
நான்தான் வாழும் ஏசு’’ என்று சொல்லி மதப் பிரசாரத்தில் இறங்கியவர், தனது பெயரை ‘டோங்கரேன் வா ஏசு’ எனவும் மாற்றிக்கொண்டார்

அவதிப்படும் ஆப்கன் பெண்கள்!
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, 6-ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்கக் கூடாது, ஆண் துணையில்லாமல் வெளியே வரக் கூடாது என, பெண்களுக்கு எதிரான பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. இந்தக் கொடுமைகளின் உச்சமாகத் தற்போது ஓர் புதிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்கள் தாலிபன்கள். தங்களுக்கு முந்தைய ஆட்சியின்போது விவாகரத்துப் பெற்ற பெண்கள் அனைவரும் கணவர்களோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதே அந்த உத்தரவு. சில பகுதிகளில் தனியாக வாழும் பெண்களின் வீடுகளில் புகுந்து, அவர் களைக் கணவர்களுடன் சேர்ந்து வாழச் சொல்லி தாலிபன்கள் நிர்பந்திப்பதாகவும் செய்திகள் வெளியாகி யிருக்கின்றன. `கணவர்களின் கொடுமை தாங்காமல் விவாகரத்து பெற்ற எங்களுக்கு, தற்போது என்ன செய்வ தென்றே தெரியவில்லை’ எனக் கண்ணீர் வடிக்கிறார்கள் ஆப்கன் பெண்கள். சிலரோ இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றனர். ஆனால், ``தாலிபன்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே பெண் நீதிபதிகளை நீக்கியதோடு, பெண்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தையும் மூடிவிட்டனர். எனவே, தற்போது நீதிமன்றத்தை நாடியவர்களுக்கு நீதி கிடைப்பது சந்தேகமே’’ என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினத்தன்று ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், ``உலகிலேயே பெண்களுக்கு எதிராகக் கடும் அடக்குமுறைகள் கொண்ட நாடு ஆப்கானிஸ்தான்’’ என்று குட்டு வைத்திருக்கிறது.

பீதியில் வாழும் ஏசு!
கென்யாவின் டோங்கரேன் பகுதியைச் சேர்ந்த சிமியு என்பவர், 2009-ல் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். குணமான பின்பு, ``நான்தான் வாழும் ஏசு’’ என்று சொல்லி மதப் பிரசாரத்தில் இறங்கியவர், தனது பெயரை ‘டோங்கரேன் வா ஏசு’ எனவும் மாற்றிக்கொண்டார். தன் கணவர் தண்ணீரைத் தேநீராக மாற்றினார் என சிமியுவின் மனைவியும் பிரசாரத்தில் இறங்க, இவர்களைத் துதிபாட ஒரு தனிக் கூட்டமும் உருவாகிவிட்டது. இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், ``உங்களைச் சிலுவையில் அறைகிறோம். மூன்றாம் நாள் நீங்கள் உயிர்த்தெழுந்தால் மட்டுமே வாழும் ஏசு என நம்புவோம்’’ என்று கிளப்பிவிட, `என்னைச் சிலுவையில் அறைந்து கொல்ல நினைக்கிறார்கள். பாதுகாப்பு கொடுங்கள்’ எனக் காவல்துறையை நாடியிருக்கிறார் அந்த வாழும் ஏசு!

நாடாளுமன்றத்தில் காதலைச் சொன்ன எம்.பி!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்தவர் தொழிலாளர் கட்சி எம்.பி நாதன் லாம்பெர்ட். இவர் நாடாளுமன்றத்தில் பேசும்போது தன்னுடைய சக எம்.பி நோவா எர்லிச்சைப் பார்த்து, ``நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?’’ எனக் கேட்க, அங்கிருந்த அனைத்து எம்.பி-க்களும் கரவொலி எழுப்பிய காணொளி, சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் நாதன், ``நான் தற்போது மோதிரம் கொண்டுவரவில்லை. இன்று இரவு நாம் மோதிரம் மாற்றிக்கொள்ளலாம்’’ என்றும் நோவாவைப் பார்த்துக் கூற, ஏற்கெனவே இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான நாதனைத் திருமணம் செய்துகொள்ள, நோவாவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்!