இன்று உலகை ஆள்பவை தரவுகளே (Data). ‘இந்தப் புதிய உலகில் தரவுதான் புதிய எண்ணெய்; தரவுகளே புதிய செல்வம்’ என்கிறார் முகேஷ் அம்பானி. இந்தப் பின்னணியில், இந்தியாவின் தரவுகள் பற்றி, நாட்டின் முதல் தரவு இதழாசிரியராக (Data editor) அறியப்படும் ருக்மிணி ஸ்ரீநிவாசன் எழுதியிருக்கும் புத்தகம், ‘Whole Numbers and Half Truths: What Data Can and Cannot Tell Us About Modern India’. கல்வி, சுகாதாரம், குற்றம், தேர்தல், காதல், திருமணம், உணவு உள்ளிட்ட பத்து முதன்மையான தலைப்புகளில், தரவுகள் வழி இன்றைய இந்தியாவின் பிரச்னைகளை கவனப்படுத்தியிருக்கிறார் ருக்மிணி.

சென்னையில் நடந்த இந்தப் புத்தகத்தின் வெளியீட்டை ஒட்டி ருக்மிணியுடன் நடந்த உரையாடலின் பகுதிகள்...
“தரவு இதழியல் என்றால் என்ன? அதை எப்படி வரையறுப்பீர்கள்?”
“இதழியல் என்பது செய்திகளைச் சொல்வது என்றால், தரவு இதழியல் என்பது தரவுகளைப் பயன்படுத்திச் செய்திகளைச் சொல்வது. இதழியல் அதிகாரத்திடம் உண்மையைப் பேசுகிறது என்றால், தரவு இதழியல் தரவுகளைப் பயன்படுத்தி அதிகாரத்திடம் உண்மையைப் பேசுகிறது. இதழியலின் அனைத்துக் கொள்கைகளையும் தரவு இதழியல் பின்பற்றுகிறது என்றாலும், உண்மையை வெளியில் கொண்டுவர, திடுக்கிடும் ஒரு தகவலை முன்னுக்குக் கொண்டுவர, உண்மையற்ற சொல்லாடல்களைப் பின்னுக்குத் தள்ள தரவைப் பயன்படுத்துகிறோம்.”

“இன்றைய இதழாளர் தரவுப் பகுப்பாய்வு (data analysis), தரவுக் காட்சிப்படுத்தல் (data visualization) ஆகியவை பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டியது ஏன் முக்கியம்?
“மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) உள்ளிட்ட பல்வேறு புள்ளிவிவரங்கள், தரவுகள் வெளியாகும்போது, அரசாங்கம் கூறியதையே செய்தியாக்க வேண்டிய கட்டாயத்தில் பெரும்பாலான இதழாளர்கள் உள்ளனர். ஏனென்றால், அந்த எண்களுக்கு என்ன அர்த்தம், அவற்றைச் சரிபார்ப்பது எப்படி, அதன் கூறுகளைச் செய்தியாக்குவது எப்படி என்பவை அவர்களுக்குத் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு. எனவே, இதழாளர்கள் தரவுப் பகுப்பாய்வுத் திறன்களைக் கொண்டிருப்பது தரவுகளைச் சுயாதீனமாக எடுத்தாள உதவும் - அரசாங்கம் சொல்வதைவிட வளர்ச்சி குறைவாக இருப்பதை அல்லது ஒரு மாநிலம் மற்றொன்றைவிடச் சிறப்பாகச் செயல்படுவதை அவர்கள் கண்டறிய முடியும்; செய்தியைக் கவர்ச்சிகரமானதாகவும் வாசகர்களுக்கு எளிதாகப் புரிந்துகொள்ளவும் தரவுக் காட்சிப்படுத்தல் உதவுகிறது.”
“தரவுகள் குறித்துப் பொதுமக்களிடம் நிலவும் தவறான கருத்துகள் யாவை? தரவுகளின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது ஏன் அவசியமாகிறது?”
“தரவுகளைப் பற்றி வெவ்வேறு வகையான மக்கள் வெவ்வேறு தவறான கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர். கணிதம் படிக்காததால், தங்களால் தரவுகளைப் புரிந்துகொள்ள முடியாது என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், அது உண்மையல்ல. ஒரு விஷயத்தை அறிவுபூர்வமாக யோசிக்க முடியும் வரையில், ஒருவருக்குக் கணிதம் அல்லது புள்ளியியல் குறித்த தேர்ந்த புரிதல் அவசியமில்லை - நான் கணிதமோ, புள்ளியியலோ படிக்கவில்லை. எல்லாத் தரவுகளும் ஏமாற்றுவதற்காகப் பொய்யாக உருவாக்கப்படுகின்றன என்று சிலர் கருதுகின்றனர், இதுவும் உண்மையல்ல. மாதிரி ஆய்வுகள் (sample surveys) ஒட்டுமொத்த மக்கள்தொகையின் கருத்தாக இருக்க முடியாது என்று சிலர் சந்தேகிக்கின்றனர். மாதிரி ஆய்வுகள் மக்களின் தனிப்பட்ட வித்தியாசங்களைத் தவறவிடக்கூடும் என்றாலும், மிகப்பெரிய மக்கள்தொகை அளவில், ஒரு நல்ல கணக்கெடுப்பு என்பது மக்கள் அனைவரும் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும்!”

“இதுதான் தரவுகள் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதத் தூண்டியதா?”
“இன்று இந்தியாவைப் பற்றி நிறைய நல்ல தரவுகள் உள்ளன; ஆனால் பலருக்கு அது தெரியவில்லை. இந்தியாவின் பெரிய பிரச்னைகளான சமத்துவமின்மை, சாதி, வருமானம், வேலையின்மை, சுகாதாரம், இடப்பெயர்வு ஆகியவை பற்றி நமக்குத் தெரியாதவற்றைத் தரவுகள் மூலம் விளக்க வேண்டும் என்பது இந்தப் புத்தகத்துக்கான உந்துதல்களில் ஒன்று. மற்றொன்று, தரவுகளைப் புரிந்துகொள்ளவது எப்படி என்று மக்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்பது. சில நேரங்களில், எல்லாத் தரவுகளையும் மக்கள் சந்தேகம் கொள்கிறார்கள். எந்தத் தரவுகளைப் பயன்படுத்தலாம், அந்தத் தரவுகள் நமக்கு என்ன சொல்கின்றன, எந்தத் தரவை கவனமாகக் கையாள வேண்டும், எந்தத் தரவு தவறானது என்பதை இந்தப் புத்தகத்தின் மூலம் விளக்க வேண்டும் என்பது எனது எண்ணமாக இருந்தது.”
“ஒருவகையில், தரவுகள் அச்சுறுத்தலாக மாறிவிட்டனவா?”
“தரவுகள் வெளிப்படுத்தும் உண்மை சிலருக்கு அச்சுறுத்தலாக மாறியிருப்பது உண்மைதான். 2019-ம் ஆண்டு, வேலைவாய்ப்பு குறித்த தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் (NSSO) அறிக்கையை வெளியிடுவதை மத்திய அரசு முதலில் தாமதித்தது. வேலையின்மை குறித்து அதுவரை இல்லாத அளவுக்கான புள்ளிவிவரங்களைக் கொண்டிருந்த அந்த அறிக்கை, அவர்கள் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகே வெளியிடப்பட்டது. அடுத்ததாக, வருமான வளர்ச்சி தேக்கநிலை அல்லது வீழ்ச்சியில் இருப்பதைக் குறிக்கும் வீட்டுநுகர்வு பற்றிய அறிக்கையைத் தாமதப்படுத்தினர். இந்தியப் புள்ளியியல் வரலாற்றில் முதல்முறையாக, அந்த அறிக்கை அரசாங்கத்தால் புதைக்கப்பட்டது, அதை வெளியிடவே மறுத்துவிட்டனர். இந்தப் பின்னணியில், இந்தியப் புள்ளியியலின் எதிர்கால நேர்மை குறித்து நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில், தவறவிடப்பட்ட கோவிட் மரணங்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டவர்களை அச்சுறுத்தியது என்பது, இந்த அரசாங்கம் இப்படிச் செய்ததற்கான மற்றொரு எடுத்துக்காட்டு.”

“அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எல்லா வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் தரவு அறிவியல் அடைந்திருக்கும் வளர்ச்சியின் பின்னணியில், ஓர் தரவு இதழாளராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“பல காரணங்களுக்காக, இந்தியத் தரவுகளுக்கு இது ஒரு உற்சாகமான தருணம் - சில செயல்முறைகள் மின்மயமாக்கப்பட வேண்டும். ஆனாலும், நீண்ட காலத்திற்குப் பிறகு புதிய தரவுகளைப் பெறுவது மிகவும் உற்சாகமூட்டக்கூடியதாக இருக்கிறது. இரு காரணங்களுக்காக, இறுதி எண்களின் நம்பகத்தன்மை பற்றிக் கவலைப்பட வேண்டியிருக்கிறது: ஒன்று, இது பெருந்தொற்றின் நிழலில் நடக்கவிருக்கிறது, அதனால் இது கடுமையான சவால்களை உள்ளடக்கியதாக இருக்கும்; இரண்டு, தேசியக் குடிமக்கள் பதிவேடு குறித்த அரசாங்கத்தின் சொல்லாடல்கள், நடவடிக்கைகளின் அடிப்படையில் குடியுரிமை, குடும்பம், இடம்பெயர்வு ஆகியவை சார்ந்த விஷயங்கள் பலரால் கவலையுடன் பார்க்கப்படும். இவ்விரண்டும் இந்தக் கணக்கெடுப்பின் ஒட்டுமொத்த முடிவையும் கெடுத்துவிடக்கூடிய சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது.”