Published:Updated:

ரஜினி கடவுள்; ரசிகர்கள் பக்தர்கள்!

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

சிலிர்க்கிறார் தமிழருவி மணியன்

“வருகிற 2021 தேர்தலில் நம் கட்சிதான் ஆட்சி அமைக்கும். ஆனால், நான் முதல்வர் அல்ல’’ என்று சொல்லி, ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் ரஜினிகாந்த். ‘ரஜினியின் திடீர் முடிவுக்கான பின்னணி என்ன, முதல்வர் வேட்பாளராக யாரை முன்னிறுத்தப்போகிறார்?’ என்று வரிசைகட்டும் கேள்விகளுக்கு விடை தேடி, காந்திய மக்கள் இயக்கத் தலைவரும் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான தமிழருவி மணியனிடம் பேசினோம்...

“ரஜினிகாந்த், ‘நான் கட்சித் தலைவர்தான்... முதல்வர் அல்ல’ என்று முடிவு எடுத்திருப்பதன் பின்னணி என்ன?’’

“ரஜினிகாந்த் பேசிவரும் ‘ஆட்சி மாற்றம்’ என்பது, ஒருவரை எடுத்துவிட்டு இன்னொருவரை அமரவைப்பதல்ல. ‘அரசியல் மாற்றத்துடன்கூடிய ஆட்சி மாற்றம் அவசியம்’ என்பது அவரது பார்வை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், முதல்வர் பொறுப்பில் இருப்பவர்கள்தான் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார்கள். இது தவறு. ‘ஆட்சிக்கு ஒரு தலைவர்; கட்சிக்கு ஒரு தலைவர்’ என மாற்றியமைக்க வேண்டும். கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையே இலக்குவன் கோடு வேண்டும். இதுவே ரஜினியின் அரசியல் நிலைப்பாடு. காந்தி, ஜெயபிரகாஷ் நாராயண், காமராஜர் வழியில் பதவி மறுப்பாளராகத்தான் ரஜினியையும் பார்க்க வேண்டியிருக்கிறது!’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“ஒருவர் விரும்புகிற ஆட்சி மாற்றத்தை, ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் முதல்வர் வாயிலாக அவர் செய்யத் துணிவது சரியா?”

“கட்சித் தலைவராக மட்டுமே இருந்துகொண்டு ஆட்சியை வழிநடத்துவது என்றால், அது ‘கூடுதல் அரசியலைமைப்பு அதிகாரம்’ என்ற விமர்சனத்துக் குள்ளாகும். வெளியிலிருந்து அழுத்தம் கொடுப்பதாக அவப்பெயரும் வந்து சேரும். இதை அவரிடமே நான் தெரிவித்துவிட்டேன். ஆனால், ‘நான் கண்காணிப்பாளர் மட்டுமே. ஆட்சியில் இருப்பவர்கள்மீது அழுத்தங்களைத் திணிக்க மாட்டேன். ‘ராக்கெட் சரியான பாதையில் செல்கிறதா அல்லது திசை மாறுகிறதா என்பதை கண்காணிக்கும் விஞ்ஞானியாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்’ என்று கூறிவிட்டார் ரஜினி.’’

ரஜினி
ரஜினி

“புதுவிதமான இந்த அரசியல் பாணியை ரஜினியின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?’’

“கடவுள்மீது முழுமையான நம்பிக்கை வைத்த பிறகு, அதில் விமர்சனத்துக்கு இடம் கிடையாது. பக்தனுக்கு கடவுள் மட்டுமே குறி. ரஜினியின் ரசிகர்கள் அனைவருமே அவருடைய பக்தர்கள்தான். ஆரம்பக்கட்டத்தில் ரஜினிக்கு சில ஏமாற்றங்கள் இருக்கலாம். கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலேயேகூட, ‘கட்சி வேறு... ஆட்சி வேறு. மன்றத்தில் இருப்பவர்களும் கட்சியின் பொறுப்பாளர் மற்றும் வேட்பாளர்களாக இருப்பார்கள். அதேசமயம் புதிதாக வெளியிலிருந்து நம் கட்சிக்குள் வருகிறவர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்படும்’ என்ற ரஜினிகாந்தின் திட்டத்துக்கு அனைவருமே ஒப்புதல் கொடுத்துவிட்டனர். ஆனால், ‘முதல்வர் நான் அல்ல’ என்ற அம்சத்தை மட்டும் ஒருவர்கூட ஏற்கவில்லை. இதைத்தான் ‘ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்’ என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ரஜினிகாந்த் சுட்டிக்காட்டும் நபரை மக்கள் வெற்றிபெறவைத்துவிடுவார்களா, இது சாத்தியம்தானா?”

“ரஜினிக்காக உயிரைக்கூட விடுவதற்கு தொண்டர்கள் தயார். ஆனால், அவர்களேகூட ரஜினி சுட்டிக்காட்டும் நபருக்கு வாக்களிப்பார்களா என்பது சந்தேகம்தான். ஏனெனில், தலைவராக ஒருவரை ஏற்றுக்கொண்டு அவருக்காக வாக்களிப்பது வேறு; தலைவன் சொல்கிற நபருக்காக வாக்களிப்பது வேறு. ரஜினிகாந்தின் நோக்கம் சிறப்பானதுதான். ஆனால், தமிழ்நாட்டின் களச்சூழலுக்கு அது பொருந்தாது. எனவே, ‘உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று அவரிடம் தெரிவித்துவிட்டேன். ஆனாலும், அவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.’’

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

‘‘ `ஆட்சிப் பொறுப்பில் பா.ஜ.க அல்லது தன் குடும்ப உறுப்பினர் ஒருவரை அமரவைத்துவிட்டு, பின்னால் இருந்து இயக்குவார் ரஜினிகாந்த்’ என்று சந்தேகம் கிளப்புவார்களே?’’

“ஒருவர் எதைச் செய்தாலும் விமர்சனம் செய்வதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். ரஜினிகாந்தே முதல்வராக வந்தாலும், ‘தமிழர் அல்லாத ஒருவர் முதல்வர் ஆக நேரிட்டுவிட்டது’ என்பார்கள். ‘நான் முதல்வர் அல்ல’ என்று சொன்னால், ‘பயந்துவிட்டார்... பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறார்’ என்பார்கள். நரம்பில்லாத நாக்குகளுக்காகப் பார்த்துப் பார்த்துப் பயணம் செய்வதாக இருந்தால், பயணத்தை ஆரம்பிக்கவே முடியாது. தமிழக அரசியலில் நடந்துவரும் தவறுகளை அப்புறப்படுத்தவே ரஜினிகாந்த் இந்த அரசியல் மாற்றத்தை வலியுறுத்துகிறார். குறிப்பாக, வாரிசு அரசியலும் குடும்ப அரசியலும் கூடாது என நினைக்கிறார்.”

“நீண்ட அரசியல் அனுபவம்கொண்ட தமிழருவி மணியனை, ரஜினிகாந்த் தன் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா?’’

“நான் என் அரசியல் பாதையில் இன்னொருவரைத்தான் ‘முதல்வராக வர வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறேன். ஒருநாளும் என்னை முதல்வராக முன்னிலைப் படுத்தியதில்லை. அப்படியோர் ஆசையும் இல்லை. ‘ரஜினிதான் முதல்வர் பதவியில் அமர வேண்டும். அவரைத்தான் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’ என்று ஓராயிரம் முறை சொல்லிவருகிறேன். இதில் மாற்றுச்சிந்தனைக்கு இடமே கிடையாது!’’