Published:Updated:

`அ.தி.மு.கவுக்கு வந்தால் ரத்தம்; தி.மு.கவுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா?'- மனுஷ்யபுத்திரன் ஆவேசம்

மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன் ( Jerome )

அ.தி.மு.க தலைவர்கள் குறித்து தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா விமர்சனம் செய்திருப்பது பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது , ''அ.தி.மு.க-வினர் எங்கள் கட்சித் தலைவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளனர்'' என்கிறார் மனுஷ்ய புத்திரன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2021 சட்டமன்றத் தேர்தல் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் முழு மூச்சாக களம் இறங்கியிருக்கின்றன. 'டார்ச் லைட்' சின்னம் கிடைக்காவிட்டாலும் தேர்தல் பிரசாரத்தை உற்சாகமாக ஆரம்பித்துவிட்டார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன். புதிதாக கட்சி ஆரம்பித்து 'ஆட்டோ?'-வில் வந்து களமிறங்கக் காத்திருக்கிறார் அண்ணாத்த ரஜினி. இந்தச் சூழலில், தி.மு.க தகவல் தொடர்பு அணியின் மாநில ஆலோசகரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்.

''கொரோனா காலகட்டத்தில், மக்களை நேரடியாகச் சந்தித்து தேர்தல் பிரசார பயணத்தை மேற்கொள்வது அவசியமா?''

உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்
உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

''இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் தி.மு.க-வின் சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் ஊழல்-பொய்களைப் பற்றியும் சமூக வலைத்தளங்களின் வழியே மிகப்பெரிய அளவில் பிரசாரமாக எடுத்துச் செல்கிறோம். ஆனாலும் மக்களுக்கான நலத்திட்டங்களை காணொலி வாயிலாக வழங்கிவிட முடியாது.

எனவே, மக்களை நேரில் சந்திப்பது மிகவும் அவசியம். டிஜிட்டல் பிரசாரம் வழியே மக்களை நாம் சந்தித்தாலும்கூட, மக்கள் நம்மிடம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதையும் கேட்டாக வேண்டும் அல்லவா... அதற்காகத்தான் எங்கள் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தேர்தல் பிரசார பயணத்தின் வழியே மக்களை நேரடியாகச் சந்தித்து வருகிறார்கள்.''

''கருணாநிதி இல்லாமல், முதன்முதலில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது தி.மு.க... இந்த சவாலை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்?''

''கலைஞர் இல்லாத சூழலில்தான், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களை சந்தித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது தி.மு.க. அ.தி.மு.க கூட்டணி 30% வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தி.மு.க கூட்டணி 52% வாக்குகள் பெற்றிருந்தது. இதன் மூலம் தனது ஆளுமைப் பண்பை வழிகாட்டுதல் திறனை நிரூபித்துவிட்டார் மு.க.ஸ்டாலின். எனவே, 2021 தேர்தலில் தி.மு.க-வின் வெற்றி என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று.

கருணாநிதி
கருணாநிதி

ஏனெனில், தி.மு.க-வுக்கு வாக்களிப்பவர்கள் அரசியல் தெளிவு-விழிப்புணர்வு கொண்ட மக்கள்தான். மற்றபடி வருகிற தேர்தலில், எங்களுக்கு மிகப்பெரிய சவால் என்று சொல்வதானால், தேர்தல் ஆணைய செயல்பாடு, வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு மற்றும் வாக்காளர் பட்டியலில் எதிர்த் தரப்பினர் செய்யக்கூடிய தில்லுமுல்லுகளும்தான். அதனையும் நாங்கள் எதிர்கொண்டே வருகிறோம்!''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''மக்களுக்கு எம்.ஜி.ஆரிடம் இருந்த அதே ஈர்ப்பு, ரஜினிகாந்திடமும் இருக்கிறது என்கிறபோது, அது அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்தானே?''

''சமூக நீதியைத் தவிர்த்து இங்கே யாராலும் அரசியல் செய்துவிட முடியாது. ஓ.பி.சி இட ஒதுக்கீடு பற்றி ரஜினிகாந்த் இதுவரையில் ஏதாவது கருத்து தெரிவித்திருக்கிறாரா?... நீட் பிரச்னையில், ரஜினியின் நிலைப்பாடுதான் என்ன?... மக்கள் இவற்றையெல்லாம் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இங்கே திரும்பத் திரும்ப திராவிடக் கட்சிகளை மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் ஏற்றிவைக்கிறார்கள். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் வாங்கிய மொத்த வாக்கு 80%. எனவே, புதியவர்கள் எல்லாம் மீதமுள்ள 20 %-க்குள் அடங்கிவிடுவார்கள்!''

ரஜினிகாந்த் - எம்.ஜி.ஆர்
ரஜினிகாந்த் - எம்.ஜி.ஆர்

''அ.தி.மு.க-வும் திராவிட சித்தாந்தப் பின்னணியில் உருவான சமூக நீதி பேசுகிற கட்சிதானே?''

''சமூக நலத் திட்டங்களைப் பொறுத்தவரையில், எந்தெந்த வளர்ச்சிப் பாதைகளில் தமிழ்நாடு பயணிக்க வேண்டும் என்கிற 'ரோட் மேப்'பினை கலைஞர் 1971-ம் ஆண்டிலேயே வரையறுத்துவிட்டார். எனவே, ஆட்சிப் பொறுப்புக்கு வந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களும்கூட கலைஞர் வகுத்துத்தந்த சமூக நலத் திட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில்தான் இருந்தார்களே தவிர, பெரியளவில் அவற்றை மாற்றியமைக்க அவர்களால் முடியவில்லை.

தற்போதைய அ.தி.மு.க அரசு, ஊழல் - அராஜகம் என இரண்டையும் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்கள். எனவே, நாங்களும் தொடர்ந்து இவர்களை எதிர்த்து வந்திருக்கிறோம்.''

''தேசியம் காப்போம்; இந்துக்களாய் ஒன்றுகூடுவோம்' என்ற தமிழக பா.ஜ.க-வின் துண்டுப் பிரசாரம், 2021 சட்டமன்றத் தேர்தலில் எந்த மாதிரியான விளைவுகளை உண்டாக்கும்?''

''இந்துக்கள் அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள்... பா.ஜ.க-வுக்கு எதிராக. ஜல்லிக்கட்டு உரிமைக்காக மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக ஒன்றுகூடியவர்கள் எல்லாம் யார்... இந்துக்கள்தானே! எனவே ஆர்.எஸ்.எஸ் மற்றும் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக எப்போதும் இங்குள்ள இந்துக்கள் ஒன்றுகூடுவார்கள்தான்!''

எல்.முருகன்
எல்.முருகன்

''தமிழக அரசியல் சூழலில், 'இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிற கட்சி தி.மு.க' என்ற பிரசாரத்தை தமிழக பா.ஜ.க தொடர்ந்து செய்து வருகிறதே?''

'' 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்', 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்றெல்லாம் சொல்லித்தானே தி.மு.க-வையே ஆரம்பித்தார் அறிஞர் அண்ணா. ஆக, இறைவனைச் சொல்லி ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி எப்படி நாத்திகக் கட்சியாக இருக்கமுடியும்?...பெரும்பான்மை சமூகத்தைப் புண்படுத்திவிட்டு எந்தவொரு கட்சியாவது தேர்தல் அரசியலில் வெற்றி பெற முடியுமா?

3 கும்கிகளுடன் `ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்'... ஒற்றை யானையைத் தேடும் நீலகிரி வனத்துறை!

ஆனால், 'தி.மு.க என்பது நாத்திகக் கட்சி; இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது' என்றொரு கட்டுக்கதையை இவர்கள்தான் வலிந்து உருவாக்குகிறார்கள். இந்த உண்மையை மக்களும் தெரிந்து வைத்திருப்பதால்தான் பா.ஜ.க-வால் இன்னும் 2% ஓட்டு வங்கியைத் தாண்டமுடியவில்லை!

ஏனெனில், கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, விவசாயம், மருத்துவம், பொதுவிநியோகம் மற்றும் பெண்களுக்கான நலத்திட்டங்கள் என அனைத்து முன்னோடி திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது தி.மு.க. இந்தத் திட்டங்கள் வழியே பயன்பெற்ற பெரும்பான்மை மக்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். அதனால்தான் இத்தனை கோடி பேர் தி.மு.க-வுக்கு தொடர்ந்து வாக்களித்து வெற்றி பெறச் செய்து கொண்டிருக்கிறார்கள்.''

ஜெயலலிதா
ஜெயலலிதா

''மறைந்த ஜெயலலிதாவை 'கொள்ளைக்காரி' என்றும், அ.தி.மு.க தலைவர்களை 'அவன் இவன்' என்று கண்ணியக்குறைவாகவும் விமர்சித்திருக்கிறாரே ஆ.ராசா?''

''தங்களுடைய அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, முதல் குற்றவாளி ஜெயலலிதா, 2-ம் குற்றவாளி சசிகலா, இளவரசி, சுதாகரன் என நால்வரும் போலிநிறுவனங்களை உருவாக்கி சொத்துக்களை வாங்கிக்குவிக்கும் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர் என்று நீதிபதி குன்ஹா தீர்ப்பு எழுதியுள்ளார்; உச்ச நீதிமன்றமும் இப்படித்தான் தீர்ப்பு எழுதியுள்ளது. பொதுச்சொத்துக்களை அபகரிக்கும் நோக்கிலேயே இவர்கள் நால்வரும் போயஸ்கார்டனில் தங்கியிருந்துள்ளனர் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆக, இந்தத் தீர்ப்பை தமிழில் எப்படி சொல்வது?... கொள்ளைக்கூட்டம், கொள்ளைக்காரி என்றுதானே சொல்லமுடியும். எனவே, ஆ.ராசா அவதூறாகப் பேசிவிட்டார் என்றால், உடனடியாக அவர் மீது தைரியமாக வழக்குத் தொடருங்கள்... நீதிமன்றத்தில் வந்தும் ஆ.ராசா அந்தத் தீர்ப்பைப் படித்துக்காட்டுவார்.

`41 தொகுதிகள் தரும் கட்சிகளுடனேயே கூட்டணி' - பிரேமலதா அறிவிப்பு சாத்தியமா? #TNElection2021

இந்த மாநிலத்தை 5 முறை ஆண்ட, முதுபெரும் தலைவரான கலைஞர், சக்கர நாற்காலியில் சட்டமன்றத்துக்கு வருகை தந்தபோது, 'தள்ளுவண்டி' என்று சட்டமன்றத்திலேயே கேலி பேசியவர் அன்றைய சட்டமன்ற உறுப்பினரான விஜயபாஸ்கர். இந்தப் பேச்சை ஆரவாரமாக வரவேற்றுச் சிரித்து மகிழ்ந்ததோடு மறுநாளே அவருக்கு அமைச்சர் பதவியையும் கொடுத்தவர்தான் ஜெயலலிதா. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியையும்கூட கண்ணியமற்ற முறையில் அ.தி.மு.க-வினர் விமர்சித்திருக்கிறார்களே...

மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன்
Jerome

நீதிமன்றம் சுட்டிக்காட்டிய - தண்டிக்கப்பட்ட குற்றவாளியைக்கூட, 'இறந்துவிட்டார் அதனால் பேசக்கூடாது' என்பவர்கள்தான், 'சர்க்காரியா குற்றச்சாட்டு, வீராணம் ஊழல், ஈழப் படுகொலைக்கு கருணாநிதிதான் காரணம்' என்றெல்லாம் கலைஞரை குற்றம்சாட்டிப் பொய் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆக, இறந்துபோன கலைஞரைப் பற்றி என்ன பொய் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். அதனால் எங்கள் மனம் புண்படாது என்றால். இது என்ன நியாயம்?... அ.தி.மு.க-வினருக்கு வந்தால் ரத்தம்; தி.மு.க-வினருக்கு வந்தால் மட்டும் தக்காளி சட்னியா?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு