Published:Updated:

`யோசனை சொன்ன பிரஷாந்த்; நிராகரித்த ஸ்டாலின்!' -அறிவாலயத்தைத் தயார்படுத்தும் `மார்ச் அறிக்கை'

பிரஷாந்த் கிஷோர் - ஸ்டாலின்
பிரஷாந்த் கிஷோர் - ஸ்டாலின்

இளைஞரணி நிர்வாகிகளை முன்னிலைப்படுத்துவதால் ஏற்படும் பிளஸ், மைனஸ், தற்போதுள்ள சூழலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது பற்றியெல்லாம் பேசியுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் வேகம் காட்டி வருகிறது தி.மு.க. `2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக குடும்ப உறுப்பினர்களிடம் நீண்ட விவாதம் நடத்தியிருக்கிறார் ஐபேக் நிறுவனர் பிரஷாந்த் கிஷோர். தேர்தல் வியூகம் தொடர்பாக மார்ச் முதல் வாரத்தில் முதல்கட்ட அறிக்கையை ஸ்டாலினிடம் கொடுக்க இருக்கிறார் பிரஷாந்த்' என்கின்றனர் அண்ணா அறிவாலய வட்டாரத்தில்.

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், `உள்ளாட்சித்தேர்தலில் பணபலம், அதிகாரபலத்தை எதிர்த்துப் பல இடங்களில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இதேபோல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற தகவல் உங்களுக்கு வரும். அதன்படியே செயல்படுங்கள். நமக்கு எப்போதும் நகர்ப்புறப் பகுதிகள் கைகொடுக்கும். இந்தமுறையும் நாம் வெற்றி பெற வேண்டும்' என்றவர்,

`உள்ளாட்சித் தேர்தலை மட்டும் மனதில் வைத்துச் செயல்படவேண்டாம். சட்டமன்றத் தேர்தலையும் எப்படி எதிர்கொள்வது எனத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுவரையில் நடந்த முறைகேடுகள், அ.தி.மு.க-வினர் செய்த ஊழல்கள் பற்றிய புள்ளி விவரங்களைக் கையில் எடுங்கள். மேலும், பிரஷாந்த் கிஷோருடன் கைகோத்திருப்பதால் முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதற்காக நீங்கள் ஒன்றும் அச்சப்படத் தேவையில்லை. அவர்கள் வந்தால் அவர்களது வேலையை மட்டும் பார்ப்பார்கள். நீங்கள் உங்களது வேலையை மட்டுமே பார்க்கப் போகிறீர்கள். உங்களது வேலைகளில் அவர்கள் தலையிடமாட்டார்கள்" என நிர்வாகிகளுக்குச் சுட்டிக் காட்டினார்.

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள்
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள்

பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் டீமுடன் ஒப்பந்தம் கையொப்பமான நாள்களில் தி.மு.கவின் மூத்த நிர்வாகிகளும் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களும் அச்சத்தில் உறைந்திருந்தனர். அவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசினார் ஸ்டாலின். ஐபேக் - தி.மு.க ஒப்பந்தம் குறித்து எந்தத் தகவலையும் ஆரம்பகாலத்தில் வெளியிடாத ஸ்டாலின். பின்னர் முகநூல் பக்கத்தில் ஐபேக் உடனான ஒப்பந்தம் கையொப்பமானது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும், `இந்துத்துவ வாக்குவங்கியைக் குறிவைக்கும் வகையில் சிறுதெய்வ வழிபாடு உள்ளிட்ட சில விஷயங்களையும் கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளது தி.மு.க. இதற்கான யோசனையை ஐபேக் டீம் முன்வைத்திருக்கிறது. இதன்மூலம் இந்துக்களுக்கு எதிரான இயக்கம் என்ற பிம்பம் உடையும்' என்ற பேச்சும் அண்ணா அறிவாலயத்தில் வலம் வருகிறது.

``கட்சித் தாவலை விஞ்சும் கம்பெனி தாவல்” - பிரசாந்த் கிஷோர் தி.மு.க-வுக்குள் என்ட்ரி!

``இதுபோன்ற பல திட்டங்களை முன்வைத்திருக்கிறது ஐபேக் டீம். சட்டமன்றத் தேர்தலையொட்டி பல்வேறு வியூகங்களை வகுத்திருக்கிறார் பிரஷாந்த் கிஷோர். இதுதொடர்பாக, ஸ்டாலின், உதயநிதி மற்றும் சில குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து விரிவான விவாதமும் நடத்தியிருக்கிறார் பிரஷாந்த்" என விவரித்த தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலர், `` இந்தச் சந்திப்பில் பேசிய பிரஷாந்த், `நாம் தனியாகத் தேர்தலை எதிர்கொண்டால் ரெக்கார்டு பிரேக் பண்ணலாம்' எனக் கூறியிருக்கிறார். மேலும், களநிலவரம் எப்படியிருக்கிறது.

உதயநிதி வருகையின் மூலம் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் உள்ள மனநிலை, இளைஞரணி நிர்வாகிகளை முன்னிலைப்படுத்துவதால் ஏற்படும் பிளஸ், மைனஸ், தற்போதுள்ள சூழலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது பற்றியெல்லாம் பேசியுள்ளனர். கடந்த ஓரிரு மாதங்களாக தி.மு.க-வுக்காக சில அடிப்படை வேலைகளைச் செய்துள்ளது ஐபேக். இதுதொடர்பான முதல்கட்ட அறிக்கையை மார்ச் 10-ம் தேதிக்குப் பிறகு ஸ்டாலினிடம் கொடுக்க இருக்கிறார் பிரஷாந்த். இதன்பிறகு தமிழக அரசியலில் எந்தெந்த விஷயங்களைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்பதைப் பற்றிய குறிப்புகளை அளிக்க இருக்கிறார்" என விவரித்தவர்கள்,

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

`` 2016 சட்டமன்றத் தேர்தலை ஜெயலலிதா தனித்து எதிர்கொண்டது போல 2021 தேர்தலையும் தனியாக எதிர்கொள்ள வேண்டும் என ஐபேக் டீம் கூறியுள்ளது. ஆனால், இந்த யோசனையில் ஸ்டாலினுக்கு உடன்பாடில்லை. `2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்று உருவாகி, சிரமங்களை ஏற்படுத்தியதுபோன்ற ஒரு சூழல் வந்துவிடக் கூடாது. இப்போதுள்ள கூட்டணியே தொடரட்டும்' என்ற மனநிலையில் இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவதற்கு இந்தக் கூட்டணியும் பிரதான காரணம் என்பதால், 2021 தேர்தலுக்கும் இதே கூட்டணி வேண்டும் என நினைக்கிறார் ஸ்டாலின்.

பிரஷாந்த் கிஷோரைப் பொறுத்தவரையில் தி.மு.க-வுக்காக வேலை பார்ப்பதை மிக முக்கியமானதாகப் பார்க்கிறார். வடமாநிலங்களில் அவரது தேர்தல் ஃபார்முலா வெற்றி பெற்றதைப் போல தென்னிந்தியாவிலும் வெற்றி பெற்றால் நல்ல அடையாளம் கிடைக்கும் என்பதுதான் காரணம். தவிர, பிரஷாந்தின் ஃபார்முலா தென்னிந்தியாவில் எடுபடாது என்ற கருத்தை உடைக்க வேண்டும் என நினைக்கிறார். 2021 தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றுவிட்டால், அடுத்ததாக இந்தோனேஷியா உட்பட சில நாடுகளில் தேர்தல் பணி தொடர்பாகக் களமிறங்கவும் திட்டமிட்டுள்ளார்" என்றார் விரிவாக.

ஸ்டாலின், பிரஷாந்த் கிஷோர்
ஸ்டாலின், பிரஷாந்த் கிஷோர்

``2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்த தி.மு.க, கடந்த 9 ஆண்டுகாலமாக அதிகாரத்தில் இல்லாமல் இருக்கிறது. தனித்துப் போட்டியிட்டு மீண்டும் ஒரு தோல்வி வந்துவிட்டால், அது நிர்வாகிகள் மத்தியில் மிகப் பெரிய சோர்வை ஏற்படுத்திவிடும். அதனால், பரிசோதனை முயற்சிகளில் இறங்குவதற்கு ஸ்டாலின் தயாராக இல்லை. அதேநேரம், களநிலவரம் எப்படியிருக்கிறது என்பதைப் பற்றி ஐபேக் கூறுவதையும் கேட்டுக் கொள்கிறார். மற்றபடி கூட்டணிக் கட்சிகளுக்கு இடையூறு செய்யும் மனநிலையில் அவர் இல்லை" என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.

அடுத்த கட்டுரைக்கு