Published:Updated:

ஆச்சர்யமா இருக்கே அப்படியா?! - ஸ்டீயரிங்கைப் பிடிச்சாத்தான் உற்சாகம்!

செல்வப்பெருந்தகை
பிரீமியம் ஸ்டோரி
செல்வப்பெருந்தகை

தெரிந்த பிரபலம்... தெரியாத தகவல் - டிரைவிங் காதலர் செல்வப்பெருந்தகை

ஆச்சர்யமா இருக்கே அப்படியா?! - ஸ்டீயரிங்கைப் பிடிச்சாத்தான் உற்சாகம்!

தெரிந்த பிரபலம்... தெரியாத தகவல் - டிரைவிங் காதலர் செல்வப்பெருந்தகை

Published:Updated:
செல்வப்பெருந்தகை
பிரீமியம் ஸ்டோரி
செல்வப்பெருந்தகை

‘‘12 வயசுல வீட்டுக்குத் தெரியாம எங்க டிராக்டரை ஓட்ட ஆரம்பிச்சப்போ டிரைவிங் மேல எவ்வளவு ஆர்வம் இருந்துச்சோ, அது இப்போவரைக்கும் குறையலை. என் காருக்கு நான் டிரைவர் வெச்சுருந்தாலும், பெரும்பாலும் நான்தான் வண்டி ஓட்டுவேன்’’ - டிரைவிங்கை ஒரு கலை என்பார்கள்... அதிலும், அதை ஆத்மார்த்தமாக ரசித்துச் செய்பவர்களுக்கு மன அழுத்தங்களிலிருந்து விடுபடும் ஊக்கியாகவும் அது அமைந்துவிடுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரான செல்வப்பெருந்தகையும் அப்படித்தான் டிரைவிங் மீதான தனது காதலை ஆர்வத்துடன் பகிர்ந்துகொண்டார்!

‘‘சின்ன வயசுல இருந்து டிரைவிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எட்டாவது படிச்சப்போ, எங்க வீட்டு டிராக்டரை எடுத்துட்டுப் போய் விபத்தாகி, பெரிய பஞ்சாயத்தெல்லாம் ஆகியிருக்கு. கார், லாரின்னு எல்லா சைஸ் வாகனங்களையும் ஓட்டிப் பார்த்திருக்கேன். தினமும் காலையில எழுந்திருச்சு நடந்தா, தானா காருக்குப் பக்கத்துலதான் என் கால் போகும். ஒவ்வொரு முறையும் வண்டியில ஏறி ஸ்டீயரிங்கைப் பிடிக்கும்போது ரொம்ப உற்சாகமா உணர்வேன். ஒருநாள் ஸ்டீரியங்கைப் பிடிக்கலைன்னாலும் எதையோ இழந்த மாதிரி இருக்கும்!

‘இன்னைக்காவது என்னை ஓட்ட விடுங்க’னு சொல்லி என் டிரைவர் செல்லமா கோவிச்சிக்குவார். அவரை மட்டுமில்ல... தமிழ்நாட்டுல பல தலைவர்களை உட்காரவெச்சு நான் கார் ஓட்டிருக்கேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கேஸ்.இளங்கோவன்னு அந்த லிஸ்ட் பெருசு. கட்சியில இருக்குற இளைஞர்களை உட்காரவெச்சு ஓட்றப்ப, அவங்க சோஷியல் மீடியாவுல அதைப் பெருமையா போட்டுக்குவாங்க. ‘இதுல என்னப்பா இருக்கு’னு கேட்பேன்” என்பவர், தனது பயணங்களில் மறக்க முடியாத டிரைவிங் அனுபவம் ஒன்றையும் விழிவிரிய விவரித்தார்...

ஆச்சர்யமா இருக்கே அப்படியா?! - ஸ்டீயரிங்கைப் பிடிச்சாத்தான் உற்சாகம்!

“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில அப்ப நான் பொதுச்செயலாளரா இருந்தேன். ஒருமுறை சகோதரர் திருமாவளவனை பொடாவுல கைது பண்றதுக்காக வாரன்ட் போட்டுட்டாங்க. அவர் வீட்டைச் சுத்தி போலீஸ் நிக்குது. அவரோட அம்பாஸிடர் கார் நம்பரை எல்லா செக் போஸ்ட்லயும் கொடுத்து சல்லடை போட்டுத் தேடினாங்க. நான் என்னோட லேன்சர் கார்ல அவரைக் கூட்டிக்கிட்டு போலீஸ் சோதனை, செக் போஸ்ட் எல்லாத்தையும் தாண்டி மலைப்பட்டுங்கிற காட்டுப் பகுதிக்குள்ள கூட்டிட்டுப் போயிட்டேன். அதேபோல மறுநாள் போலீஸ் கண்ல படாம கூட்டிக்கிட்டு போய் எக்மோர் நீதிமன்றத்துல சரணடையவெச்சேன். செம த்ரில்லா இருந்துச்சு அந்தப் பயணம்.

ஆனா பாருங்க... என்னோட இந்தப் பழக்கம் என் பொண்ணுக்கும் வந்துருச்சு. என்னை மாதிரியே, எல்லாரையும் உட்காரவெச்சு அவ கார் ஓட்டிக்கிட்டு இருக்கா. காலேஜ் போகும்போது டிரைவரைப் பின் சீட்டுல உட்காரவெச்சு ஓட்டிக்கிட்டுப் போவா... கிளாஸ் முடிஞ்சதும் அவதான் ஓட்டிக்கிட்டு வீட்டுக்கு வருவா’’ என்பவரில் விரல் அனிச்சையாக கார் ஸ்டீயரிங் மீது தாளமிடுகின்றன... டிரைவிங் மீதான அவ்வளவு காதல் வெளிப்படுகிறது அந்த ஸ்பரிசத்தில்!