Published:Updated:

கறுப்பு எம்.ஜி.ஆர்., வெள்ளை எம்.ஜி.ஆர். என்று யாரும் கிடையாது!

வைகைச் செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
News
வைகைச் செல்வன்

வெளுத்துக்கட்டும் வைகைச் செல்வன்

.தி.மு.க-வில், இலக்கிய ஆர்வம்கொண்ட ஆளுமைகளில் முதன்மையானவர் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான வைகைச் செல்வன். ‘வேல் யாத்திரை, இட ஒதுக்கீடு, எம்.ஜி.ஆர்-மோடி சித்திரிப்புகள்...’ எனத் தமிழக அரசியலில், பட்டையைக் கிளப்பிவரும் பரபரப்புகள் குறித்து அவரிடம் பேசினேன்...

“சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி குஷ்புவைக் கைதுசெய்த தமிழக அரசு, பா.ஜ.க-வின் ‘வேல் யாத்திரை சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும்’ என்ற புகார் மனுக்களை மட்டும் கண்டுகொள்ளவில்லையே... ஏன்?’’

“இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என எல்லா மதங்களைச் சேர்ந்த பக்தர்களுமே தங்கள் கடவுள்மீதுகொண்ட நம்பிக்கையின்பால், நடைப்பயணம் மேற்கொள்கிறார்கள்தான். அந்தவகையில், இந்த ‘வேல் யாத்திரை’யும் நல்ல நோக்கத்துடன் நடத்தப்பட்டால், அதனால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், மற்றவர்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில், யாத்திரையின் செயல்பாடுகள் இருக்குமேயானால், யாத்திரைக்கான அனுமதி குறித்து முதல்வர் முடிவுசெய்வார்.’’

“எம்.ஜி.ஆரை ரோல் மாடலாகக்கொண்டு, பா.ஜ.க-வினர் மோடியைச் சித்திரிப்பதில் உங்களுக்கு ஏன் கோபம்... எம்.ஜி.ஆர் புகைப்படத்தைப் பயன்படுத்த காப்பிரைட் வைத்திருக்கிறீர்களா?’’

(சிரிக்கிறார்). “திரைப்படங்களில் எம்.ஜி.ஆரைப் பார்த்து ரசித்து, விசிலடித்துக் கொண்டாடிய வகையில், அவர் எல்லோருக்கும் பொதுவானவராக இருக்கலாம். ஆனால், அவருக்கென்று ஒரு கொள்கையும், கோட்பாடும், லட்சியமும் கொண்ட ஓர் கட்சியாக அ.தி.மு.க ஏற்கெனவே இருந்துவருகிறது. எனவே, எம்.ஜி.ஆர் படத்தைப் பயன்படுத்தும் முழு அங்கீகாரமும் தகுதியும் எங்களுக்குத்தான் இருக்கின்றன. உலகம் முழுவதுமுள்ள எம்.ஜி.ஆர் ரசிகர்கள், அவரது புகைப்படத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், ‘வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எம்.ஜி.ஆர் படத்தைப் பயன்படுத்தி மாற்று அரசியல் செய்யக் கூடாது’ என்பதுதான் எங்களுடைய வாதம்!’’

கறுப்பு எம்.ஜி.ஆர்., வெள்ளை எம்.ஜி.ஆர். என்று யாரும் கிடையாது!

“கடந்த காலங்களில்கூட நடிகர் விஜயகாந்த் ‘கறுப்பு எம்.ஜி.ஆராக’த் தன்னை அரசியலில் அடையாளப் படுத்திக்கொண்டாரே..?’’

“அப்போதும் நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தோமே... அம்மாவும் இது குறித்து அறிக்கையே வெளியிட்டார். சூரியன் என்றாலும், சந்திரன் என்றாலும் அது ஒன்றே ஒன்றுதான். அதுபோல, எம்.ஜி.ஆர் என்றால் புரட்சித்தலைவர் மட்டும்தான். இதில், கறுப்பு எம்.ஜி.ஆர்., வெள்ளை எம்.ஜி.ஆர் என்றெல்லாம் யாரும் கிடையாது.’’

“தி.மு.க தலைமையை அநாகரிகமாகச் சித்திரித்து கோவையில் போஸ்டர் ஒட்டிய அ.தி.மு.க-வினர்மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல்துறை, போஸ்டரை கிழித்த தி.மு.க-வினர்மீது வழக்கு பதிந்திருக்கிறதே..?’’

“எடப்பாடியார் மற்றும் மு.க.ஸ்டாலின் படங்களைப் போட்டு, ‘தன்னம்பிக்கைமிக்க தலைமை வேண்டுமா, துண்டுச்சீட்டு தலைமை வேண்டுமா’ என்று கேட்பதுபோல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்த போஸ்டர்களைக் கிழித்து, தேவையற்ற ரகளையை தி.மு.க-வினர் செய்ததால், வன்முறை வெடித்தது. ஆக, இந்தக் கலவரத்தையும் பிரச்னையையும் தூண்டிவிட்டது தி.மு.க-தான். அடித்தட்டில் இருக்கக்கூடிய அப்பாவி அ.தி.மு.க-வினர், இது போன்ற வன்முறை-அநாகரிக அரசியலில் ஈடுபட மாட்டார்கள்!’’

“அச்சகத்தின் பெயர் இன்றி, அநாகரிகமான வார்த்தைகளில் போஸ்டர் அடித்த அ.தி.மு.க-வினர் மீது தவறு இல்லை; போஸ்டரைக் கிழித்த தி.மு.க-வினர் மீதுதான் தவறு என்கிறீர்களா?’’

“அ.தி.மு.க தரப்பில் ஒட்டப்படும் போஸ்டர்கள் அனைத்திலுமே சம்பந்தப்பட்ட அச்சகத்தின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தக் கொரோனா காலகட்டத்தில் ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் இது போன்று பெயரின்றி அச்சடிக்கப்பட்ட தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். அது பற்றிய முழு விவரம் எனக்குத் தெரியவில்லை!’’

“அதே போஸ்டர், ‘உழைப்பை நம்பலாமா, பிறப்பை நம்பலாமா’ என்றும் கேள்வி கேட்கிறது. வாரிசு அரசியலைப் பற்றிக் கேள்வி கேட்க அ.தி.மு.க-வுக்குத் தகுதி இருக்கிறதா?’’

“வாரிசு அரசியல் என்று சொன்னால், தலைமை பீடத்துக்கு வருகிறவர்களைத்தான் நாம் பிரித்து கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில் பார்த்தால், கருணாநிதி குடும்பத்தின் வாரிசுகள் அனைவரும் தி.மு.க-வின் தலைமைப் பொறுப்புகளில் இருக்கின்றனர். முன்னாள் தி.மு.க அமைச்சர்களின் வாரிசுகள்தான் மாவட்டச் செயலாளர்களாக பொறுப்புவகிக்கிறார்கள்!’’

“சசிகலா விடுதலை, தமிழக அரசியலில் குறிப்பாக அ.தி.மு.க-வில் பெரியதொரு மாற்றத்தை உண்டு பண்ணும் என்கிறார்களே..?’’

“அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலாவைத் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், அவர் முதலமைச்சர் ஆகும் முயற்சியைக் காலம் ஏற்கவில்லை... நிராகரித்துவிட்டது. அவர் இல்லாமலேயே இன்றைக்கு அ.தி.மு.க மிகப்பெரிய தூரத்தைக் கடந்து வந்துவிட்டது. எனவே, இந்த நீண்ட பயணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் சசிகலாவின் தாக்கம் என்பது பெரிதாக இருக்காது!’’

“ஆனால், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவருமே சசிகலா குறித்துத் தனிப்பட்ட கருத்து எதையும் தெரிவிக்காமல் இருக்கிறார்கள், அவர்களை சசிகலாவின் தம்பி திவாகரனும் பாராட்டுகிறாரே..?’’

“இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இருவருடைய கருத்துகளைத்தான் நாங்கள் பிரதிபலிக்கிறோம். எல்லாக் கருத்துகளையும் கட்சியின் தலைமையே சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள். உடலில் இடது கை ஒரு வேலையைச் செய்கிறது, வலது கை ஒரு வேலையைச் செய்கிறது என்றால், அது உடல் என்ற ஒற்றை அம்சத்திலுள்ள உறுப்புகளின் அங்க அசைவுகள்தான்!’’

