Published:Updated:

``மோடி மட்டும் தமிழ்மொழியை வளர்த்தெடுத்துவிட முடியுமா?’’ - வானதி சீனிவாசன் கேள்வி!

தமிழ் மொழி புறக்கணிப்பு, கீழடி ஆய்வுப் பணி நிறுத்தம், புதிய கல்வித் திட்டம், இந்தி மொழித் திணிப்பு, பகவத் கீதை பாடத்திட்டம்... என வரிசையாக தமிழகத்தை தெளியவைத்து தெளியவைத்து திணறடிக்கிறது மத்திய பா.ஜ.க அரசு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பா.ஜ.க-வின் நோக்கம்தான் என்ன என்ற சந்தேகத்தைத் தெரிந்துகொள்ள தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனைச் சந்தித்துப் பேசினேன்.

''சாதி ஒழிப்பை கற்றுக்கொடுக்கவேண்டிய கல்விக்கூடம், சாதியக் கட்டமைப்பை வலியுறுத்தும் பகவத் கீதையைப் பாடமாக்கியது சரிதானா?''

''பகவத் கீதையின் சாராம்சங்கள் பற்றி, எங்கள் தலைவர்கள் எழுதியவற்றைக்கூட நீங்கள் படிக்கவேண்டாம். சுதந்திரப் போராட்ட வீரர்களான காந்தியடிகள், திலகர், அரவிந்தர் ஆகியோருக்கு கீதை எப்படியெல்லாம் உத்வேக ஆதாரமாக இருந்திருக்கிறது என்பதையாவது படித்துப் பார்க்கலாம்.

வர்ணம் பற்றிச் சொல்கிறபோது, 'ஒருவன் செய்யக்கூடிய தொழிலால்தான் அவனுடைய சாதி வருகிறதே தவிர, பிறப்பினால் அல்ல' என்று தெளிவாக கிருஷ்ண பகவான் சொல்கிறார். ஆனால், இங்கே கீதையை விமர்சிக்கிறவர்களெல்லாம் இந்த ஒரு வரியை தங்களுக்குச் சாதகமாக்கிச் சொல்கிறார்கள். எனவே, பகவத் கீதை சரியாகத்தான் இருக்கிறது; ஆனால், அதைப் படிப்பவர்கள்தான் வித்தியாசமாகச் சிந்திக்கிறார்கள்!''

''முத்தலாக் தடைச் சட்டம்தான் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கே காரணம் என்று அ.தி.மு.க அமைச்சரே வெளிப்படையாகப் பேசுகிறார். பா.ஜ.க கூட்டணி பலவீனம் என்று அ.தி.மு.க கருதுகிறதோ?''

''அது அவருடைய கருத்து.

எங்களைப் பொறுத்தவரையில், பாராளுமன்றத் தேர்தலில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டணிக்குள் இருக்கின்ற பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சொல்கிற கருத்துகளுக்கான விளக்கங்களை அவர்கள்தான் சொல்லவேண்டும்.''

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

''முத்தலாக் தடைச் சட்டத்தின் மூலம் இஸ்லாமியப் பெண்களுக்கு சம நீதி கிடைத்திருப்பதாகப் பெருமைப்படுகிறீர்களே... இந்து மதத்தில் பெண்கள் சம நீதியுடன்தான் வாழ்கிறார்களா?''

''எல்லா மதத்திலும் பெண்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்றுதான் பா.ஜ.க விரும்புகிறது. உ.பி-யில் உள்ள பெரும்பான்மையான இஸ்லாமியப் பெண்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கிறார்கள் என்பது வரலாறு.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் மற்றக் கட்சிகளைவிடவும் பா.ஜ.க முன்னணியில் நிற்கிறது. அதனால்தான் வெளியுறவு, நிதி, ராணுவம், கல்வி என முக்கியத் துறைகளில் எல்லாம் பெண்களை அமைச்சர்களாக்கினோம்.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மத்தியில், கட்சியின் தலைமைப் பொறுப்பையே ஒரு பெண்ணுக்குக் கொடுத்து அவர்களுக்கும் தற்போது சிறப்பான ஓர் அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாத என்னைப்போன்றவர்கள்கூட தமிழக பா.ஜ.க-வின் பொதுச்செயலாளராக வரமுடிகிறதென்றால், பெண்களுக்கு எங்கள் கட்சி கொடுத்துவரும் முக்கியத்துவம் புரியும்.

