Published:Updated:

“மனுஸ்மிருதியை எதிர்ப்பது தி.மு.க-வின் வேலையல்ல!”

நாஞ்சில் சம்பத் விளக்கம்

பிரீமியம் ஸ்டோரி

ரசியல் மேடையிலிருந்து இறங்கி, இலக்கிய மேடையேறிய நாஞ்சில் சம்பத், மறுபடியும் தி.மு.க ஆதரவாளராக முழங்க ஆரம்பித்த நேரம்... கொரோனா ஊரடங்கு ஆரம்பித்துவிட்டது! பாவம், அவர் மட்டும் என்னதான் செய்வார்? ஊரடங்கால் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், மணக்காவிளையில் குடும்பத்தோடு பொழுதைக் கழித்துவருகிறார். அவரிடம் இன்றைய அரசியல் நிலவரம் குறித்துப் பேசினோம்!

“தி.மு.க-வில் அதிகாரபூர்வமாக எப்போது இணையப்போகிறீர்கள்?’’

“அதிகாரபூர்வமாக இணைய வேண்டிய அவசியம் இல்லை; நான் தி.மு.க-வில்தான் இயங்குகிறேன். தி.மு.க-வின் வெற்றிக்கு உழைப்பதில் சித்தமாக இருக்கிறேன். வகுப்புவாத சக்திகள், தமிழகத்தில் காலூன்றாமல் தடுக்கிற வல்லமை தி.மு.க-வுக்கு மட்டுமே உண்டு. அந்தவகையில், தி.மு.க-வின் குரலை எதிரொலிப்பதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்!’’

“மனுஸ்மிருதியை எதிர்ப்பது தி.மு.க-வின் வேலையல்ல!”

“நீங்கள் சொல்வதுபோல் ‘வகுப்புவாத சக்திகளைக் காலூன்றவிடாமல் தடுக்கிற’ தி.மு.க-வே சமீபகாலமாக இந்து மத ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவருகிறதே..?’’

“தி.மு.க., மக்களைச் சார்ந்து இருக்கக்கூடிய வெகுஜன இயக்கம். ‘நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்; பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன்’ என்று சொன்ன அறிஞர் அண்ணா, பிறகு ஓரடி இறங்கிவந்து ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற நிலைப்பாட்டுடன்தான் மக்களைச் சந்தித்தார். அந்தவகையில் மக்களின் கடவுள் நம்பிக்கையில், வழிபாட்டு அணுகுமுறையில் எந்தவித அத்துமீறலையும் செய்வதற்கு தி.மு.க விரும்பவில்லை.”

“ஆனால், தி.மு.க கூட்டணியிலுள்ள திருமாவளவன், ‘மனுஸ்மிருதி’ குறித்துப் பேசிய பேச்சு, சர்ச்சையாக்கப்பட்டிருப்பது கூட்டணிக்குப் பாதகம்தானே..?’’

“அப்படியில்லை... 1971 சட்டமன்றத் தேர்தலின் போது, ‘ராமர் சிலையை செருப்பால் அடித்தார்கள்’ என்று கூறி, தி.மு.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன. ஆனால், அந்தத் தேர்தலில்தான் தி.மு.க 184 இடங்களில் வெற்றிபெற்றது. எனவே, மக்கள் இதைப் பற்றி யெல்லாம் கவலைப் பட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ‘நமது வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் தருபவர்கள் யார், உரிமைகளை மீட்டெடுப்பவர்கள் யார்?’ என்பதில் மட்டும்தான் மக்களின் கவனம் இருக்கும்.’’

“திருமாவளவன், ‘மனுஸ்மிருதி’யைப் பற்றி தற்போதும் பேச வேண்டிய அவசியம் இருப்பதாகக் கருதுகிறீர்களா?’’

“பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவப் படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்துவிட்டதா... அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்துவிட்டாரா... இவையெல்லாம் எதனுடைய பிரதிபலிப்பு? ‘ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேறிவிடக் கூடாது’ என்கிற மனுஸ்மிருதி மீதான நம்பிக்கைதானே!”

“மனுஸ்மிருதியை எதிர்ப்பது தி.மு.க-வின் வேலையல்ல!”

“இந்த விஷயத்தில், திருமாவளவன் மீதான வழக்கைக் கண்டித்துக் குரல் கொடுக்கிற தி.மு.க., மனு ஸ்மிருதிக்கு எதிராக பெரியதாகவோ, நேரடியாகவோ எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லையே... ஒருவேளை இந்துக்களின் ஓட்டுகள் கிடைக்காமல் போய்விடும் என்கிற பயமா?’’

“மனுஸ்மிருதியை எதிர்ப்பது தி.மு.க-வின் வேலையல்ல. அதிகாரத்தில் இருந்துகொண்டு நாட்டு மக்களின் கண்ணீரையும் ரத்தத்தையும் காவு கேட்கிற பா.ஜ.க-வை அகற்றுவதுதான் தி.மு.க-வின் வேலை. தவிர, வகுப்புவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக எதையாவது உளறிக்கொட்ட, அந்த உளறல்களுக்கு தி.மு.க பதில் சொல்ல வேண்டிய அவசியம் சில சமயங்களில் தானாகவே ஏற்பட்டுவிடுகிறது. மற்றபடி, ‘இதை, இப்படித்தான் பேச வேண்டும்’ என்றெல்லாம் தி.மு.க காத்திருக்கவில்லை!’’

“இந்து சமயத்தின் மீதான ஆதரவு நிலைப்பாடு மட்டுமல்ல... சமீபத்தில் ‘800’ திரைப்பட சர்ச்சையின்போதும் ஈழம் விவகாரம் தொடர்பாக எந்தவிதக் கருத்தும் சொல்லாமல் தி.மு.க ஒதுங்கிக்கொண்டதே..?”

“சர்ச்சைகளில் சிக்க வேண்டாம் என்று தி.மு.க கருதியிருக்கலாம். இது குறித்த தெளிவான பதிலை நீங்கள் தி.மு.க தலைமையிடம்தான் கேட்க வேண்டும்.’’

“ஆனால், ‘ஈழம் விவகாரத்தில், தி.மு.க அரசு துரோகம் செய்துவிட்டது’ என்று கடந்த காலங்களில் நீங்களே பேசியிருக்கிறீர்களே..?’’

“ஆமாம்... பேசினேன்தான். ஆனால், கடந்த காலங்களிலிருந்து பாடம் பெற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு அண்ணன் ஸ்டாலின், மிகுந்த பக்குவப்பட்டிருக்கிறார்; முதிர்ச்சியடைந் திருக்கிறார்.’’

“சிறையிலிருந்து சசிகலா திரும்பி வந்தால், தமிழக அரசியல் சூழலில் என்ன மாற்றம் நிகழும்?’’

“சசிகலாவுக்கு எதிராக எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைக்காத முதலமைச்சரின் அணுகுமுறை, அமைச்சர்கள் சிலரது கள்ள மௌனம், சசிகலாவால்தான் அ.தி.மு.க-வைக் காப்பாற்ற முடியும் என்ற தொண்டர்களின் நம்பிக்கை என்பது போன்ற அனுமானங்களுக்கு இப்போதே எந்தவொரு பதிலையும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.’’

“இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் - டி.டி.வி மூவரையும் ஒப்பிடுங்களேன்...’’

“முன்னிருவரும் கிஞ்சித்தும் நன்றி உணர்வே இல்லாதவர்கள். நாட்டில் என்ன நடக்கிறது, அரசியலில் எப்படி நாம் நடைபோட வேண்டும் என்கிற குறைந்தபட்ச ஞானம்கூட இல்லாதவர்

டி.டி.வி!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு