சமூகம்
அலசல்
Published:Updated:

நியூஸ் எம்பஸி

கொல்லப்பட்ட 262 விளையாட்டு வீரர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொல்லப்பட்ட 262 விளையாட்டு வீரர்கள்!

செயற்கை நுண்ணறிவில் பெரும் அதிசயங்களை நிகழ்த்திவந்த சாட்ஜிபிடி-க்கு சமீபத்தில் தடைவிதித்தது இத்தாலி அரசு. `பயனர்களின் தரவுகளை முறையற்ற வகையில் சேகரிக்கிறது’ என்பதே தடைக்கு அரசு கூறிய காரணம்.

காதலிக்க, கல்லூரிகளுக்கு விடுமுறை?

சீன மக்கள்தொகை கடந்த சில ஆண்டுகளாக கணிசமாகக் குறைந்துவருகிறது. 2021-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 2022-ம் ஆண்டில் சுமார் 8,50,000 பேர் குறைந்திருப்பதாக அந்த நாட்டின் தேசிய புள்ளியியல்துறை தெரிவித்திருக்கிறது. பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக 2021-ல், மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிக்குச் சிறப்பு மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்தது சீன அரசு. இந்த நிலையில், சீனாவின் சிச்சுவான் மாகாணத்திலுள்ள ஒன்பது தொழிற்கல்வி கல்லூரிகளுக்கு வசந்தகாலத்தைக் கொண்டாட விடுமுறை அளித்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. இந்த ஆண்டு, வசந்தகால விடுமுறைக்கான வாசகமாக `பூக்களை அனுபவியுங்கள், காதலில் விழுங்கள்’ என்ற வாசகம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. `கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்கவே சிச்சுவான் மாகாணம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது’ என்று விமர்சனம் எழுந்தது. ஆனால், ``சீனாவின் சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படியும், வெளியே சென்று நண்பர்களை உருவாக்கிக்கொள்ள விடுமுறை கோரிய மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் 2019-ம் ஆண்டு முதலே இந்த விடுமுறை கொடுக்கப்பட்டுவருகிறது’’ என்று கல்லூரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

ஜார்ஜியா மெலோனி
ஜார்ஜியா மெலோனி

ஆங்கிலத்துக்குத் தடை!

செயற்கை நுண்ணறிவில் பெரும் அதிசயங்களை நிகழ்த்திவந்த சாட்ஜிபிடி-க்கு சமீபத்தில் தடைவிதித்தது இத்தாலி அரசு. `பயனர்களின் தரவுகளை முறையற்ற வகையில் சேகரிக்கிறது’ என்பதே தடைக்கு அரசு கூறிய காரணம். இந்த நிலையில், ஆங்கிலத்துக்கும் தடை விதிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி. ``அதிகாரபூர்வ தகவல் தொடர்புகளில் இத்தாலிய மொழிக்கு பதிலாக வெளிநாட்டு மொழிகளை, குறிப்பாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் அரசு, தனியார் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் யூரோ (சுமார் ரூ.89 லட்சம்) அபராதம் விதிக்கப்படும். ஆங்கில மொழியின் ஆதிக்கத்தால் இத்தாலிய மொழியும், மரபும் அழிந்துவருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது’’ என மெலோனி தெரிவித்திருக்கிறார். ``ஆங்கிலம் இல்லையென்றால் உலகத்தோடு நம்மால் போட்டிபோட முடியாது’’ என்று இத்தாலியர்கள் பலர் எதிர்த்தாலும், ஆங்கிலத் தடைக்காக நாடாளுமன்றத்தில் சட்டமியற்றுவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது இத்தாலி அரசு.

கொல்லப்பட்ட 262 விளையாட்டு வீரர்கள்!
கொல்லப்பட்ட 262 விளையாட்டு வீரர்கள்!

கொல்லப்பட்ட 262 விளையாட்டு வீரர்கள்!

13 மாதங்களுக்கு மேலாக ஓயாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ரஷ்யா - உக்ரைன் போர். இந்தப் போரில் தங்களது நாட்டைச் சேர்ந்த 262 விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது உக்ரைன் விளையாட்டுத்துறை அமைச்சகம். மேலும், 363 விளையாட்டுக் கூடங்களையும் ரஷ்யப் படைகள் அழித்துவிட்டதாகக் கூறியிருக்கிறது. கூடவே, ``ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை, ஒலிம்பிக்ஸ் உட்பட எந்தச் சர்வதேசப் போட்டியிலும் விளையாட அனுமதிக்கக் கூடாது’’ என சர்வதேச ஜிம்னாஸ்டிக் சம்மேளனத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறது உக்ரைன். `ரஷ்ய வீரர்களை விளையாட அனுமதித்தால், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் உக்ரைன் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்’ எனவும் உக்ரைன் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.