Published:Updated:

`மோடியின் வெற்றி', `பி.ஜே.பி. பிளான்'... அயோத்தி பற்றி சர்வதேச ஊடகங்கள் பார்வை!

கடந்த 9-ம் தேதியன்று, உச்சநீதிமன்றம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த நிலப் பிரச்னை பற்றிய தீர்ப்பை அளித்தது. பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு, சர்வதேச ஊடகங்களைக் கவனிக்க வைத்தது. இந்தத் தீர்ப்பு பற்றி சர்வதேச ஊடகங்களின் பார்வை எப்படியிருந்தது?

பாபர் மசூதி - அயோத்தி ராமர் கோயில்
பாபர் மசூதி - அயோத்தி ராமர் கோயில்

அயோத்தி வழக்கில் கடந்த நவம்பர் 9 அன்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு, இந்திய ஊடகங்களை மட்டுமின்றி, சர்வதேச ஊடகங்களையும் கவனிக்கவைத்தன. ஏறத்தாழ அனைத்து சர்வதேச ஊடகங்களும், அயோத்தி தீர்ப்பு பற்றிய செய்தியை முக்கியச் செய்தியாக வெளியிட்டன.

ராமாயணம் மீதான இந்துக்களின் நம்பிக்கை, 1992-ம் ஆண்டு நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு, அதன்பின் நிகழ்ந்த கலவரங்கள், இந்தியாவின் தற்போதைய பிரதமர் மோடி அரசின் வலதுசாரி அரசியல் முதலான அம்சங்கள், சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் பெரும்பாலானவற்றில் இடம் பெற்றிருந்தன. இந்தப் பின்னணியில், அயோத்தி தீர்ப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.

BBC News
BBC News
BBC Website
`அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை!’ -இப்போது எப்படி இருக்கிறது அயோத்தி? #VikatanInAyodhya

"கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தபோதும், தீர்ப்பு வெளியானவுடன் உச்சநீதிமன்றத்துக்கு வெளியில், `ஜெய் ஸ்ரீராம்!' என முழக்கங்கள் கேட்டதாக, நீதிமன்றத்தில் இருந்த பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர்" என்ற பி.பி.சி செய்திக்கட்டுரை, அயோத்தி நிலப் பிரச்னை இந்திய மக்களை இரு துருவங்களாகப் பிரித்தும், விரக்தியடையச் செய்தும் உள்ளதாக சுட்டிக் காட்டுகிறது. மேலும், பி.பி.சி தளத்தின் கட்டுரையில் வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவின் கருத்து சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் `நிலைமையைக் கணக்கில் கொண்டு' தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சஞ்சய் ஹெக்டே கருத்து தெரிவித்துள்ளார்.

"சர்ச்சைக்குரிய நிலத்தில் இந்துக் கோயில் கட்டுவதற்கு இந்திய நீதிமன்றம் ஆதரவு" என்ற தலைப்போடு வெளிவந்த `தி வாஷிங்டன் போஸ்ட்' கட்டுரை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்து தேசியவாதிகளின் நீண்ட கால கனவு எனவும், இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் குறிக்கோள் என்றும் கூறுகிறது. 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றவுடன், மோடி தனது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயலாற்றியுள்ளதாகக் கூறியுள்ளது.

``அரசு, ஆளுங்கட்சி மற்றும் அவர்களது தாய் அமைப்பு - அனைத்தும் ஒரே கருத்தில் நிற்கின்றன!"
எழுத்தாளர் திரேந்திர ஜா, `தி வாஷிங்டன் போஸ்ட்' கட்டுரையில்.
The Washington Post
The Washington Post
The Washington Post website

"மோடிக்கும் அவரது கட்சிக்கும் இந்தியா என்பது அடிப்படையில் இந்து நாடு; அந்நாட்டின் நிறுவனர்களால் பரப்பப்பட்ட மதச்சார்பற்ற குடியரசு அல்ல" எனக்கூறும் 'தி வாஷிங்டன் போஸ்ட்' கட்டுரை, அயோத்தி பிரச்னை பற்றி புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர் திரேந்திர ஜா கூறிய கருத்தையும் வெளியிட்டுள்ளது. "அரசு, ஆளுங்கட்சி மற்றும் அவர்களது தாய் அமைப்பு - அனைத்தும் ஒரே கருத்தில் நிற்கின்றன" எனக் கூறியுள்ளார் திரேந்திர ஜா.

``மற்றொரு மாபெரும் வெற்றி!"
தி கார்டியன்

`தி கார்டியன்' தளத்தில், `முஸ்லிம்கள் கோரிய நிலத்தை இந்துக்களுக்கு அளித்தது இந்திய உச்ச நீதிமன்றம்" என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பு பிரதமர் மோடிக்கு `மற்றொரு மாபெரும் வெற்றி' எனக் கூறியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற 6 மாதங்களுக்குள், இந்து தேசியத்துக்குத் தங்கள் நிகழ்ச்சி நிரலான ராமர் கோயில் மீட்பை, மோடியும், அவரது பி.ஜே.பி கட்சியும் செய்துள்ளதாக, `தி கார்டியன்' கூறியுள்ளது.

``மொகாலாயர்கள், அதன்பின் நிகழ்ந்த காலனிய ஆட்சி ஆகியவற்றின் பல நூற்றாண்டு ஆட்சிக்குப் பிறகு, இந்தியாவின் தற்போதைய ஆளுங்கட்சி, இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, மிகப்பெரிய தலைமையாக மாறியுள்ளதாக வலதுசாரி இந்துக்கள் கருதுகின்றனர். ஆனால், முஸ்லிம்கள் இந்தத் தீர்ப்பு தங்களை இரண்டாம் தரக் குடிமக்களாகத் தாழ்மைப்படுத்தும் எனவும், இதனால் இந்து தீவிரவாதிகள் பலம் பெறுவர் எனவும் கருதுகின்றனர்!"
தி நியூயார்க் டைம்ஸ்
The Newyork Times
The Newyork Times
The Newyork Times website

தொடர்ந்து பி.ஜே.பியை மதவாதக்கட்சியாக விமர்சனம் செய்துவந்த `தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, அயோத்தி தீர்ப்பை, "அயோத்தியா வழிபாட்டு நிலப் பிரச்னையில் இந்துக்களுக்கு ஆதரவளித்தது இந்திய நீதிமன்றம்" என்று வெளியிட்டுள்ளது. மேலும், `தி நியூயார்க் டைம்ஸ்' கட்டுரையில் "மொகாலாயர்கள், அதன்பின் நிகழ்ந்த காலனிய ஆட்சி ஆகியவற்றின் பல நூற்றாண்டு ஆட்சிக்குப் பிறகு இந்தியாவின் தற்போதைய ஆளுங்கட்சி, இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, மிகப்பெரிய தலைமையாக மாறியுள்ளதாக வலதுசாரி இந்துக்கள் கருதுகின்றனர். ஆனால் முஸ்லிம்கள் இந்தத் தீர்ப்பு தங்களை இரண்டாம் தரக் குடிமக்களாகத் தாழ்மைப்படுத்தும் எனவும், இதனால் இந்து தீவிரவாதிகள் பலம் பெறுவர் எனவும் கருதுகின்றனர்" என்று கூறியுள்ளது.

சி.என்.என் தளம் அயோத்தி வழக்கின் வரலாற்றையும், பாபர் மசூதி இடிப்பையும் சுட்டிக்காட்டியதோடு, இந்தத் தீர்ப்பு மூலம், `அரசியல் ரீதியிலான நிலத்தகராறு' முடிவுக்கு வந்துள்ளதாக செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரைக்கு, "சர்ச்சைக்குரிய நிலத்தின் மீது கட்டுமானம் மேற்கொள்ள இந்துக்களுக்கு அனுமதியளித்து, இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு" எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

Al Jazeera
Al Jazeera
Al Jazeera website
அயோத்தி விவகாரம்... கருணாநிதி பாணியைப் பின்பற்றினாரா ஸ்டாலின்?

மத்திய கிழக்கு நாடுகளின் பின்னணியில் இயங்கும் சர்வதேச ஊடகமான அல் ஜசீரா, "அயோத்தியா தீர்ப்பு: சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களுக்கு அளித்தது இந்திய உச்ச நீதிமன்றம்" என்று கட்டுரை வெளியிட்டுள்ளது. அயோத்தி நிலம் பற்றிய வரலாறு, ஹைதராபாத் சட்டப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் கருத்து ஆகியவற்றோடு பாகிஸ்தான் அரசு அயோத்தி தீர்ப்பைக் கண்டித்ததையும் சுட்டிக் காட்டுகிறது.

அல் ஜசீரா கட்டுரையில் அயோத்தி தீர்ப்பு வெளியானபோது, அயோத்தியின் சூழல் பற்றியும், தீர்ப்பைப்பற்றி அயோத்தி வாழ் முஸ்லிம்களின் கருத்து பற்றியும் குறிப்பிட்டுள்ளது. "நீதிமன்றம் முஸ்லிம்களுக்கு எங்கு நிலம் வழங்கும் எனக் கூறவில்லை. அதைக்குறிப்பிட்டிருந்தால், எங்களுக்கு நிம்மதியாக இருந்திருக்கும். மற்றபடி, வழக்கு முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி. ஏனென்றால், இந்த வழக்கைக் காரணம் காட்டி, எங்கள் பகுதியில் பலமுறை இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது" என அயோத்தியின் சையத் படா பகுதியைச் சேர்ந்த முகமது ஷிபு கான் கூறியதாகவும் கூறியுள்ளது.

கல்ஃப் நியூஸ் (Gulf News) தளம் " 'இந்துக்களுக்கு அயோத்தி நிலம் கிடைக்கும்; முஸ்லிம்களுக்கு மாற்று இடம் அளிக்கப்படும்' - இந்திய உச்ச நீதிமன்றம்" என்று கட்டுரை வெளியிட்டுள்ளது. அயோத்தி வழக்கு தொடர்பாக, பல்வேறு கட்டுரைகளையும் இந்தத் தளம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

ராமர் கோயில் கட்டுவது என்பது இந்திய வரலாற்றிலிருந்து மொகலாயர்களின் தடங்களை நீக்குவதற்கும், இந்து பெரும்பான்மைவாதத்தை நிலைநாட்டுவதற்கும், முஸ்லிம்களை ஒதுக்குவதற்குமான பி.ஜே.பி-யின் திட்டங்களில் ஒன்று!"
Le Monde
Le Monde
Le Monde
Le Monde website

பிரான்ஸ் நாட்டின் `லெ மான்டே' (Le Monde) பத்திரிகை அயோத்தி வழக்கை "இந்தியாவில் நிகழும் வழக்கமான நிகழ்வுபோல், இதிலும் மதம், அரசியல் ஆகியவை கலந்திருக்கின்றன" எனச் சுட்டிக்காட்டியுள்ளது. "ராமர் கோயில் கட்டுவது என்பது இந்திய வரலாற்றிலிருந்து மொகலாயர்களின் தடங்களை நீக்குவதற்கும் இந்து பெரும்பான்மைவாதத்தை நிலைநாட்டுவதற்கும் முஸ்லிம்களை ஒதுக்குவதற்குமான பி.ஜே.பி-யின் திட்டங்களில் ஒன்று" என விமர்சிக்கும் `லெ மான்டே', பாபர் மசூதி இடிப்பு, 2002-ம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை முதலானவற்றோடு இந்த விவகாரத்தை பி.ஜே.பி-யின் வளர்ச்சியாகப் பார்க்கிறது.

`உலகின் மிகப்பெரிய தொல்லியல் பிரச்னை!'
இன்டிபென்டன்ட்

`இன்டிபென்டன்ட்' தளம், `அயோத்தியா வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால், "உலகின் மிகப்பெரிய தொல்லியல் பிரச்னை' முடிவுக்கு வந்தது" என்ற தலைப்பில், அயோத்தி வழக்கை உலகின் மிகப்பெரிய தொல்லியல் பிரச்னையாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் பிரதானமாக அயோத்தி நிலத்தின் தொல்லியல் தொடர்பான விவாதங்களும், தீர்ப்பில் அவற்றைப் பற்றிய அம்சங்களும் அலசப்பட்டுள்ளன.

சீனாவின் `குளோபல் டைம்ஸ்' தளம், "இந்திய உச்சநீதிமன்றம் பிரச்னைக்குரிய நிலத்தை இந்துக்களுக்கு அளித்தது" என்று செய்தி வெளியிட்டுள்ளது.

"மோடி அரசு இந்தியாவின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை மாநிலத்தின் சுயாட்சியைப் பறித்துள்ளது; பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம் குடிமக்களின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது."
தி வால்ஸ்ட்ரீட் ஜர்னல்
The Wall street journal
The Wall street journal
The Wall street journal website

"பல ஆண்டுகளாக இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய பல கட்சிகள் முயன்றன. அதில் பி.ஜே.பி வென்றிருக்கிறது" எனக் கூறுகிறது `தி வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்டுள்ள கட்டுரை. "கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றது முதல், மோடி அரசு இந்தியாவின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை மாநிலத்தின் சுயாட்சியைப் பறித்துள்ளது; பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம் குடிமக்களின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது" என்று கருத்து தெரிவித்துள்ளது 'தி வால்ஸ்ட்ரீட் ஜர்னல்'.

அயோத்தி தீர்ப்பு வெளியான அதே நாளில் கர்தார்பூர் வழித்தடம் தொடங்கப்பட்டதால், பாகிஸ்தான் ஊடகங்கள் பெரும்பாலும் அதைப் பற்றி தலைப்புச்செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், பாகிஸ்தான் டுடே, டாவ்ன் முதலான பத்திரிகைகள் அயோத்தி வழக்கு பற்றிய செய்திகளில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை `இந்திய நீதித்துறை நீதியின் கோரிக்கையைப் பற்றிப் பிடிக்கவில்லை’ எனக் கூறியதை முன்னிலைப்படுத்தியுள்ளன. அயோத்தி தீர்ப்பை முன்வைத்து, இந்தியாவில் சிறுபான்மை மக்களின் நிலைமை பற்றி பாகிஸ்தான் ஊடகங்கள் எழுதியுள்ளன. இந்தத் தீர்ப்பு, `இந்துத்துவத்தின் படைக்கு வலிமை தருவதாக பாகிஸ்தானின் 'டாவ்ன்' பத்திரிகை தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

Dawn
Dawn
Dawn website
பி.பி.சி முதல் டாவ்ன் வரை... அயோத்தி தீர்ப்பு பற்றி சர்வதேச ஊடகங்களின் பார்வை என்ன? #VikatanPhotoCards

மற்ற விவகாரங்களைவிட, அயோத்தி வழக்குத் தீர்ப்பு சர்வதேச ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக இருந்ததோடு, மோடி அரசின் மீதும், இந்திய நீதித்துறை மீதும் விமர்சனமாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo