சமூகம்
Published:Updated:

‘‘மத்தியத்துவம், கட்சிக்கு நல்லதல்ல... மாநிலங்களுக்கு முழு அதிகாரம் வேண்டும்!’’

தா.பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
தா.பாண்டியன்

- கட்சிக்குள் கலகக்குரல் எழுப்பும் தா.பாண்டியன்

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியனுக்கு, உடல்நிலை முன்புபோல் இல்லை. சிறுநீரகப் பிரச்னையால் கடும் அவதிப்படுகிறார். சிரமங்களுக்கிடையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் கூட்டணிக் கட்சிக்காக முழங்கியிருக்கிறார் தோழர். தா.பா-வைச் சந்தித்தோம். முதுமையும் நோய்த் தாக்கமும் உடலை உருக்கிவிட்டாலும்கூட, கொள்கையை உரத்து ஒலிப்பதில் தோழரின் கம்பீரம் குறையவேயில்லை. அவருடனான உரையாடலிலிருந்து...

“உடல்நிலை, முன்பைவிட மோசமாகிவிட்டது. முன்பு, வாரம் இரு முறை டயாலிஸிஸ் செய்துகொண்டிருந்தேன். இப்போது, வாரத்துக்கு மூன்று முறை செய்யவேண்டியிருக்கிறது. என்னை விடுங்கள்... நீங்கள் கேள்விகளைக் கேளுங்கள். நானும் பதில் சொல்லி எத்தனை நாள்களாயிற்று...’’ என்றார் சிரித்தபடியே.

“இந்த நிலையிலும் அரசியல் பணிகளில் ஈடுபடுவது சிரமமாக இல்லையா?’’

(மீண்டும் சிரிக்கிறார்) “பாயும் நோயுமாகக் கிடந்துச் சாவதைவிட, நடமாடிக்கொண்டே மக்களைச் சந்தித்து மாய்வதுதான் ஓர் அரசியல்வாதிக்குக் கிடைக்கப்பெற்ற அரிய வாய்ப்பு. இயற்கை விதிகளைத் தாண்டி ஓடியவன், இதுவரை உலகில் பிறக்கவேயில்லை.’’

‘‘மத்தியத்துவம், கட்சிக்கு நல்லதல்ல... மாநிலங்களுக்கு முழு அதிகாரம் வேண்டும்!’’

“காஷ்மீரை பி.ஜே.பி அரசாங்கம் இரண்டாகப் பிரித்திருப்பது குறித்து?”

“மனுதர்ம ஆட்சியை, அவர்கள் படிப்படியாக அமல்படுத்திவருகிறார்கள். அதில் ஒரு படி இது. உண்மையில், இது மனுதர்மம்கூட அல்ல... மனு அதர்மம். `வடமாநிலங்களில் பெரும்பான்மை இந்துக்கள் இதைக் கொண்டாடுகிறார்கள்’ என்கிறார்கள். ஆனால், பாகிஸ்தான் மீதான பகைமையை, கசப்பை அவர்களிடம் வளர்த்து விட்டதால் ஏற்படுத்தப்பட்ட போலி பிம்பம் அது. அதேபோல அ.தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள், பி.ஜே.பி மீதான பயத்தின் காரணமாக இந்தச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. நேட்டோ நாடுகள் அமைப்பில் இந்தியா இணையவிருப்பதாக, சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதேபோல், சில நாள்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘காஷ்மீர் விவகாரத்தில் தலையிட தயார்’ என்று கூறினார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மத்திய பி.ஜே.பி அரசு, அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது என்றே தோன்றுகிறது.”

“பி.ஜே.பி-யின் பொருளாதார அடிப்படையிலான பத்து சதவிகித இடஒதுக்கீட்டை மார்க்சிஸ்ட்டுகள் ஆதரிக்கிறார்கள். நீங்கள் எதிர்ப்பது ஏன்?”

“இடஒதுக்கீடு தத்துவமே ஒடுக்கப்பட்டவர் களுக்கானது மட்டும்தான். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் முன், அந்தந்தப் பிரிவினரின் மக்கள்தொகையைக் கணக்கிட்டு, இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தி னார்கள். அதுபோல், உயர்சாதி ஏழைகள் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்கப்பட்டதா? அப்படி கணக்கெடுத்துதான் பத்து சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுக்கிறார்கள் என்றால், அதே அளவீட்டுமுறையை மற்ற சாதியினருக்கும் விரிவுபடுத்தத் தயாரா?”

“திராவிட இயக்கங்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் சித்தாந்தங்கள் வலுவிழந்துவிட்டனவா?’’

“அப்படிச் சொல்ல முடியாது. ஆன்மிகம் என்ற பெயரில், மூவாயிரம் ஆண்டுகளாகப் போதிக்கப்பட்டுவந்த மனுதர்மச் சட்டங்களை அப்படியே நம்பி, ‘ஆமாம், நாங்கள் அடிமைகள்தான்’ என்று பெரும் பான்மையோர் கைகட்டி ஏற்றுக்கொண்ட போதே இந்தியா வீழ்ந்துவிட்டது. இவர்களை விடுவிப்பதுதான் சிரமமாக இருக்கிறது.’’

“இடதுசாரி கொள்கைகளை மக்களிடையே எடுத்துச்செல்ல, அதன் தலைவர்கள் தவறிவிட்டதன் எதிரொலிதானே இந்த மாற்றங்கள்?’’

“நிச்சயமாக. இங்கு மட்டுமல்ல, உலக அளவிலேயேகூட இடதுசாரி சிந்தனைகள் பெரும்பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. ஆரம்பகாலகட்டங்களில் இந்தியாவில் இருந்த இடதுசாரி தலைவர்கள் தங்கள் கொள்கைகளை உறுதிபட எடுத்துச் சென்றனர். அதன் பிறகு அப்படி யாரும் செய்யவில்லை. ‘தேர்தல் மட்டுமே முக்கியமல்ல... தத்துவார்த்தரீதியில் மக்களிடையே பாடம் போதிப்பதும் முக்கியம்’ என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.’’

“இன்றைய சூழலில், கம்யூனிஸ்ட்டுகள் சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்து குறித்து..?

“நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக்கொண்ட நம் நாட்டில், யாரோ பத்து பேர் கூடி கட்சி முடிவுகளை எடுப்பது சரியல்ல. தமிழ்நாட்டைச் சேர்ந்த முப்பது பேரைத் தவிர, வேறு யாரையும் எனக்குத் தெரியாது. அடிமட்டத்திலிருந்து அந்தந்த மண்ணுக்குரிய பிரதிநிகளைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயகம்தான் கட்சிக்குத் தேவை. அதைவிடுத்து, ஜனநாயக மத்தியத்துவம் என்பது கட்சிக்கு நல்லதல்ல. மாநிலங்களுக்கே முடிவெடுக்கும் முழு அதிகாரத் தையும் வழங்கவேண்டும். இந்த மாற்றங்களைக் கொண்டுவந்தால்தான், இன்றைய அரசியல் சூழ்நிலையில் கம்யூனிஸ்ட்டுகள் வெற்றிபெற முடியும்.’’

“நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நீங்கள், ‘மோடிக்கு எதிராக, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும்’ என்று கூறினீர்கள். ஆனால், அதை கம்யூனிஸ்ட்டுகளே ஏற்கவில்லையே?’’

“அதனால்தானே இந்த நிலைமைக்கு வந்து நிற்கிறோம். எங்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் உட்பட யாரும் என்னிடம் இதுகுறித்துப் பேசாததுதான் துரதிர்ஷ்டம். குறைந்தபட்சம் என்மீது நடவடிக்கையாவது எடுத்திருக்க வேண்டுமல்லவா... அதையும் செய்யவில்லை. இப்படியொரு மனிதன் இருப்பதாகவே அவர்கள் கண்டுகொள்ளவில்லை.”

‘‘மத்தியத்துவம், கட்சிக்கு நல்லதல்ல... மாநிலங்களுக்கு முழு அதிகாரம் வேண்டும்!’’

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவே தமிழரான டி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இனியாவது உங்களைப் போன்ற மூத்த தலைவர்களின் கருத்துகளுக்கு உரிய மதிப்பு கிடைக்குமா?’’

“கட்சியின் தேசிய கவுன்சிலில் நானும் உறுப்பினர்தான். ஆனால், டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதையே தொலைக்காட்சி செய்தியைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நான் இப்படிச் சொல்வதால் சாதி பார்க்கிறேன் என்று குறை சொல்வார்கள். பரவா யில்லை... ராஜாவுக்கு வாழ்த்துகள்!”

“கடவுள், சாதி மறுப்பை அடிப்படை யாகக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும் கூட சாதிய உணர்வு இருக்கிறதா?’’

“நிச்சயமாக... ஆனால், வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். மேற்குவங்கத்தில் அதனால்தான் அந்தக் கட்சி பயங்கர சோதனையைச் சந்தித்திருக்கிறது.’’

“ஆனால், கட்சியின் மாநிலச் செயலாளராக நீங்கள் இருந்தபோது, `சாதியப் பின்புலத்துடன் செயல்பட்டீர்கள், பிறந்த நாள் விழா கொண்டாடினீர்கள், சொத்து அபகரிப்பு செய்தீர்கள்’ என்றெல்லாம் உங்கள் மீதும் சர்ச்சைகள் எழுந்தனவே?’’

“சாதியரீதியில் குற்றச்சாட்டுகள் வந்தபோது வேதனையாகத்தான் இருந்தது. கம்யூனிஸ்ட்களுக்குள்ளும் நான்கு குள்ளநரிகள் இருக்கத்தானே செய்வார்கள். பதவி, பணம் ஆசையில் சிலர் கிளப்பியதுதான் அது.

பிறந்த நாள் கொண்டாடுவது எனக்கு மட்டுமல்ல... கட்சியிலும் யாருக்கும் விருப்பமில்லை. ஆனால், அதைச் சொல்லித்தான் கட்சிக்கு வசூல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் கட்சியே அதை செய்யும். இதனால், கட்சிக்கு ஒரு லட்சம் ரூபாயோ இரண்டு லட்சம் ரூபாயோ வசூல் தொகை கிடைக்கும்.

சொத்துப் பிரச்னையில் என்மீதான குற்றச்சாட்டுகூட குடும்பச் சொத்தின் பாகப்பிரிவினை சம்பந்தப்பட்டதுதான். வேண்டுமென்றே சிலர் அதை அரசியலாக்கிவிட்டார்கள். இதோ... சென்னையில் நான் குடியிருக்கும் இந்த வீடுகூட அரசு ஊழியரான என் மனைவிக்கு ஒதுக்கப்பட்ட ஹவுஸிங் போர்டு மனையில் கட்டப்பட்ட சொத்துதான்!”

“இத்தனை ஆண்டுக்காலப் போராட்டப் பொதுவாழ்க்கை, உங்களுக்கு என்ன கற்றுக்கொடுத்திருக்கிறது?’’

“போராடும் எந்த விஷயத்துக்கும் நம் வாழ்நாளிலேயே வெற்றி கிடைத்துவிட வேண்டும் என எண்ணுவது தவறு. ஒரு தனி மனிதன், வரலாற்றை உருவாக்கிவிட முடியாது. இயக்கமாக ஒன்றிணைந்து விஞ்ஞானரீதியாக, கொள்கைகளை எட்டிப்பிடிக்க வேண்டும். அதற்குப் பொதுவுடைமைக் கட்சிகள்தான் பொருத்தமானவை!’’