Published:Updated:

“தி.மு.க.வே சமரசம் செய்ய விரும்பினாலும் பா.ஜ.க. விடாது!”

மருதையன்
பிரீமியம் ஸ்டோரி
மருதையன்

புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம்தான் மாற்றங்கள் சாத்தியம்; தேர்தலின் மூலம் சாத்தியமில்லை என்பதுதான் இப்போதும் என் கருத்து.

“தி.மு.க.வே சமரசம் செய்ய விரும்பினாலும் பா.ஜ.க. விடாது!”

புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம்தான் மாற்றங்கள் சாத்தியம்; தேர்தலின் மூலம் சாத்தியமில்லை என்பதுதான் இப்போதும் என் கருத்து.

Published:Updated:
மருதையன்
பிரீமியம் ஸ்டோரி
மருதையன்
‘போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம். புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்’ - ஒவ்வொரு தேர்தலின்போதும் மக்கள் கலை இலக்கியக் கழகம் முன்வைக்கும் முழக்கம் இது. கடந்த ஆண்டில் ம.க.இ.கவில் இருந்து விலகிய அதன் பொதுச்செயலாளர் மருதையன், ‘இந்தச் சூழலில் தேர்தல் புறக்கணிப்பு கூடாது. தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்கப்போகிறேன்’ என்று இணையத்தில் எழுதியிருக்கிறார். ஏன் இந்த மாற்றம்? மருதையனிடம் பேசினேன்.

``மக்கள் கலை இலக்கியக் கழகத்திலிருந்து நீங்கள் விலகியது ஏன்?’’

“அது ஒரு வருந்தத்தக்க, ஆனால் தவிர்க்க முடியாத நிகழ்வு. அரசியல் தலைமைக்குழு தோழர்களின் மீது பல விமர்சனங்களை முன்வைத்தேன். அவர்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்லாமல் என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்கள். வேறுவழியில்லாமல் 2020 பிப்ரவரியில் அமைப்பிலிருந்து விலகினேன். இப்போது என் அரசியல் கருத்துகளை ‘இடைவெளி’ வலைப்பூவில் எழுதிவருகிறேன்.”

``ம.க.இ.க அமைப்பு வழக்கம்போல் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள். ம.க.இ.க-விலிருந்து விலகி ‘மக்கள் அதிகாரம்’ என்ற பெயரில் இயங்குபவர்கள் ‘அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள்’ என்கிறார்கள். நீங்களோ நேரடியாக தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்கச் சொல்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடுகள்?’’

“புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம்தான் மாற்றங்கள் சாத்தியம்; தேர்தலின் மூலம் சாத்தியமில்லை என்பதுதான் இப்போதும் என் கருத்து. ஆனால் மக்கள் எழுச்சி மூலம்தான் புதிய ஜனநாயகப் புரட்சி சாத்தியம். அதற்கு மக்கள் தயாராக இல்லாதபோது தேர்தலின் வழியாகவும் பாசிசத்தை எதிர்க்க வேண்டும். எல்லாத் தேர்தல்களையும் போல அல்ல இந்தத் தேர்தல். அடிமை எடப்பாடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பா.ஜ.க-வே தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியதாகத்தான் பொருள். தி.மு.க மீதுள்ள அபிமானத்தாலோ விசேஷ நம்பிக்கையினாலோ தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்கச் சொல்லவில்லை. பா.ஜ.க தன் எதிரியாகத் தி.மு.க-வைத்தான் பார்க்கிறது. இப்போதைய தேர்தலில் பா.ஜ.க-வுக்குத் தி.மு.க கூட்டணிதான் மாற்று. தேர்தலைப் புறக்கணிப்பவர்களோ பழைய சட்டகத்தைக் கைவிட மனமில்லாதவர்களாக இருக்கிறார்கள். ‘மக்கள் அதிகாரம்’ பெயரில் இயங்குபவர்களோ ‘நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்கிறோம். ஆனால் மக்கள் அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள்’ என்கிறார்கள். இது சந்தர்ப்பவாதம் அல்லது மக்களைவிட தங்களை மேலானவர்களாக, புனிதமானவர்களாக நினைத்துக்கொள்ளும் பார்ப்பனிய மேட்டிமைத்தனம்.”

