Published:Updated:

`என்னை மகிழ்விப்பதாக எண்ணி எனது நூல்களை விநியோகிக்க வேண்டாம்! ’ - தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு

வெ.இறையன்பு

``இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக, பள்ளிக் கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது.”

`என்னை மகிழ்விப்பதாக எண்ணி எனது நூல்களை விநியோகிக்க வேண்டாம்! ’ - தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு

``இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக, பள்ளிக் கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது.”

Published:Updated:
வெ.இறையன்பு

தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ்,, பொதுவெளியில் அதிக கவனம் ஈர்த்த ஐ.ஏ.எஸ் அதிகாரி. நிர்வாகச் செயல்பாடுகள் மட்டுமல்லாமல், பொதுத்தளத்தில் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் அறியப்படுகிறார். குறிப்பாக, `உள்ளொளிப் பயணம்’, `வையத் தலைமை கொள்’, `போர்த்தொழில் பழகு’, `ஐ.ஏ.எஸ் வெற்றிப்படிக்கட்டுகள்’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதி, தமிழ் இலக்கிய உலகில் தனி அடையாளத்துடன் வலம்வருகிறார்.

தற்போது, புதிய தலைமைச் செயலாளராகப் பதவியேற்றிருக்கும் அவர், "எந்த வகையிலும், தன் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது" என்ற நோக்கில், தனது நூல்களை அரசு செலவிலோ, சொந்தச் செலவிலோ விநியோகம் செய்ய வேண்டாம் எனக் கண்டிப்புடன் அறிவுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இறையன்பு
இறையன்பு

அதில், "நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாள்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களைத் தொடுத்தும் சில நூல்களை எழுதிவந்தேன். அவற்றிலுள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை. இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக, பள்ளிக் கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும், எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி களங்கம் விளைவிக்கும் என்பதால்தான் இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கிறேன். எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம். அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை அது. அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி, என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்தச் செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்று அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன்.

இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசுக் கணக்கில் செலுத்தப்படும். சொந்தச் செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.’’ இவ்வாறு தனது அறிக்கையில் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார். இறையன்பு எழுதிய `வாய்க்கால் மீன்கள்’, `ஆத்தங்கரை ஓரம்’, `பத்தாயிரம் மைல் பயணம்’ போன்ற நூல்கள் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கின்றன என்பதும் இங்கு குறிப்படத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism