அலசல்
அரசியல்
கார்ட்டூன்
Published:Updated:

ஊழலை ஒரு துளியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்!

முரளிதர ராவ்
பிரீமியம் ஸ்டோரி
News
முரளிதர ராவ்

முஷ்டியை முறுக்குகிறார் முரளிதர ராவ்

கர்நாடக மாநிலத்தில் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் வெற்றிபெற்று, ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது பா.ஜ.க. இவ்வளவுக்கும் அங்கு மோடி, அமித் ஷா இருவருமே பிரசாரத்துக்குப் போகவில்லை. வெற்றிக்கான சூத்திரதாரி, கர்நாடக பா.ஜ.க பொறுப்பாளர் முரளிதர ராவ் என்கிறார்கள். இவர், தமிழக பா.ஜ.க பொறுப்பாளரும்கூட. சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.

‘‘கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். தமிழகத்தில் உங்கள் கட்சி என்ன நிலையில் இருக்கிறது?’’

‘‘சிறப்பான ஆட்சியையும் மோடியின் தலைமையையும் பிடித்துப்போய் புதியவர்கள் நிறைய பேர் எங்கள் கட்சியில் சேர்ந்துவருகிறார்கள். தமிழகத்தில் ஊராட்சி அளவில் கட்சியைக் கொண்டுசென்று கட்சியைப் பலப்படுத்தி வருகிறோம். தமிழகத்தின் வளர்ச்சி தொடர்பான பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்துகிறோம். தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக பா.ஜ.க-வை விரைவில் மாற்றியே தீருவோம். தற்போதைய தமிழக அரசியல் சூழல் எங்களுக்குச் சாதகமாகவே இருக்கிறது.’’

‘‘மிஸ்டுகால் திட்டத்தில் எவ்வளவு பேரைச் சேர்த்தீர்கள்?’’

‘‘கடந்த ஐந்து ஆண்டுகளில் 40 லட்சம் பேரைச் சேர்த்திருக்கிறோம். இந்த ஆண்டில் 25 லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்.’’

நட்பின் அடிப்படையில் பார்த்தால், தி.மு.க-வுக்கும் எங்களுக்குமிடையே எந்தத் தனிப்பட்ட மனஸ்தாபமும் கிடையாது. அரசியலில் எங்களுக்கு எதிர்க்கருத்து உடையவர்கள் அவர்கள்!
முரளிதர ராவ்

‘‘கேப்டன் இல்லாத கப்பலாக, தலைவர் இல்லாமல் தமிழக பா.ஜ.க தள்ளாடுகிறதே?’’

‘‘2020, ஜனவரி மாதத்தில் கட்சியின் கடைமட்ட நிர்வாகிகள் அளவில் கட்சித் தேர்தல் தொடங்குகிறது. மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் முடிந்ததும், அடுத்த கட்டமாக அனைத்து தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்போம்.’’

‘‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடிமீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து சரியான விளக்கம் தரப்படவில்லை. அதுதான் தமிழகத்தில் எங்கள் வெற்றியை பாதித்தது’ என்று பேட்டியளித் திருக்கிறார். உங்கள் கருத்து?’’

‘‘நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நாங்கள் சரியாகச் செயல்படவில்லைதான். ஒட்டுமொத்த தோல்விக்கும் இது ஒன்று மட்டுமே காரணமல்ல. பல காரணங்கள் உள்ளன. தி.மு.க-வின் அரசியல் நிலைப்பாடு, கொள்கை போன்றவற்றை நாங்கள் எதிர்க்கிறோம். சமீப காலமாக பா.ஜ.க-வுக்கு தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துவருகிறது. தமிழக மக்கள் எங்களைப் புரிந்துகொள்ள தொடங்கியுள்ளனர். வருங்காலத்தில் மொழி, கலாசாரம், இசை, வரலாறு என அனைத்து விவகாரங்களிலும் தமிழகத்தின் நலன் சார்ந்து பா.ஜ.க குரல்கொடுக்கும்.’’

முரளிதர ராவ்
முரளிதர ராவ்

‘‘ `ஊழல் மலிந்த அ.தி.மு.க அரசைக் காப்பாற்றுவதே பா.ஜ.க-தான்’ என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப் படுகிறதே?’’

‘‘அ.தி.மு.க மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எந்தக் கட்சியின்மீதும் அல்லது ஆட்சியின்மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால், அவற்றை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; எதிர்த்துப் போராடுவோம். எங்கள் கட்சிக்குள் இருந்தாலும் கூட்டணிக்குள் இருந்தாலும் ஊழல் விஷயத்தில் நாங்கள் எந்தக் கணிவும் காட்ட மாட்டோம்; ஒரு துளியும் பொறுத்துக்கொள்ளவும் மாட்டோம்.’’

`‘பா.ஜ.க மீதும் பிரதமர் மோடி மீதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பல குற்றச்சாட்டுகளைக் கூறி கடுமையாக விமர்சிக்கிறாரே?’’

‘‘ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில், தமிழக அரசியலில் பா.ஜ.க வளர்வதை உணர்ந்தே அவர் இப்படிப் பேசுகிறார். ஒவ்வொரு விவகாரத்திலும் அவர் செய்யும் விமர்சனத்துக்கு நாங்கள் பதில் தருகிறோம். எது உண்மையென மக்கள் முடிவுசெய்து கொள்ளட்டும்.’’

‘‘டெல்லியில் தி.மு.க. எம்.பி-க்கள் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார்கள். இப்படியான சில அரசியல் நிகழ்வுகளைப் பார்த்து, `பா.ஜ.க-விடம் தி.மு.க நெருங்குகிறது’ என்ற பேச்சும் எழுந்ததே?’’

‘‘பிரதமர் என்பவர் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுவானவர். தேசியப் பாதுகாப்பு, தேசியப் பிரச்னைகள் என்று பல விஷயங்களில் தி.மு.க-வுக்கென தனித்தனி கொள்கைகள் இருக்கும். அவைகுறித்து பிரதமருடன் தொடர்புகொண்டு பேச நினைத்திருக்கலாம். நட்பின் அடிப்படையில் பார்த்தால், தி.மு.க-வுக்கும் எங்களுக்குமிடையே எந்தத் தனிப்பட்ட மனஸ்தாபமும் இல்லை. அரசியலில் எங்களுக்கு எதிர்க்கருத்து உடையவர்கள் அவர்கள்.’’

‘‘ஐ.டி, சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு - இந்த மூன்று பிரிவு அதிகாரிகளையும் தவறாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்துவதாக புகார் வாசிக்கப்படுகிறதே?’’

‘‘வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பவர்கள், ரெய்டு பற்றி எதற்கு பயப்பட வேண்டும்? அரசு இயந்திரங்களை நாங்கள் எப்போதுமே தவறாகப் பயன்படுத்தியதில்லை. காங்கிரஸ் ஆட்சியின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், அவர்கள்தான் சி.பி.ஐ-யையும், 356-வது பிரிவையும் பலமுறை தவறாகப் பயன்படுத்தியிருப்பது தெரியவரும். பா.ஜ.க ஆட்சியில் அரசியல் சட்டம் மீறப்பட்டதேயில்லை.’’