Published:Updated:

“ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்கள்மீது நம்பிக்கை இருக்கிறது!”

மாஃபா பாண்டியராஜன்
பிரீமியம் ஸ்டோரி
மாஃபா பாண்டியராஜன்

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பளீர்...

“ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்கள்மீது நம்பிக்கை இருக்கிறது!”

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பளீர்...

Published:Updated:
மாஃபா பாண்டியராஜன்
பிரீமியம் ஸ்டோரி
மாஃபா பாண்டியராஜன்

2021 சட்டமன்றத் தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்டது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் விரைவில் சூடுபிடிக்கவிருக்கும் நிலையில், அ.தி.மு.க அமைச்சர் மாஃபா பாண்டியராஜனைச் சந்தித்து, சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘புதிய வேளாண்மைச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகப் போராட்டங்கள் தொடர்கின்றன. அந்தச் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும் நீங்களும்கூட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதிக்கலாம் என்று சவால் விட்டிருக்கிறீர்களே..?’’

‘‘வேளாண்மைச் சட்டங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் ஸ்டாலின் பேசுகிறார். அந்தச் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு ஆதாயம்தானே தவிர, எந்த பாதிப்பும் இல்லை. பஞ்சாப் விவசாயிகளுக்குத்தான் சில குறைபாடுகள் இருப்பதாகக் கருதுகிறேன். அங்கு, மண்டி உரிமையாளர்கள் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். விவசாயிகளின் போராட்டங்களுக்குப் பின்னணியில் இருப்பதும் அவர்கள்தான் என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. தமிழகத்தில் விவசாயிகளை முதலாளிகளாக உருமாற்றம் செய்யும் திட்டங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, புதிய வேளாண்மைச் சட்டங்கள் கார்ப்பரேட்களுக்குச் சாதகமானவை என்று பேசுவது ஸ்டாலினின் அறியாமையைக் காட்டுகிறது.’’

‘‘ஆனால், ‘குறைந்தபட்ச ஆதார விலை குறித்து இந்தச் சட்டங்களில் குறிப்பிடவில்லை’ என்று அ.தி.மு.க எம்.பி-யே நாடாளுமன்றத்தில் பேசினாரே..?’’

‘‘இந்தச் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பானவை அல்ல. இது குறித்து விளக்கம் கொடுத்த பிரதமர் மோடியே, ‘குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்’ என்று சொல்லியிருக்கிறார். அதேபோல, விவசாயப் பொருள்களை குறிப்பிட்ட வழியில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் இந்தச் சட்டம் கட்டாயப்படுத்தவில்லை. சந்தையில் பல நிறுவனங்களும் வரும்... விவசாயிகள் அவர்களிடமும் விற்பனை செய்யலாம்.’’

‘‘முன்பு ஒருமுறை நீங்கள், ‘மத்திய பா.ஜ.க அரசு, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கிறது’ என்று சொல்லியிருந்தீர்கள். இன்னும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறீர்களா?’’

‘‘தேசிய ஒற்றுமை வலுப்பட வேண்டும் என்பதற்காக, மாநில உரிமைகளை நீர்த்துப்போகச் செய்கிறார்கள். ‘ஒரே நாடு ஒரே அரசு’ என்று சொல்லி மாநில அரசின் உரிமையைப் பறிக்க முற்படுகிறார்கள். இதன் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசின் அதிகாரம் அதிகரித்துக்கொண்டேதான் சென்றிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுகிறார்கள்.’’

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

‘‘சில மாதங்களுக்கு முன்பு நீங்கள், ‘அ.தி.மு.க தனித்து நின்றாலே ஆட்சியைப் பிடிக்கும்’ என்றும் பேசியிருந்தீர்கள். இப்போது என்ன சொல்கிறீர்கள்?’’

‘‘அப்போதும்கூட அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர்களே ‘நாங்கள் 200 தொகுதிகள் வரை வெற்றி பெறுவோம்’ என்று சொல்லி வருகிறார்கள். அந்த நம்பிக்கையில் தான் நானும் அப்படிச் சொன்னேன்.’’

‘‘ஆனால், உங்கள் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க 40 முதல் 60 இடங்கள் வரை கேட்பதாகத் தகவல்கள் வருகின்றனவே..?’’

‘‘எத்தனை தொகுதிகள் கேட்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. எத்தனை இடங்கள் கொடுக்கப்படும் என்பதையும் கட்சித் தலைமையே முடிவு செய்யும். கூட்டணி வெற்றியடைய வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வின் ஒரே எதிர்பார்ப்பு. கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் ஓர் இடத்தில்கூட வெற்றிபெறாதவர்கள், இந்த முறை இரட்டை இலக்க எண்ணிக்கையில் சட்டமன்றத்துக்குள் செல்ல நினைக்கிறார்கள். அதில் எங்களுக்கும் உடன்பாடுதான்.’’

‘‘ரஜினிகாந்த் கட்சியைத் தொடங்குவதாக சொல்லியிருக்கும் நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியச் சென்று, ‘கூட்டணிக்கு அழைத்தால் நாங்கள் அதற்குத் தயார்’ என்று சொல்லியிருக்கிறாரே..?’’

‘‘நாங்களாகச் சென்று யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. எங்களுடனேயே 13 கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன. மேலும், தி.மு.க கூட்டணியிலுள்ள இரண்டு கட்சிகளும் பேசிவருகின்றன. ரஜினி நல்ல மனிதர். எங்கள் கொள்கையைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். ‘அ.தி.மு.க அரசு எடுத்த முடிவுகள் சரி’ என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். அப்படியிருக்கும்போது, ‘கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை’ என்று துணை முதல்வர் சொல்ல வேண்டிய அவசியமில்லை.’’

‘‘நீட் தேர்வைத் தடுக்கத் தவறியதை மறைக்கத்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏழரை சதவிகித இட ஒதுக்கீட்டை எடப்பாடி அரசு கொடுத்திருக்கிறது என்று எழுந்திருக்கும் விமர்சனத்தைப் பற்றி..?’’

‘‘ஏழரை சதவிகித இட ஒதுக்கீட்டை ஆரம்பநிலையிலேயே எதிர்த்தது தி.மு.க-தான். அரசாணை வெளியிடுவதைத் தெரிந்துகொண்டு முன்கூட்டியே அறிக்கை விடுவது ஸ்டாலினின் போலித்தனத்தின் உச்சம். ஒரு மாயவலையைப் பின்னி அரசு செய்யக்கூடிய சாதனைகளை, தாங்கள் செய்வதாகக் காட்டிக்கொள்வது பிரசாந்த் கிஷோரின் யுக்தி.’’

‘‘சூரப்பா விவகாரத்தில் உண்மையில் என்னதான் நடக்கிறது?’’

‘‘விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. அவர் தரப்பிலும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. விசாரணை நியாயமான முறையில் நடக்கும்.’’

‘‘உங்களையும் பா.ஜ.க முகமாகவே பலரும் பார்க்கிறார்களே?’’

‘‘நான் ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ் - சுதேசி விழிப்புணர்வு அமைப்பில் இருந்தேன். அந்தச் சித்தாந்தங்களின்மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது. அதேசமயம், அ.தி.மு.க-வுக்கு வந்த பிறகு, சொந்தக் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தது கிடையாது. மோடியும் அருண் ஜெட்லியும் எனக்கு இன்ஸ்பிரேஷன்கள் மட்டுமே. ஆனால், நான் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் ஜெயலலிதா மட்டும்தான். அந்த அடிப்படையில் தான் அ.தி.மு.க-வுக்கு உண்மையாக இருக்கிறேன். ஒருபோதும் அ.தி.மு.க-விலிருந்து விலகுவது என்ற எண்ணத்துக்கு இடமில்லை.’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism