Published:Updated:

“எடப்பாடி, பன்னீர்... துரோக நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!” - சுளீர் தினகரன்

டி.டி.வி.தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
டி.டி.வி.தினகரன்

ஒரே மாதத்தில் என்னை ராஜ்யசபாவுக்கு அனுப்பினார்கள்.

“எடப்பாடி, பன்னீர்... துரோக நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!” - சுளீர் தினகரன்

ஒரே மாதத்தில் என்னை ராஜ்யசபாவுக்கு அனுப்பினார்கள்.

Published:Updated:
டி.டி.வி.தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
டி.டி.வி.தினகரன்
மிழகத் தேர்தல் களத்தில் பரிசோதிக்கப்படாத பந்தயக் குதிரையாக வலம் வருகிறார் டி.டி.வி.தினகரன். விஜயகாந்தின் தே.மு.தி.க-வுடன் இணைந்து தினகரனின் அ.ம.மு.க அமைத்திருக்கும் அணி, பிரதானக் கூட்டணிகள் இரண்டுக்குமே திகில் கொடுத்திருக்கிறது. தினகரனால் யார் வீழ்த்தப்படுவார், அவர் பிரிக்கும் வாக்குகள் யாருக்குப் பாதகமாக முடியும் என அரசியல் நிபுணர்கள் விவாதங்கள் செய்கிறார்கள். தமிழகம் முழுக்கச் சுற்றிச் சுழன்று பிரசாரம் செய்துவரும் தினகரனை கிருஷ்ணகிரியில் சந்தித்தபோது, ரொம்பவே இயல்பாக எல்லாக் கேள்விகளையும் எதிர்கொண்டார்.

‘‘சசிகலாவை அ.தி.மு.க-வில் சேர்க்க பரிசீலிக்கலாம்’’ என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறாரே?’’

‘‘சேர்த்துக்கொள்ளுமாறு சித்தி அவரிடம் கேட்டார்களா? கேட்காத ஒன்றை இவர்களாகவே சேர்க்கமாட்டோம், பரிசீலிப்போம், சேர்ப்போம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேவையில்லாத பேச்சுகள்தான் சித்தி மனசை நோகடித்துள்ளது. சிறையிலிருந்து வெளியில் வந்தபோது, தீவிர அரசியலில் ஈடுபடும் முடிவோடு இருந்தார். ‘அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருந்து பொது எதிரியான தி.மு.க-வைத் தேர்தலில் தோற்கடிக்கவேண்டும்’ என்றுதான் சொன்னார். எடப்பாடி டெல்லியில் போய் நின்றுகொண்டு ‘சேர்க்க வாய்ப்பில்லை’ என்கிறார். அதாவது, சித்தி ஏதோ அப்ளிகேஷன் போட்ட மாதிரியும், நான் ஏதோ சேருவதற்கு வருகிறமாதிரியும் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

‘தினகரன்மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால், அவர் அவசரப்பட்டுவிட்டார்’ என்று ஒரு பேட்டியில் பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறார். நான் எங்கே அவசரப்பட்டேன்?! அவர்தான் தவறான முடிவுகளை எடுத்துவிட்டு இப்போது ரிவர்ஸில் வருகிறார். அவர் இதயத்திலிருந்து பேசவில்லை. மூளையும் வாயும் சேர்ந்து நயவஞ்சமாகப் பேசுகிற மாதிரி தெரிகிறது. தோல்வி பயத்தில் பேசுகிறார். ‘சின்னம்மாவையும், அவர் குடும்பத்தையும் விலக்கி வைக்கவேண்டும்’ என்று போர்க்கொடி தூக்கியவரே இவர்தான். அம்மா மறைவில் மர்மம் இருப்பதாகச் சொல்லி விசாரணைக் கமிஷன் கேட்டவரே இவர்தான். இப்போது கதை விடுகிறார்... எல்லாம் மக்களை ஏமாத்துகிற வேலை. மக்கள் ஏமாளிகள் அல்ல!’’

``சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பது உங்களுக்கு பலவீனம்தானே? சசிகலா தன் முடிவைத் தெரிவித்தபோது உங்கள் மனநிலை எப்படியிருந்தது?’’

‘‘எனக்கு ரொம்ப வருத்தமாகத்தான் இருந்தது. அவர் ஒதுங்கியது பலம், பலவீனம் என்று சொல்லமுடியாது. சித்தி மானசீகமாக எங்களை ஆதரிப்பார். சிறையில் இருந்தபோதும் சரி, வெளியே வந்தபிறகும் சரி, எனக்கு அவர் ஒரு மாரல் சப்போர்ட். அவர் தற்காலிகமாக அரசியலிலிருந்து ஒதுங்கித்தான் இருக்கிறார். அரசியலை விட்டு விலகவில்லை.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

அவர் சிறையில் இருந்தபோது, வெளியில் நடந்த அரசியல் நிகழ்வுகள் அவருக்குத் தெரியாது. வெளியே வந்ததும், இங்கே நடந்த நிகழ்வுகளை மீடியாக்களில் பார்த்து மனம் நொந்துவிட்டார். என்னை அழைத்து, ‘என்னப்பா... நாம ஏதோ அவர்களுடன் சேர்வதற்குக் கேட்டமாதிரி என்னை ஏலம்போடுகிறார்களே? என்னைச் சேர்க்கலாம் என்று ஒருத்தர் பேசுகிறார். சேர்க்கக்கூடாது என்று இன்னொருவர் பேசுகிறார். நாம யாருகிட்டே கேட்டோம்? நான்தான் பொதுச்செயலாளர் என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கோமே? அப்படியிருக்க இப்படியெல்லாம் பேசுகிறார்களே?’ என்று வேதனைப்பட்டார்.’’

``அரசியலிலிருந்து விலக சசிகலாவுக்கு அழுத்தம் தரப்பட்டதா?’’

‘‘அப்படிப்பட்ட அழுத்தத்துக்கெல்லாம் பணிந்து போகிறவரா சித்தி? 1996-ல் சிறையில் இருந்தபோது, அம்மாவுக்கு எதிராக எத்தனையோ ஸ்டேட்மென்டுகள் கேட்டார்களே! என்னை காபிபோசா சட்டத்தின் கீழ் உள்ளே போட்டார்கள். டெல்லியில் இருந்து ஸ்பெஷல் டைரக்டர் அந்தஸ்தில் இருந்த ஒருவர் வந்து என்னைச் சந்தித்தார். ‘எல்லாத்துக்கும் அம்மாதான் காரணம்னு எழுதிக்கொடுங்க. உங்க மீதான கேஸைக் கிழித்துப்போட்டுவிடுகிறேன்’ என்றார். நான் மறுத்தேன். தி.மு.க சதித்திட்டம் தீட்டிய வழக்கில் சித்தி கடைசி வரை உள்ளே இருந்துவிட்டு வந்திருக்கிறார்களே தவிர, அவருக்கு யாராவது அழுத்தம் தர முடியுமா? மனவருத்தப்பட்டுதான் அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருக்க முடிவெடுத்தார். நானும்கூட வேண்டாம் என்றுதான் சொன்னேன். திடீரென ஒரு நாள், அறிக்கையை ரெடி செய்து வைத்துவிட்டார். மற்றபடி, எந்தப் புற அழுத்தமும் இல்லை.’’

``ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி - இருவரில் சசிகலாவுக்கு யார் அதிகம் துரோகம் இழைத்ததாகக் கருதுகிறீர்கள்?’’

‘‘இரண்டு பேர் துரோகமும் சமம்தான். துரோக நாணயத்தின் ஒரு பக்கம் எடப்பாடி, இன்னொரு பக்கம் ஓ.பன்னீர்செல்வம். முதல் துரோகம் செய்தவர் பன்னீர். அதைப் பயன்படுத்தி அவருக்கும் சேர்த்து எடப்பாடி துரோகம் செய்துவிட்டார். இதுதான் உண்மை. அந்த மனவருத்தத்தில்தான் பன்னீர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். எடப்பாடிக்கு ஒரு திடீர் வாய்ப்பு கிடைத்தது. நாலு வருடங்களை ஓட்டிவிட்டார். அரசு கஜானாவைத் தூர்வாரிவிட்டார். பண மூட்டையை வைத்துக்கொண்டு தேர்தலில் நிற்கிறார்.’’

``சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லையே?’’

‘‘ஏற்படுத்தவில்லைதான். நாடாளுமன்றத் தேர்தலில் ‘யார் பிரதமராக வரக்கூடாது’ என்பதைத் தமிழக மக்கள் ஒருமனதாக முடிவெடுத்தார்கள். பி.ஜே.பி-யை எதிர்த்தார்கள். காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இருந்ததால் ஜெயித்தார்கள். இப்போது நடப்பது ‘யார் தமிழக முதல்வராக வரவேண்டும்’ என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல். தீயசக்தி தி.மு.க-வையும், துரோக சக்தியான எடப்பாடி அண்டு கோ-வையும் புறக்கணித்து எங்களை மாற்று சக்தியாக மக்கள் ஏற்று ஜெயிக்கவைப்பார்கள்.’’

``இதுவரை தமிழகத்தில் மூன்றாவது அணியால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லையே?’’

‘‘நாங்கள் மூன்றாவது அணி அல்ல; மாற்று அணி! 1977-ம் ஆண்டு புரட்சித்தலைவர் தேர்தலில் நின்றபோது பல அணிகள் நின்றன. இருந்தாலும், மக்கள் அவரைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். மக்கள் நினைத்தால் எதுவும் நடக்கும். கருத்துக்கணிப்புகள், கருத்துத் திணிப்புகளைத் தாண்டி இப்போது கருத்துக் கணிப்பு மோசடியெல்லாம் வந்துவிட்டது. இதையெல்லாம் மக்கள் புறக்கணிப்பார்கள்.’’

`` ‘அ.தி.மு.க.வில் எங்கள் ஸ்லீப்பர்செல் இருக்கிறார்கள்’ என்று மீண்டும் மீண்டும் சொன்னீர்கள். அப்படி யாரும் தென்படவில்லையே?’’

‘‘ஸ்லீப்பர் செல்கள் என்றால், எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் மட்டுமல்ல! தொண்டர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அந்தக் கட்சியை முழுமையாக மீட்டெடுக்கும் வரை அவர்களுக்கு அங்கே வேலை இருக்கும். தொடர்ந்து அங்கே இருப்பார்கள். அவரவர் வேலையை அங்கிருந்தபடியே செய்வார்கள்.’’

``பெங்களூரு புகழேந்தி, செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் என்று உங்கள் பக்கம் இருந்த பலரும் வெவ்வேறு முகாம்களுக்குச் சென்றுவிட்டார்களே?’’

‘‘அவர்கள் சுயநலத்துடன் போயிருக்கிறார்கள். எம்.எல்.ஏ ஆகவேண்டும், அமைச்சர் ஆகவேண்டும்... அதுவும் ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஃபாஸ்ட்டா நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அது நடக்கவில்லை என்றவுடன் கிளம்பிவிடுவார்கள். அந்தச் சில பேரை நம்பி இந்தக் கட்சி இல்லை. உண்மைத் தொண்டர்கள் எப்போதும் எங்களுடன் இருப்பார்கள்.’’

`` ‘அ.ம.மு.க - பா.ஜ.க - அ.தி.மு.க. கூட்டணி அமையப்போகிறது’ என்று பேச்சு அடிபட்டதே?’’

‘‘இதெல்லாம் யாரோ திட்டமிட்டுக் கிளப்பிய வதந்தி.’’

``தே.மு.தி.க உங்கள் கூட்டணிக்கு பலம் என்று நினைக்கிறீர்களா?’’

‘‘நிச்சயமாக. திருத்தணியில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை, இந்தப் பக்கம் ஓசூர் வரை அவர்கள் கட்சிக்கு நல்ல கட்டமைப்பு இருக்கிறது. வாக்கு வங்கி இருக்கிறது. வாக்கு சதவிகிதம் வேண்டுமானால் தேர்தலுக்குத் தேர்தல் மாறலாம். கேப்டன் முன்பு போல ஆக்டிவாகச் செயல்படமுடியாத சூழ்நிலை இருந்தாலும், தொண்டர்கள், நிர்வாகிகள் என்று அனைத்துத் தரப்பினரும் தேர்தல் வேலைகளில் படுசுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். ஏன், கேப்டனே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறாரே! இதெல்லாம் எங்கள் கூட்டணிக்கு பலம்தான்.’’

``விஜயகாந்தைச் சந்தித்தபோது என்ன பேசினீர்கள்?’’

‘‘திடீரென கூட்டணி அமைந்தது. அனைத்தும் முடிவாகிற நேரத்தில் நான் கோவில்பட்டியில் வேட்புமனு செய்யப் போய்விட்டேன். அதனால், மரியாதை நிமித்தம் கேப்டனைச் சந்திக்கப்போனேன். ‘இதுக்கு முன்னால் அம்மாவைத்தான் சி.எம் என்று கேப்டன் சொன்னாரு. அதற்குப் பிறகு, உங்களைப் பார்த்து சி.எம்மாக வருவீங்கன்னு கேப்டன் வாழ்த்தினார்’ என்று சகோதரி பிரேமலதா என்னிடம் சொன்னார். கேப்டனிடம் ஆசீர்வாதம் வாங்கி வந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.’’

``சசிகலாவைத் தவிர நீங்கள் உட்பட மன்னார்குடி குடும்பத்தை ஜெயலலிதா விலக்கிவைத்திருந்தாரே, உங்களுக்கு ஜெயலலிதா பெயரைச் சொல்லி அரசியல் செய்ய உரிமை இருக்கிறதா?’’

‘‘அம்மா என் மானசீக குரு. அவர் எங்களை ஒதுக்கினாலும், அவர்மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தோம். தாய் என்கிற பாசத்தை வைத்திருந்தோம். வீட்டுப் பூஜையறையில் என் தாயாரின் படத்துக்கு அருகே அம்மா ஜெயலலிதாவின் படத்தை வைத்து பூஜித்து வருகிறேன். எனக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது?

உங்கள் கேள்விக்கு வருகிறேன்... ‘அம்மா உயிருடன் இருந்தபோதே தினகரனை விலக்கி வைத்திருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு, இவராக வந்துவிட்டார்’ என்று இப்போது பேசுகிறார்கள். என்னை அம்மா நீக்கி வைத்திருந்தது உண்மைதான். 2011-ல் அவர் வெற்றிபெற்றபோது சந்தித்ததுதான். அதன்பிறகு பார்க்கவில்லை. பிறகு எங்களை விலக்கி வைத்தார்கள். அதற்கும் முன்பே, என்னை விலக்கி வைத்தார்கள். அதற்குக் காரணம், உட்கட்சிப் பிரச்னை இல்லை. அது வேறு பிரச்னை. என்னை அரசியலுக்குக் கொண்டுவந்ததே அவர்தான். 1987-ல் புரட்சித் தலைவர் இறந்ததிலிருந்து அம்மாவுடன் இருந்தேன். 1999-ல் என்னை பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகவே அறிவித்தார்கள். ஜெயித்தேன். ஐந்தாண்டுகள் பணியாற்றினேன். 2004-ல் மீண்டும் பெரியகுளத்தில் சீட் கொடுத்தார்கள். தமிழகம் முழுக்க எங்கள் கட்சி தோற்றபோது, சொற்ப ஓட்டில் நான் தோற்றேன். ஒரே மாதத்தில் என்னை ராஜ்யசபாவுக்கு அனுப்பினார்கள். மூன்று, நான்கு ஆண்டுகள் கழித்து எங்கள் குடும்ப அரசியல் காரணமாக என்னை ஒதுங்கி இருக்கச் சொன்னார்கள். இருந்தேன். திரும்ப 2016-ல் அம்மா மறைவுக்குப் பிறகு என்னைச் சித்தி அழைத்தார். நான் வருவதாக இல்லை. 2017 பிப்ரவரி 14 நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, சின்னம்மா சிறைச்சாலைக்குச் செல்லவேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது எடப்பாடி உட்பட அனைவரும் சேர்ந்துதானே என்னைத் துணைப் பொதுச்செயலாளர் ஆக்கினார்கள்!’’

``ஆர்.கே. நகர்த் தொகுதியில் உங்களைக் காணவில்லை என்று போஸ்டர் ஒட்டினார்கள். 20 ரூபாய் நோட்டு விவகாரத்தை அ.தி.மு.க தீவிரமாகக் கிளப்புவதால் கோவில்பட்டிக்கு மாறினீர்களா?’’

‘‘ஆர்.கே. நகரில் தற்போது அ.தி.மு.க வேட்பாளராக நிற்கும் மதுசூதனனின் கைத்தடி ஒருவர்தான் அப்போது இப்படி வதந்திகளைப் பரப்பியவர். இந்தத் தேர்தலில்கூட, நான் ஆர்.கே. நகர், கோவில்பட்டி இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட விரும்பினேன். ஆனால், எனது நலம்விரும்பிகள் ‘இரண்டு தொகுதிகள் வேண்டாம்... தென்மாவட்டத் தொகுதி ஒன்றில் நில்லுங்கள்’ என வலியுறுத்தி னார்கள். எனக்குப் பதிலாக, தொகுதியில் மலிவுக் கட்டணத்தில் சிகிச்சை தரும், ‘5 ரூபாய் டாக்டர்’ என்று மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள காளிதாஸை நிற்க வைத்தேன்.

இடைத்தேர்தலில் ஜெயித்தபிறகு ஏழு, எட்டு மாதங்கள் தொகுதியில் போய் நான் நன்றி சொன்னேன். அப்போதெல்லாம் என்னிடம் 20 ரூபாய் நோட்டைக் காட்டிக் கேட்காத மக்களா பிறகு கேட்கப் போகிறார்கள்? நான் தேவைப்படும் போதெல்லாம் தொகுதி விசிட் போயிருக்கிறேன். தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகத்தில் எனது சார்பில் மனுக்களை வாங்கி உரிய நடவடிக்கை எடுத்து வந்தார்கள். சில சமயங்களில், தொகுதி மக்கள் என் வீட்டுக்கே தேடி வந்துவிடுவார்கள். என் நண்பர் மறைந்த வெற்றிவேல்தான் ஆர்.கே.நகர்த் தொகுதி மக்களுடன் நல்ல தொடர்பில் இருந்தார். இப்போது போட்டியிடும் கோவில்பட்டித் தொகுதியில் மக்களுடன் நேரடியாகத் தொடர்பில் உள்ளவர் மாணிக்கராஜா. ஜமீன்தாரர் பாரம்பர்யத்தை உடையவர். அவருக்குத் தொகுதியில்தான் வீடு இருக்கிறது. என் சார்பாக அவர் மக்களைச் சந்திப்பார். நானும் வாரம் ஒருமுறை விசிட் செய்வேன். அங்கே தங்குவதற்கு எனக்கு வீடு பார்க்கிறார்கள்.’’

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

``ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து சொல்லிவருகிறாரே?’’

‘‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக இருக்கிறது. அம்மா மரணத்துக்குப் பிறகு எங்கள் சித்தியைக் குறிவைத்து அதுமாதிரி பொய்ப் பிரசாரத்தைக் கிளப்பியதே தி.மு.க-தான். அவர்கள் பொய்ப் பிரசாரத்தில் மன்னர்கள் ஆயிற்றே! மு.க.ஸ்டாலின் அப்பா உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, நான் நலம் விசாரிக்கப் போனேன். ஏனெனில், அம்மா ஆஸ்பத்திரியில் இருந்தபோது, மு.க.ஸ்டாலின் வந்திருந்தார்.

மருத்துவமனை வாசலில் மீடியாவினர் சிலர். ‘கருணாநிதியை வெளிநாட்டுக்கு அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்று குடும்பத்தினர் சொல்கிறார்களாம். மு.க.ஸ்டாலின் மறுக்கிறாராமே?’ என்று நிறைய குற்றச்சாட்டுகளை அடுக்கி பதில் கேட்டார்கள். ‘வயதில் மூத்த தலைவர். உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். இதிலெல்லாம் நான் அரசியல் பண்ண விரும்பவில்லை’ என்று சொல்லிவிட்டு வந்தேன். குற்றச்சாட்டை யார்மீது வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால், எந்தக் கட்சியையும் தனிநபரையும் நான் தரம்தாழ்ந்து விமர்சனம் செய்வதில்லை. இவ்வளவு ஏன், ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் ‘தர்மயுத்தம்’ பன்னீரே ஜகா வாங்கிவிட்டாரே? மு.க.ஸ்டாலின்கூட இதே குற்றச்சாட்டை ஆர்.கே. நகர்த் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் சொன்னார். இப்போது தேர்தல் நேரம். அதனால் அதையே சொல்கிறார்.’’

``அம்மாவின் ஆட்சியைக் கொண்டுவருவோம் என்கிறீர்கள். ஆனால், நீங்களே அ.தி.மு.க-வை எதிர்த்துப் போட்டியிடுகிறீர்களே?’’

‘‘இப்போது நடப்பது அம்மா ஆட்சியா? நீட் தேர்வு, உதய் மின் திட்டம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம்... இப்படிப் பலவற்றைத் தடுத்து வைத்திருந்தார் அம்மா. இவர்கள் வந்து அனைத்தையும் அனுமதித்தார்கள். அம்மா படத்தைப் போட்டுக்கொண்டு இவர்கள் நடத்துவது துரோக ஆட்சி அல்லவா? கறையான் புற்று கட்டும். அதில் கருநாகம் புகுந்த கதையாக இவர்களின் செயல்பாடு உள்ளது. ஆட்சி அதிகாரம் அவர்களிடம் இருப்பதாலும், பி.ஜே.பி ஆதரவு இருப்பதாலும் ஓடுகிறது. தேர்தல் முடிந்த பிறகு, தொண்டர்கள் எங்களிடம் வந்துவிடுவார்கள்.’’

``2019 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் சசிகலா தரப்பில் உங்களிடம் பெருந்தொகை தேர்தல் செலவுக்குக் கொடுக்கப்பட்டதாகவும், அதை நீங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்களே?’’

‘‘கொடுக்கப்பட்டது, சொல்லப்பட்டது என்கிற தகவல்களெல்லாம் வதந்திகள். பாவம்... அவர் அப்போது சிறையில் இருந்தார். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் உறவினர்களில் சில புல்லுருவிகளும் இருக்கிறார்கள். அவர்கள்தான் இந்தமாதிரியான வதந்திகளை எனக்கு எதிராகக் கிளப்புகிறார்கள்.’’

``உண்மையைச் சொல்லுங்கள். உங்களுக்கும் சசிகலாவுக்கும் பனிப்போர் நடக்கிறதா?’’

‘‘உண்மையைச் சொல்கிறேன். அவர் என் சித்தி. தாய் ஸ்தானத்தில் இருப்பவர். அவருக்கும் எனக்கும் எந்தக் கருத்துவேறுபாடும் இல்லை. பனிப்போரும் இல்லை; வெயில் போரும் இல்லை. எங்களுக்குள் இணக்கமான அன்பான உறவு எப்போதும் இருக்கிறது.’’

``அ.தி.மு.க பொதுக்குழுவை எதிர்த்த வழக்கிலிருந்து விலகிவிட்டீர்கள். அ.தி.மு.க-வுக்கு உரிமை கோருவதை விட்டுவிட்டதாக இதை எடுத்துக்கொள்ளலாமா?’’

‘‘அப்படியில்லை. ஒரு கட்சி ஆரம்பித்தாலே, வேறு கட்சியில் இருக்கும் உரிமை போய்விடும். அதனால் விலகிவிட்டேன். ஆனாலும், ஜனநாயக முறைப்படி போராடி மக்களைச் சந்தித்து ஜனநாயக மன்றத்தில் வெற்றிபெற்று அ.தி.மு.க-வை மீட்டெடுப்பேன். அதற்கான ஆயுதம் அ.ம.மு.க. இதேநேரம், எங்கள் சித்தி சட்டப்போராட்டம் தொடர்ந்து நடத்தி அம்மாவின் கட்சியை மீட்டெடுப்பார்கள்.’’

``நீங்களும் பி.ஜே.பி-யின் பி டீமா?’’

‘‘நான் யாருக்கும் பி டீம் இல்லை. தமிழ்நாட்டு மக்களின் ஏ டீம் நாங்கள்தான்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism