Published:Updated:

`மோடியும் சீக்கிய சமூகமும்’ - 2 கோடி இ-மெயில்கள்; இது முதன்முறை அல்ல! - ஐஆர்சிடிசி விளக்கம்

மோடி
மோடி

ஐஆர்சிடிசி-யின் கையேடுகள் இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் அனுப்பப்பட்ட நிலையில், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழகம், (IRCTC), அதன் வாடிக்கையாளர்களுக்கு 47-பக்கங்களை உள்ளடக்கிய கையேட்டை அரசாங்கத்தின் 'பொது நலன்' என்று கூறி மின்னஞ்சல் மூலம் சீக்கிய சமூக வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுப்பியிருப்பதாக வெளியான தகவல் விவாதப் பொருளாகியிருக்கிறது.

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) தனது வாடிக்கையாளர்களுக்கு 47 பக்கங்கள் கொண்ட கையேடு ஒன்றை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருக்கிறது. அந்தக் கையேட்டில் பிரதமர் மோடி மற்றும் சீக்கியர்களுடனான அவரது அரசாங்கத்தின் நல்லுறவு பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் 'பொது நலன்' என்ற பெயரில் இந்த மெயில்கள் அனுப்பட்டுள்ளன.

ஐஆர்சிடிசி
ஐஆர்சிடிசி

ஐஆர்சிடிசி, கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி முதல் டிசம்பர் 12-ம் தேதி வரை தனது வாடிக்கையாளர்களுக்கு, சீக்கிய சமூகத்துக்காகப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த 13 திட்டங்களைப் பட்டியலிட்டு, கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேலான மின்னஞ்சல்களை அனுப்பியிருக்கிறது.

இந்தக் கையேட்டில், 1984-ம் ஆண்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நீதி உள்ளிட்ட 13 தலைப்புகளின்கீழ் அரசின் திட்டங்களைப் பற்றிய விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கையேட்டை, கடந்த டிசம்பர் 1-ம் தேதி குருநானக் ஜயந்தியை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் வெளியிட்டனர்.

ஐஆர்சிடிசி-யின் கையேடுகள் இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் அனுப்பப்பட்ட நிலையில், சீக்கியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஐஆர்சிடிசி-யின் இந்த மின்னஞ்சல் சீக்கியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அனுப்பப்பட்டவை என்ற குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதையடுத்து, ஐஆர்சிடிசி அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, ``எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்துக்கென்றும் இல்லாமல் அனைவருக்கும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இது முதல் நிகழ்வு அல்ல. முன்னதாக இது போன்ற நடவடிக்கைகளை ஐஆர்சிடிசி செய்திருக்கிறது. பொது நலனாக அரசு நலத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக இது போன்ற செயல்களை மேற்கொண்டிருக்கிறது" என்று அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு