பிரீமியம் ஸ்டோரி

“பதவி விலகச் சொல்லி ஜெயலலிதா என்னை அடித்துவிட்டார்” என நாட்டையே அதிர வைத்தவர் சசிகலா புஷ்பா. ‘தமிழகத்தில் மோடி ஆட்சி அமைய வேண்டும்’ என்பதில் தொடங்கி, ‘வைகோ பதவிப் பிரமாணத்துக்குத் தடைவிதிக்க வேண்டும்’ என்று மனு அளித்தது வரை, அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரான இவரின் நடவடிக்கைகள் அரசியலில் புயலைக் கிளப்பியிருக் கின்றன. சசிகலா புஷ்பாவிடம் சில கேள்விகளைக் கேட்டபோது, சரவெடியாக வந்துவிழுந்தன பதில்கள்.

வைகோ ஒரு சந்தர்ப்பவாதி!

‘‘பி.ஜே.பி-தான் நல்லாட்சி தரும், மோடிதான் வல்லவர் என்கிறீர்கள். இது, ‘மோடியா, லேடியா?’ எனக் கேட்ட ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம் இல்லையா?’’

‘‘நிச்சயமாக இல்லை. நாங்கள் பி.ஜே.பி-யுடன்தான் தேர்தலைச் சந்தித்தோம். இப்போதும் கூட்டணியில் இருக்கிறோம். அ.தி.மு.க நிலைப்பாட்டுக்கு மாறாக எதுவும் நான் பேசவில்லையே. மோடியின் மக்கள் நலத் திட்டங்கள் தமிழகத்தில் பரவலாகக் கொண்டுசேர்க்கப்பட வேண்டும். அதற்காகத்தான் குரல் கொடுக்கிறேன்.’’

‘‘ஈரோடு ரயில் நிலையத்துக்குப் பெரியாரின் பெயர் சூட்ட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கனிமொழி கோரிக்கை விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளீர்களே?’’

‘‘கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடக் கொள்கையையும் பெரியாரையும் வைத்து தமிழகத்தில் அரசியல் வியாபாரம் செய்கிறார்கள். தமிழகத்துக்குப் பெரியார் மட்டும் போதும் என முடிவு செய்வதற்கு இவர்கள் யார்?’’

‘‘மாநிலங்களவை உறுப்பினராக வைகோ பதவியேற்க அனுமதிக்கக் கூடாது என்று துணை ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளீர்களே?’’

‘‘விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசி, தேசத்துரோகக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை பெற்றவர் வைகோ. தண்டனை பெற்றவுடன், ‘இனிமேலும் நான் அப்படித்தான் பேசுவேன்’ என்று பேட்டி அளிக்கிறார். இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? அன்று காங்கிரஸுக்கு எதிராகப் பேசியவர், இன்று தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் ஆதரவுடன் எம்.பி ஆகப்போகிறார். இதைவிட பச்சை சந்தர்ப்பவாதம் என்ன இருக்கிறது? துணை ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியதிலிருந்து, எனக்கு சர்வதேச மிரட்டல் போன்கள் வந்தன. இதுதொடர்பாக டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளேன்.’’

‘‘நடிகர் விஜய்யை ஏன் விமர்சிக்கிறீர்கள்?’’

‘‘ஜி.எஸ்.டி பற்றி தவறாகப் பிரசாரம் செய்தது அவர்தானே... கோடி கோடியாகச் சம்பாதித்த இவர்கள், மக்களுக்கு என்ன சேவை செய்துவிட்டார்கள்? கருத்துரிமை என்கிற பெயரில் ஜி.எஸ்.டி குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் தவறான பிரசாரம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.’’

‘‘நீங்களும் பி.ஜே.பி-யை ஆதரிக்கிறீர்கள். அ.தி.மு.க தலைவர்களும் பி.ஜே.பி-யுடன் இணக்கமாக இருக்கிறார்கள். பிறகு, அ.தி.மு.க கட்சித் தலைவர்களுடன் ஒன்றாகச் செயல்பட வேண்டியதுதானே?’’

‘‘அம்மாவுக்குப் பிறகு கட்சி சீரழிந்துவிட்டது. இரண்டு பேர் கையெழுத்திட்டு கட்சி நடத்துவதெல்லாம் அ.தி.மு.க-வுக்கு ஒத்துவராது. ஒற்றைத் தலைமைதான் வேண்டும்.’’

‘‘நீங்கள் எப்போது பி.ஜே.பி-யில் இணையப் போகிறீர்கள்?’’

‘‘நான் அன்றும் இன்றும் அ.தி.மு.க உறுப்பினர்தான். மாநிலங்களவையில் அ.தி.மு.க எம்.பி.யாக-த்தான் செயல்படுகிறேன். எதிர்காலம் என்ன என்பது குறித்து, காலம்தான் முடிவுசெய்யும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு