அரசியல்
அலசல்
Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் எம்பஸி

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்திலுள்ள பள்ளியில், மொத்தம் 1,040 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இவர்களில் தொடக்க கல்வி பயிலும் மாணவிகளும் அடக்கம்.

மீண்டும் உக்கிரமாகும் உக்ரைன் போர்!
மீண்டும் உக்கிரமாகும் உக்ரைன் போர்!

மீண்டும் உக்கிரமாகும் உக்ரைன் போர்!

ஓராண்டுக்கும் மேலாக நடைபெறும் ரஷ்யா - உக்ரைன் போர், கடந்த ஒரு வாரமாகத் தீவிரமடைந்திருக்கிறது. சில மாதங்களாகக் குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைத்திருந்த ரஷ்யா, தற்போது மீண்டும் வசிப்பிடங்களை நோக்கி குண்டுமழை பொழிந்துவருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திவருகிறது ரஷ்யா. உமான் நகரைச் சேர்ந்த குடியிருப்புப் பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதலில், நான்கு குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது உக்ரைன். பாவ்லோஹ்ராட் நகரில் 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், `கத்தாரில் நடைபெறவிருக்கும் சர்வதேச ஜூடோ போட்டிகளில் ரஷ்யா கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதால், நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம்’ என்றிருக்கிறது உக்ரைன்.

டியூபில் மிதந்து செல்லும் ஆசிரியர்கள்!
டியூபில் மிதந்து செல்லும் ஆசிரியர்கள்!

டியூபில் மிதந்து செல்லும் ஆசிரியர்கள்!

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்திலுள்ள பள்ளியில், மொத்தம் 1,040 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இவர்களில் தொடக்க கல்வி பயிலும் மாணவிகளும் அடக்கம். இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் தினமும் காற்று நிரப்பிய டயர் டியூப் ஒன்றைத் தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். ``பள்ளிக்கும் எங்களது வீடுகளுக்கும் இடையே 46 மீட்டர் அகலம்கொண்ட குனார் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. நதியைக் கடக்க பாலம் எதுவும் இல்லாததால், உயிரைப் பணயம் வைத்து டியூபின் உதவியோடு நதியில் மிதந்துதான் பள்ளிக்குச் செல்கிறோம். மாணவர்கள் படிப்பின்மீது ஆர்வம்கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கான சரியான பள்ளிக் கட்டடங்களோ, புத்தகங்களோ இங்கு இல்லை’’ என்கின்றனர் ஆசிரியர்கள். தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆப்கனிலுள்ள கல்விக்கூடங்களின் நிலைமை மேலும் மோசமாகிவிட்டதாகச் சொல்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

டியூபில் மிதந்து செல்லும் ஆசிரியர்கள்!
டியூபில் மிதந்து செல்லும் ஆசிரியர்கள்!

550 முறை விந்தணு தானம் செய்த `தாராள பிரபு’!

ஜோனாதன் ஜேக்கப் என்ற 41 வயதுக்காரர்மீது, நெதர்லாந்து நாட்டின் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்று உலகம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது. `ஜோனாதன் இதுவரை 550 முறைக்கு மேல் விந்தணு தானம் செய்திருக்கிறார். ஆனால், இந்தக் கணக்கை தன்னிடம் விந்தணு பெற முயலும் பெற்றோர்களிடம் மறைத்திருக்கிறார். மேலும், எதிர்காலத்தில் விந்து தானம் மூலம் பிறந்த குழந்தைகள் தங்களுக்கு நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகள் இருப்பதை அறிந்து உளவியல்ரீதியாகப் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. எனவே, அவர் விந்தணு தானம் செய்வதற்குத் தடைவிதிக்க வேண்டும்’ என்று நெதர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தது தன்னார்வ அமைப்பு ஒன்று. இதனால், `ஜோனாதன் இனி விந்தணு தானம் செய்யக் கூடாது. மீறினால், அவருக்கு 1,00,000 யூரோஸ் (சுமார் ரூ.90 லட்சம்) அபராதம் விதிக்கப்படும்’ என்று உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். ஏற்கெனவே 2017-ம் ஆண்டு, அதிக அளவில் விந்தணு தானம் செய்ததால், ஜோனாதனுக்கு நெதர்லாந்து மருத்துவமனைகள் தடைவிதித்திருந்தன. இதையடுத்து, வெளிநாடுகளுக்குச் சென்று விந்தணு தானம் செய்துவந்த `தாராள பிரபு’ ஜோனாதனுக்கு, நீதிமன்ற உத்தரவு மனச்சோர்வை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