`` ‘பா.ஜ.க-வானது தி.மு.க-வைத்தான் எதிரியாகப் பார்க்கிறது’ என்கிறீர்கள். பா.ஜ.க தங்கள் எதிரியாகக் கூட பார்க்கமுடியாத அளவுக்கு கம்யூனிஸ்ட்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்கிறீர்களா?’’

“உண்மைதான். மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வுக்கு எதிரி கம்யூனிஸ்ட்கள் இல்லை; மம்தாதான். நீண்டகாலத் தேர்தல் கூட்டணி அரசியலில் இருக்கும் சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள் நலிந்துவிட்டன. தேர்தல் புறக்கணிப்பு, ஆயுதப்புரட்சி என்று சொல்லும் மார்க்சிய-லெனினியக் கட்சிகளோ முட்டுச்சந்தில் நிற்கின்றன. இந்தியா முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டக் களத்துக்குச் சென்றிருந்தேன். பஞ்சாப் மார்க்சிய லெனினியக் கட்சிகளின் முதன்மையான பங்கு இந்தப் போராட்டத்தில் இருக்கிறது. இதுபோன்ற ஒருங்கிணைப்பு இந்தியா முழுவதும் தேவை. இந்துத்துவ பாசிசம் வீழ்த்தப்பட்டால்தான் கார்ப்பரேட் அதிகாரத்தை வீழ்த்த முடியும். அதற்கு இடதுசாரிகள் ஒன்றிணைய வேண்டும். நான் பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். ஆனால் இப்போதுள்ள சூழலில் தேர்தலின்வழியாக பாசிசத்தை வீழ்த்த தி.மு.க கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.”

``கார்ப்பரேட் எதிர்ப்பை முன்வைக்கிறீர்கள். ஆனால் இந்தத் தேர்தலில் தி.மு.க-வின் செயல்பாட்டையே கார்ப்பரேட் நிறுவனம்தானே தீர்மானிக்கிறது?’’

“இந்தியாவில் எல்லாக் கட்சிகளும் நவதாராளவாதக் கொள்கையை ஏற்றுக்கொண்டுவிட்டன என்பது உண்மைதான். ஆனால் நம் முதன்மை எதிரி யார் என்று பார்க்க வேண்டும். கார்ப்பரேட் அதிகாரம் காவி பாசிசத்தின் வழியாக நிறைவேற்றப்படும்போது அது கொடூரமாக இருக்கும். மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து தி.மு.க-வோ காங்கிரஸோ தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கின்றன. ஆனால் டெல்லி விவசாயிகள் குளிரில் விறைத்தாலும் பட்டினியால் வாடினாலும் அம்பானி, அதானி நலனுக்காகத் தன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க மறுக்கிறார் மோடி. எனவே அதுவும் இதுவும் ஒன்றல்ல.”

``பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியை எதிர்ப்பது என்றால் நீங்கள் கமல்ஹாசனையோ, சீமானையோ ஆதரிக்கலாமே?’’

“கமல்ஹாசன் அரசியல்வாதியே அல்ல. சினிமாவில் ரிட்டயர் ஆனபிறகு அரசியலுக்கு வருகிறார். வேறு துறைகளில் இருக்கும் யாராவது ரிட்டயர் ஆனபிறகு சினிமாவுக்குச் செல்ல முடியுமா? கமல்ஹாசனுக்கு அரசியல் என்பது அவ்வளவு மலிவானதாக இருக்கிறது. தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டு ஊழல் ஒழிப்பு பேசும் கமல், ஒரு இளம் அண்ணா ஹசாரே. அண்ணா ஹசாரே எப்படி பா.ஜ.க ஆட்சிக்கு வர உதவினாரோ அதைப்போல்தான் கமலும். சீமானையும் தமிழ்த் தேசியவாதி என்று சொல்ல முடியாது. தமிழினத்தின் உரிமையைப் பறிப்பது இந்து தேசியம். ஆனால் சீமானோ மலிவான முறையில் இனவெறியைத் தூண்டுகிறார். தமிழ்ச்சாதிகள் என்றுதான் அழைக்கிறார். சீமான் அரசியல் என்பது சாதிக்கூட்டணி. ஹிட்லரைக் கதாநாயகனாகப் பார்க்கும் சீமான் ஒரு தமிழ் இந்துத்துவா.”

மருதையன்
மருதையன்

``ஒருவேளை தி.மு.க வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தாலும் மத்தியில் மூன்றாண்டுகள் ஆளப்போவது மோடிதான். தி.மு.க சமரசம் செய்யாது என்றா நினைக்கிறீர்கள்?’

“ ‘தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ என்று சொல்லும்போது ‘தி.மு.க-வை நம்ப முடியுமா?’ என்று தோழர்கள் கேட்கிறார்கள். வளர்ந்து தனக்குச் சோறுபோடுவார்கள் என்று யாரும் பிள்ளைகளை வளர்ப்பதில்லை. ‘மரங்கள் விரும்பினாலும் காற்று ஓய்வெடுக்க விடுவதில்லை’ என்ற மாவோவின் பொன்மொழியைப் போல தி.மு.க-வே சமரசம் செய்ய விரும்பினாலும் பா.ஜ.க விடாது. தி.மு.க-வை அழிப்பது பா.ஜ.க-வின் கொள்கை. தி.மு.க-வும் தேர்தல் நேரத்தில் வேல் ஏந்துகிறது. தி.மு.க-வுக்கு அச்சமிருக்கிறது. அந்த அச்சத்தைப் போக்கவேண்டியது முற்போக்கு இயக்கங்களின் கடமை. காவி பாசிசத்துக்கு எதிராக மக்களைத் திரட்டுவதும் பொதுக்கருத்தை உருவாக்குவதும் நம் கடமை. அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாதாரை அர்ச்சகர் ஆக்குவோம் என்று தி.மு.க தேர்தல் அறிக்கை சொல்கிறது. கருவறை நுழைவுப்போராட்டம் முதல் பல போராட்டங்களை ம.க.இ.க நடத்தியிருக்கிறோம். தில்லை நடராசர் கோயிலில் தேவாரம் பாடினோம். ஆனால் தமிழ்த்தேசிய இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்கள் தொடர்ச்சியாக இதை முன்னெடுப்பதில்லை. அதை உருவாக்கினால் சமரசம் மேற்கொள்ளாதவாறு தி.மு.க மீது அழுத்தத்தை ஏற்படுத்தலாம். மாற்றம் என்பது அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டியது.”

``தி.மு.க.வின் மீது உள்ள முக்கியமான குற்றச்சாட்டு ‘குடும்ப அரசியல்.’ இது ஜனநாயக மறுப்புதானே?’’

“வாரிசுமுறை என்பது என்ன? என் சொத்து என் மகனுக்குப் போக வேண்டும் என்பதுதானே? திருபாய் அம்பானியின் சொத்து முகேஷ் அம்பானிக்குப் போகும்போது, முகேஷ் அம்பானியின் சொத்து அவர் மகனுக்குப் போகும்போது நாம் அதை இயல்பாகப் பார்க்கிறோம். ஆனால் கட்சி என்று வரும்போது மட்டும் வாரிசுமுறையைக் கேள்விக்குள்ளாக்கு கிறோம். இது திசைதிருப்பும் வாதம். அரசியலில் வாரிசுமுறையை எதிர்ப்பவர்கள் அர்ச்சகரில் வாரிசுமுறையை எதிர்ப்பதில்லையே?”

``அதைத்தான் நானும் கேட்கிறேன். அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவது, சமூகநீதி என்பது அனைவருக்குமான சமவாய்ப்பு, அதிகாரத்தைப் பரவலாக்குதல்தானே. அதை வலியுறுத்திவிட்டு, அதற்கு மாறாக குடும்ப அரசியலை முன்வைப்பது முரண்பாடில்லையா?’’

“அது ஒரு கட்சியின் பிரச்னை. பொதுச்சமூகத்தின் பிரச்னையில்லை. உதயநிதி தேர்தலில் நிற்கக்கூடாது என்று நான் சொல்லமுடியாது. அதை அந்தக் கட்சிக்காரர்கள்தான் சொல்லவேண்டும்.”

``கருணாநிதி இறந்தபோது ம.க.இ.க சார்பாக இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தீர்கள். ஆனால் அண்ணா நூற்றாண்டுவிழாவின்போது ‘பிழைப்புவாதத்தின் பிதாமகன்’ என்று உங்கள் அமைப்பு கட்டுரை வெளியிட்டிருந்தீர்களே?’’

“நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். அது அமைப்பின் முடிவு. ‘புதிய ஜனநாயகம்’ பத்திரிகையில் வெளியான கட்டுரையை நான் எழுதியதாகத்தான் பலரும் நினைக்கிறார்கள். அதை நான் எழுதவில்லை. அந்தக் கட்டுரை தவறானதுதான். ஆனால் கலைஞருக்கு எழுதப்பட்ட இரங்கல் அறிக்கை மிகச்சரியானது.”

``பா.ஜ.க-வால் தமிழகத்தைக் கைப்பற்ற முடியுமா?’’

“முடியும். பா.ஜ.க தமிழகத்தைக் கைப்பற்றுவது என்றால் உ.பி-யில் கைப்பற்றியதைப் போல அல்ல. எல்லாக் கட்சிகளிலும் இருக்கும், பதவி கிடைக்காத பிழைப்புவாதிகள், ரௌடிகள், சமூக விரோதிகள் ஆகியோரை வைத்துத் தமிழகத்தைக் கைப்பற்ற நினைக்கிறது. சிலபேர் ‘அ.தி.மு.க-வை பா.ஜ.க அழிக்க நினைக்கிறது’ என்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க-வை பா.ஜ.க அழிக்கத் தேவையில்லை. அப்படியே அ.தி.மு.க-வை பா.ஜ.க உள்ளிழுத்துக்கொள்ளலாம். அதற்கான அடிப்படைகள் அ.தி.மு.க-வில் உண்டு.”

``ஒருவேளை மூன்றாவதுமுறையும் இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று கருதுகிறீர்கள்?’’

“2019 தேர்தலுக்கு முன்பு அருண்ஷோரி சொன்னார், ‘இந்தமுறை மோடி பிரதமராகிவிட்டால் இதுதான் இந்தியாவில் கடைசித் தேர்தல்’ என்று. அதை நோக்கித்தான் போகும். ஜனநாயகத்தின் மீது இந்துத்துவவாதிகளுக்கு நம்பிக்கையில்லை. பல கட்சி ஜனநாயகம் கேள்விக்குள்ளாகும். இப்போது எதிர்க்கட்சியினரை விலைக்கு வாங்குவது, ரெய்டு மிரட்டல்கள் நடக்கின்றன. இனிமேல் மாற்றுக்கட்சியினர் வேட்புமனுத் தாக்கல் செய்தாலே தாக்கப்படலாம். நான்கு தூண்களில் மூன்று தூண்கள் பாசிசத்துக்குப் பணிந்துவிட்டன. மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்ட நிலை என்று எஞ்சியிருக்கும் ஒரு துறை legislature என்கிற நாடாளுமன்றமும் சட்டமன்றமும்தான். தேர்தல்முறை தொடர்வதால்தான் ஏதோ ஒருவகையில் மக்களுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற கடப்பாடு இங்கே எஞ்சியிருக்கின்றது. ஆனால் அதற்கும் ஆபத்து வந்திருக்கும் சூழலில் வெறுமனே தேர்தல் புறக்கணிப்பு பேசுவது அபத்தம்!”