ஆனால், பெண்கள் விடுதலைக்காகவும் சமத்துவத்துக்காகவும் போராடிய பெரியாரைக் கொண்டாடுகிற, கடந்த 50 ஆண்டுகளாக அரசாங்க அதிகாரத்தையே கையில் வைத்திருக்கக்கூடிய திராவிட அரசியல் கட்சிகளோ, சாதி பார்த்துத்தான் வேட்பாளர்களை நிறுத்துகின்றன; சாதி பார்த்துத்தான் அமைச்சரவையில் சீட் வழங்குகின்றன.

இதன் தொடர்ச்சியாகத்தான், கலப்பு மணம் செய்தார் என்பதற்காக, பெற்ற மகளைக்கூட கொலை செய்கிற ஆணவப் படுகொலை சம்பவங்களும் தமிழகத்தில் அதிகரித்திருக்கின்றன. இதுதான் சமூக நீதியா?"

''அ.தி.மு.க என்ற திராவிடக் கட்சிக்கு தலைமைப் பொறுப்பு வகித்த ஜெயலலிதா, தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த காலத்தில், 69 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதிசெய்து 'சமூக நீதி காத்த வீராங்கனை' பட்டமும் பெற்றிருக்கிறாரே?''

''அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அதன்பிறகு, மக்களிடையே தனிப்பட்ட செல்வாக்கு பெற்று கட்சியிலும் ஆட்சியிலும் உயர்ந்த நிலைக்குச் சென்றார் ஜெயலலிதா. ஆக ஜெயலலிதா, ஒரு பெண் ஆளுமையாக இருந்தார். இதை திராவிடக் கட்சிகளின் சாதனையாக எப்படிச் சொல்லமுடியும்?''

''தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதற்கான எந்த வழியையும் மத்திய பா.ஜ.க செய்யவில்லையே?''

''செம்மொழியாக அறிவித்துவிட்டாலே, அல்லது மத்திய அரசு, நிதி உதவி அளித்துவிட்டாலே தமிழ் மொழி வளர்ந்துவிடுமா? தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள நாமே, நம் குழந்தைகளை தமிழ் வழிக் கல்வியில் படிக்க அனுமதிக்கவில்லை. அல்லது மாற்றத்தை விரும்புகிற மனநிலையில் இருக்கிறோம் என்றால், எத்தனை கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்தாலும் தமிழ் மொழி எப்படி வளரும்? பள்ளிக்கூடங்களில் தமிழ் வழியில் படிப்பதற்கு மாணவர்களே இல்லையே...? அவ்வளவு ஏன்.... குழந்தைகளுக்குத் தமிழ் மொழியில் பெயர் வைப்பதற்குக்கூட நாம் தயாராக இல்லாத சூழலில், மோடி மட்டும் தமிழ் மொழியை வளர்த்தெடுத்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?''

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

''நாட்டில் வழக்கொழிந்துபோன சம்ஸ்கிருத மொழியை உயிர்ப்பிக்க மட்டும் மத்திய அரசு தாராள நிதி உதவி அளிக்கிறதே....?''

''நாட்டில் இருக்கிற அத்தனை மொழிகளையும் நாம் வளர்க்க வேண்டும். சம்ஸ்கிருதத்துக்கும் தமிழ் மொழிக்கும் இருக்கக்கூடிய வித்தியாசம் என்ன? குறிப்பிட்டுச் சொல்வதென்றால், சம்ஸ்கிருதம் யாருக்கும் தாய்மொழி கிடையாது. அதுதான் பிரச்னையே.

ஆனால், இங்கேயோ நமது தாய் மொழியான தமிழை நாமே மதிப்பதில்லை என்பதாகத்தானே இங்குள்ள அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. இந்தச்சூழலில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு எத்தனை கோடிகளைக் கொடுத்தாலும்கூட எப்படி மொழி வளரும்? 'திருவள்ளுவரையும் பாரதியாரையும் நாடு முழுக்க எடுத்துச் செல்லவேண்டும்' என்று ஒரு வட இந்திய பா.ஜ.க எம்.பி 2016-ல் சொல்கிற வரையில், இங்கிருந்த எம்.பி-க்கள் யாரும் பேசாதிருந்தது ஏன்? திருக்குறளை நாடு முழுக்கப் பரப்பவேண்டும் என்று இங்குள்ளவர்கள் முயற்சி எடுக்காமல் இருந்தது ஏன்?''

''கீழடி ஆய்வுப் பணியில் மத்திய அரசு ஆர்வம் காட்டாதது ஏன்?''

''கீழடியில் கிடைத்துவரும் பொருள்கள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை, இதற்கும் கீழ் ஆழத்தில் இன்னும் புதைப் படிவங்கள் இருக்கின்றனவா என்பதையெல்லாம் அதற்கென்று சிறப்பாகப் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் ஒவ்வொரு காலகட்டமாக ஆராயவேண்டியதிருக்கிறது.

இன்னும்கூட ஆதிச்சநல்லூர், கொடுமணல் எனத் தமிழர்களின் தொன்மையைச் சொல்லுகிற இடங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றைப் பற்றிய சரியான வரையறையோடும் திட்டங்களோடும் மாநில அரசு முன்னெடுத்தால், உதவி செய்வதற்கு மத்திய பா.ஜ.க-வும் தயாராக இருக்கிறது.''

''அண்மையில் சென்னை வந்திருந்த பிரதமர் மோடியிடம், 'தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.7,825 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க உத்தரவிட வேண்டும்' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்திருக்கிறாரே?''

''மாநில அரசுகள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமலிருந்தால், மத்திய அரசின் நிதி உதவியைப் பெற முடியாது என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவதென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளைப் பலப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தவகையில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள்தான், நாட்டின் ஜனநாயகத்துக்கு முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். எனவே, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாமல், மாநில அரசே ஒட்டுமொத்த நிதியையும் கையாளக்கூடாது என்பது பா.ஜ.க-வின் நிலைப்பாடு அல்ல... உச்ச நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு!

இதையும் மீறி மத்திய அரசு, தமிழகத்துக்கு நிதி உதவி அளிக்குமேயானால், அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டியது மத்திய அரசுதான்.''

''உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில், தமிழக அரசுக்கு ஆர்வம் இல்லை என்று சொல்லப்படுகிறதே?''

''உள்ளாட்சித் தேர்தலை வேண்டுமென்றே தமிழக அரசு நடத்தாமல் இருக்கிறது என்று சொல்லமுடியாது. ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. நீதிமன்றத்தினுடைய நடவடிக்கைகளும் தீர்ப்பும்கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்தச் சூழலில், குப்பை எடுப்பதில் ஆரம்பித்து குடிதண்ணீர் விநியோகம் வரை மக்களோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பது உள்ளாட்சித் துறைதான். அங்குள்ள ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட முடியாத தமிழக நிலையைப் புரிந்துகொண்டு, கடந்த சில நாள்களுக்கு முன்பு, மத்திய நிதி அமைச்சர் 1,700 கோடி ரூபாயைத் தமிழகத்துக்கு வழங்கியிருக்கிறார்.''

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

''ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் விற்பனையாகாமல், சந்தையில் தேக்கமடைந்துள்ளன. ஆனால், மத்திய நிதி அமைச்சர் இப்போதும் பெருநிறுவனங்களுக்கே, வரிச்சலுகை அளித்திருப்பது சரியான நடைமுறைதானா?''

''கார்ப்பரேட் துறையைப் பொறுத்தளவில், உலக நாடுகளோடு நம் நாட்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இப்போதுதான் வரி விகிதம் சமமாக இருக்கிறது. எனவே, போட்டியாளர்களை ஈர்க்கக்கூடிய சூழலுக்கு நம் நாடு வரவேண்டியதிருக்கிறது. வருடம்தோறும் அதிகரித்துவரும் வேலை வாய்ப்புகளை ஈடு செய்வதற்காக நாம் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காகத்தான் மாநில அரசுகளே பல்வேறு சலுகைகளைக் கொடுத்து பெருநிறுவனங்களை வரவேற்கிறார்கள். அந்த வரிசையில், மத்திய அரசும் ஆக்கபூர்வமாகச் செயலாற்றி வருகிறது.

அடுத்ததாக, பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை என்றில்லாது, வங்கிகளில் கடன் பெற்று தங்களது தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்துகொள்வதற்கு வசதியாக புதிய திட்டம் ஒன்றினையும் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேலும், `நம் நாட்டில் பெரு நிறுவனங்களை விடவும், சிறுகுறு நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை அளித்துவருகிறது. எனவே, பொதுத்துறை நிறுவனங்கள் இந்தச் சிறுகுறு நிறுவனங்களிடம்தான் 20 சதவிகிதம் பொருள்களை கட்டாயம் கொள்முதல் செய்யவேண்டும். கடன் தொகையை வசூலிப்பதில் வருகிற 2020-ம் ஆண்டுவரை வங்கிகள் கெடுபிடி செய்யக்கூடாது’ என்று பிரதமர் அறிவுறுத்தியிருக்கிறார். எனவே, பொருளாதாரச் சரிவு என்பது விரைவில் சரியாகும்!''

''இந்தி போராட்டத்தை தி.மு.க வாபஸ் பெற்றது மக்களிடையே ஆதரவு இல்லாததால்தான் என எப்படிச் சொல்கிறீர்கள்?''

''இங்கிருக்கும் சிலர் அமித் ஷாவின் பேச்சை விமர்சனம் செய்தார்கள், ஒருசிலர் போராட்டத்தையும் அறிவித்தார்கள். அப்போதுதான் 'நீங்கள் சொல்கிற, பார்க்கிற எண்ணத்தில் நான் சொல்லவில்லை. தாய் மொழிக்குக் கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தையொட்டித்தான் நான் சொன்னேன்' என்று விளக்கம் கொடுத்தார்.

'எங்களை இந்தி படிக்க வேண்டாம்' என்று சொல்லிவிட்டு உங்கள் வீட்டுப் பிள்ளைகளை மட்டும் இந்தியில் படிக்க வைத்துவிட்டீர்கள். உங்கள் வியாபார நிறுவனங்களுக்கு வேறு மொழியில், பெயர் வைத்து வியாபாரம் நடத்துவீர்கள் என்பது போன்ற கேள்விகளெல்லாம் அடித்தட்டு மக்களிடையே எழுந்திருக்கின்றன. எனவே, அமித் ஷாவின் விளக்கத்தை தி.மு.க ஏற்றுக்கொண்டுள்ளது. தி.மு.க-வின் விளக்கத்தை மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.''

''தற்போது காஷ்மீரிலிருந்து வெளிவரும் வீடியோக்கள் பதைபதைக்க வைக்கிறதே?''

''இத்தனை நாள்களாக அங்கிருந்து வெளியான வீடியோக்கள் ஏற்படுத்தாத பயத்தை, இப்போது வரும் வீடியோக்கள் பயப்படுத்துகிறதா? கல்லெறிச் சம்பவங்களால் பாதிப்புக்குள்ளான நம் ராணுவ வீரர்கள் பற்றி நீங்களெல்லாம் என்றைக்காவது கவலைப்பட்டது உண்டா?

370 பிரிவை நீக்கியது தவறு என்று சொல்லக்கூடிய அரசியல் கட்சிகள், 80-களின் இறுதியில் லட்சக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேற்றப்பட்டு இன்றைக்கும் டெல்லியின் தெரு ஓரங்களில் அகதிகளாக வாழ்ந்துவருவதைப் பற்றி என்றைக்காவது பேசியது உண்டா? உங்களுடைய அரசியலுக்காக, இந்திய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் தயவுசெய்து பலி செய்துவிடாதீர்கள்.''

சின்ன அக்காள் ஆகிய நான்...

“தமிழகத்தின் அக்காள் தமிழிசை, தெலங்கானா ஆளுநராகிவிட்டார். தமிழக பா.ஜ.க-வின் அடுத்த அக்காள் வானதி சீனிவாசன்தான் என்கிறார்களே..?’’

“370-ஐ நீக்கினால், காஷ்மீரில் நிலம் வாங்கலாம் என்றீர்கள். ஆனால், 370 நீக்கப்பட்டபிறகு இப்போது அங்கே ஊடகத்தினர் செல்லக்கூட அனுமதி இல்லையே, என்னதான் நடக்கிறது?’’

“ `பொதுமொழியாக இந்தி இருக்க வேண்டும்’ என்று பேசிய அமித் ஷாதானே, தி.மு.க-வின் போராட்ட அறிவிப்புக்குப் பிறகு, ‘நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது’ என்று பல்டியடித்தார்?’’

இது போன்ற மேலும் பல சுவாரஸ்யக் கேள்விகளுக்கு வானதி சீனிவாசன் இந்த வார ஆனந்த விகடனில் பதிலளித்துள்ளார்.

ஆனந்த விகடன் தனி இதழுக்கு சப்ஸ்கிரைப் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு