தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காங்கிரஸ் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடந்தது. நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இது. இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ``முன்பு எப்போதையும் விட முன்னோக்கிச் செல்லும் பாதை மிகவும் சவாலாக உள்ளது. கட்சி தொண்டர்களின் மன உறுதிக்கும் பெரும் நெருக்கடியைத் தரும்.
கட்சி அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் ஒற்றுமை தேவைப்படுகிறது. அந்த ஒற்றுமை மிகவும் அவசியம். அதை உறுதிசெய்யத் தேவையான அனைத்தையும் செய்ய நான் உறுதியாக இருக்கின்றேன். காங்கிரஸின் மறுமலர்ச்சி நமக்கு மட்டும் முக்கியமான விஷயம் கிடையாது. அது நம் ஜனநாயகம் மற்றும் சமூகத்துக்கும் அவசியம்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பா.ஜ.க-வின் பிளவுபடுத்தும் செயல்திட்டம் வழக்கமான அம்சமாகவே மாறிவிட்டது. அதற்காக வரலாறு தவறாகத் திரிக்கப்பட்டுள்ளது. பிளவுபடுத்தும் அரசியலை மாநிலத்துக்கு மாநிலம் செய்துவருகிறார்கள். இந்த வெறுப்பு சக்திக்கு எதிராக நாம் அனைவரும் போராட வேண்டும். பல நூறாண்டு பன்முகத்தன்மை கொண்ட நமது சமூகத்தில் உள்ள ஒற்றுமையையும், நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க நாங்கள் அனுமதிக்க முடியாது.
எதிர்க்கட்சிகளையும், அதன் தலைவர்களையும் ஆளும் பா.ஜ.க குறி வைக்கிறது. அதற்காக அரசு இயந்திரம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. எந்த அச்சுறுத்தல்கள் மூலம் எங்களைப் பயமுறுத்தவோ அல்லது அமைதிப்படுத்தவோ முடியாது" என்று பேசினார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.