன், இரண்டானவன், மூன்றானவன் என ஸ்டாலினைப் புகழ இனிப் புகழ்ந்து பேசும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கும் அளவுக்கு ஸ்டாலினைக் கொண்டு சென்று நிறுத்தியது.

`` உதயநிதியைப் புகழ்ந்த எ.வ.வேலு முதல் கட்டளையிட்ட முதல்வர் ஸ்டாலின் வரை" - இன்றைய சட்டசபை ஹைலைட்ஸ்!

கலாய்க்கப்பட்ட எதிர்க்கட்சியினர்

வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானத்தைக் கண்டித்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க-வினரை துரைமுருகன் ஏதோ சொல்ல மீண்டும் வந்த ஓ.பன்னீர்செல்வம் “நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு” என்ற பாடலைப் பாடியதோடி என்னுடைய நிலைமை அவைத்தலைவர் துரைமுருகனுக்கும் தெரியும் எனச் சொல்லி வைத்தார். சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேச ஆரம்பித்ததும், பா.ஜ.க-வின் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதி காதுகள் இரண்டையும் பொத்திக்கொண்டார். இந்தக் காட்சி செய்தித்துறை அளித்த வீடியோவிலும் இடம்பெற்றது. சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின். அந்தத் தீர்மானத்தை எதிர்த்துப் பேசிய பா.ஜ.க-வின் சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், ‘‘மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை’’ என்றார். உடனே சபாநாயகர் அப்பாவு, ‘‘அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். நன்றி’’ என்றார். சுதாரித்துக்கொண்ட நயினார் நாகேந்திரன், ‘‘இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை’’ என்று திருத்தம் செய்தார்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

வெளிநடப்பு செய்யும் போது “கட்சி தர்மம். போயிட்டு வாங்க” எனவும் அப்பாவு நயினார் நாகேந்திரனை கலாய்த்து அனுப்பி வைத்தார். அப்பாவு மட்டுமல்லாது பல இடங்களில் அமைச்சர் துரைமுருகனும் எல்லோரையும் கலாய்த்துக்கொண்டேதான் பேரவைக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம்: `நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு’ - பாடலின் பின்னணி என்ன?

ஆளும் கட்சியைப் பாராட்டிய எதிர்க்கட்சிகள்.

கருணாநிதி நினைவிடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டபோது அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளும் இந்த அறிவிப்பை வரவேற்றன. இந்த அறிவிப்பு குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் “என் தந்தை தீவிர கருணாநிதி பக்தர். அவர் பெட்டியில் எப்போதும் கருணாநிதியின் ‘பராசக்தி' பட வசனப்புத்தகம் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் எடுத்துப் படித்துள்ளோம். வரலாற்றில் கருணாநிதியின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும். எனப் பேசித் தி.மு.க-வினரையே நெகிழச் செய்துவிட்டார். சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனைப் பாராட்டித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின். அப்போதும் அ.தி.மு.க-வின் ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க.-வின் நயினார் நாகேந்திரன், பா.ம.க.-வின் ஜி.கே.மணி என அனைவருமே ஒன்று திரண்டு வாழ்த்தினர்.

ஸ்டாலின் - எடப்பாடி
ஸ்டாலின் - எடப்பாடி

நீட் தேர்வு தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஸ்டாலினும் பாராட்டத் தவறவில்லை என்பதுதான் பேரவை நிகழ்ச்சியிலேயே மிகப்பெரிய ஹைலைட்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு