Published:Updated:

#CAA & NRC தடுக்க என்ன வழி? - ஐபேக் பிரசாந்த் கிஷோர் சொல்லும் ஐடியா!

நாடு முழுவதும் `தேசிய குடிமக்கள் பதிவேடு' கொண்டு வர வேண்டும் என்பது இந்தியக் குடியுரிமையை மதிப்பிழக்க வைப்பதற்குச் சமம். நீங்கள் நிரூபிக்கும்வரை செல்லாது - பிரசாந்த் கிஷோர்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர் ( Twitter )

CAA & NRC News

குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராகப் போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் `குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சி செயல்படுத்தப்படுவதைத் தவிர்க்க இரண்டு சிறந்த வழிகள் உள்ளன’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், ``அமைதியாகத் தொடர்ந்து போராடி அனைத்துத் தளங்களிலும் குரலெழுப்ப வேண்டும்” என்றும் ``பா.ஜ.க ஆட்சியில் இல்லாத 16 மாநிலங்களிலும் உள்ள முதலமைச்சர்கள் என்.ஆர்.சியை அமல்படுத்தப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

``நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டைக் கொண்டு வர வேண்டும் என்பது இந்தியக் குடியுரிமையை மதிப்பிழக்க வைப்பதற்குச் சமம். நீங்கள் நிரூபிக்கும்வரை செல்லாது. இதனால், ஏழைகளும் விளிம்புநிலை மக்களும்தான் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்” என்றும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், ``காங்கிரஸ் வீதிகளில் இறங்கி போராடவில்லை. CAA மற்றும் NRC-க்கு எதிராகக் குடிமக்கள் போராடுவதில் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பங்கெடுக்கவில்லை” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதற்கிடையே, போராட்டக்களத்தில் அதிகமாக மாணவர்கள் இருக்கும் நிலையில், ``மோடியும் அமித் ஷாவும் உங்கள் எதிர்காலத்தை அழிக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதார சரிவு குறித்த உங்களது கோபத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அதனால்தான், இந்தியாவைப் பிரிக்க நினைக்கிறார்கள். வெறுப்பின் பின்னால் ஒளிந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு இந்தியனிடமும் அன்பாக இருப்பதன் மூலமே நான் அவர்களைத் தோற்கடிக்க முடியும்” என்று ராகுல் காந்தி கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.