கறுப்பு எம்.ஜி.ஆர்., வெள்ளை எம்.ஜி.ஆர். என்று யாரும் கிடையாது!

“7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக, தமிழக பா.ஜ.க-வினரே குரல் கொடுக்கின்றனர்... தமிழக அரசும் அரசாணை வெளியிடுகிறது... ஆளுநர் ஒப்புதல் அளிக்கிறார்... சொல்லிவைத்தாற்போல் நடக்கிறதே?’’

“மருத்துவக் கல்வியில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்துதான், 7.5% உள் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதாவை நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, அமைச்சர்கள் ஐவரும்கூட ஆளுநரை நேரில் சந்தித்தனர். மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குக் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும், தி.மு.க-வும் போராட்டம் நடத்திக்கொண்டிருக் கிறது என்ற சூழலில், இந்த விஷயத்தில் உறுதியான ஒரு முடிவெடுத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

சமூகநீதியைப் பின்பற்றும் தமிழ்நாட்டில், இதற்கு மேலும் தர்மசங்கடமான, இக்கட்டான சூழலை ஏற்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் ஆளுநரும் ஒப்புதல் கொடுத்திருக்கிறார். எனவே, முழுக்க முழுக்க இதனுடைய முழுப் பெருமையும் அ.தி.மு.க-வுக்கு மட்டுமே சொந்தம்!’’

“போராட்டங்கள் மூலம் தி.மு.க கொடுத்த அழுத்தமும்தான் இந்த விஷயத்தில் வெற்றி கிடைக்க வழி செய்திருக்கிறது அல்லவா?’’

“அப்படியில்லை... தி.மு.க., இந்த விஷயத்தை அரசியல் செய்வதற்காகக் கையிலெடுத்தது. அதனால்தான் ‘இந்தப் போராட்டத்தில், அ.தி.மு.க-வினரோடு நாங்களும் கலந்து கொள்கிறோம்’ என்றார்கள். அ.தி.மு.க தொடங்கப்பட்டு 49 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், எப்போது தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒன்றாகப் போராட்டத்தில் ஈடுபட்டன? எங்களுடைய பிரதான எதிரியே தி.மு.க-தான். `உங்களோடு நாங்களும் சேர்ந்து போராடுகிறோம்’ என்று ஒரு பொய்ப் பிரசாரத்தை தி.மு.க-வினர் செய்துகொண்டிருந்தார்கள். இவர்களது நாடகத்தை முறியடிப்பதற்காகவே நாங்களும் அரசாணையை வெளியிட்டோம்!’’

“ஜெ. மரண மர்மம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கக் கோரி, ‘தர்ம யுத்தம்’ நடத்திய, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே ஆணையத்தில் ஆஜராகாமல் இரண்டு வருடங்களாக இழுத்தடிக்கிறாரே... ஏன்?’’

“துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராவதற்கு நேரம் கேட்டிருக்கிறார்... அவ்வளவுதான். மற்றபடி நேரில் ஆஜராகி, உண்மையைச் சொல்வதற்கு அவர் எப்போதுமே தயங்கிய தில்லை!’’

“நீதிபதி ஆறுமுகசாமி, ‘விசாரணை தாமதம் ஆவதை தமிழக அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசுத் தலைமை வழக்கறிஞர் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர்’ என்கிறாரே... எனில், தமிழக அரசுக்கு இந்த விஷயத்தில் ஏன் இத்தனை மெத்தனம்?’’

“தமிழக அரசு இந்த விஷயத்தில் எந்தவித மெத்தனத்தையும் காட்டவில்லை. அப்போலோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. அந்த விசாரணை முடிந்த பிறகுதான், ஆணைய விசாரணையை முடித்து அறிக்கையை வெளியிட முடியும். அரசு வழக்கறிஞர்கள் மட்டுமே ஒரு வழக்கில், தீர்ப்பு நிலையைக் கொண்டுவந்துவிட முடியுமா... அது நீதியரசர்களின் முடிவு அல்லவா? எனவே, மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்துவரும் இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றம்தான் இதற்கு நல்லதொரு பதிலைத் தர வேண்டும்!’’