பழைய வீட்டுக்குப் பயணித்த நாய்!
பழைய வீட்டுக்குப் பயணித்த நாய்!

64 கி.மீ., 27 நாள்கள்... பழைய வீட்டுக்குப் பயணித்த நாய்!

கோல்டன் ரெட்ரீவர் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றைப் புதிதாக வாங்கியிருக்கிறார் அயர்லாந்தில் வசிக்கும் நைஜெல் ஃபிளமிங் என்பவர். ‘கூப்பர்’ என்று அந்த நாய்க்குப் பெயரும் வைத்திருக்கிறார். வாங்கிய சில மணி நேரத்திலேயே கூப்பர் தனது புதிய வீட்டிலிருந்து தப்பித்துச் சென்றுவிட்டது. இதையடுத்து, தொலைந்துபோன பிராணிகளை மீட்டுக் கொடுக்கும் லாஸ்ட் பாவ்ஸ் (Lost Paws) என்ற தொண்டு நிறுவனத்தை நாடியிருக்கிறார் ஃபிளமிங். பல இடங்களில் தேடியும் கிடைக்காத கூப்பர், 27 நாள்கள் கழித்து தனது பழைய உரிமையாளரின் வீடு இருக்கும் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

``27 நாள்கள், காடு, மலை, பிரதான சாலைகள், என சுமார் 64 கி.மீ பயணித்து தனது பழைய உரிமையாளரைத் தேடிச் சென்றிருக்கிறது கூப்பர். சில தவிர்க்க முடியாத காரணங்களால் பழைய உரிமையாளரிடமிருந்து கூப்பரைப் பிரிக்கவேண்டிய சூழல் உருவானது. தற்போது தனது புதிய உரிமையாளர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறது கூப்பர்’’ என்கிறது லாஸ்ட் பாவ்ஸ் தொண்டு நிறுவனம்.

சூடான்
சூடான்

`எங்களை யார் காப்பாற்றுவது?’

ராணுவ ஆட்சி நடைபெறும் சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்குமிடையிலான அதிகாரப் போட்டி மோதலாக மாறி, உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. மூன்று வாரங்கள் கடந்தும் இரு தரப்பும் இடைவிடாமல் மோதிக்கொண்டிருக்கின்றன. இந்த மோதலால் இதுவரை 520-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருக்கின்றனர். நாட்டின் பல்வேறு மாகாணங்களில் நடந்துவந்த மோதல், தற்போது இரண்டு மாகாணங்களில் மட்டுமே நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. `கார்ட்டோம், மேற்கு டார்ஃபூர் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே மோதல் நடைபெற்றுவருகிறது. மற்ற பகுதிகளில் அமைதி திரும்பியிருக்கிறது. மக்களுக்கான சுகாதார சேவைகளும் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன’ என்று சூடானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் `ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் சூடானில் சிக்கித்தவித்த 3,000 இந்தியர்களை மீட்டெடுத்திருக்கிறது இந்தியா. மற்ற நாடுகளும் தங்கள் நாட்டவர்களை மீட்டெடுத்துவரும் சூழலில், `எங்களை யார் காப்பாற்றுவது?’ என்ற கேள்வியோடு தவித்துக்கொண்டிருக்கிறார்கள் சூடான் மக்கள்!