Published:Updated:

`124ஏ' - தேசத்துரோக வழக்கு... உருவாக்கிய நாடே நீக்கி விட்டது... இந்தியாவுக்குத் தேவையா? #Sedition

நெரிக்கப்படும் கருத்துரிமை
நெரிக்கப்படும் கருத்துரிமை

இந்தியாவில், `தேசத்துரோக வழக்கு' என்ற சட்டத்தை இயற்றிய பிரிட்டன், 2009-ம் ஆண்டு இந்தச் சட்டத்தைத் தங்கள் நாட்டு நீதித்துறையில் இருந்தே நீக்கிவிட்டது. இந்தியாவில் மட்டும் இன்னும் இதற்கான தேவை இருக்கிறதா?

சமீபகாலமாக இந்தியாவில் தேசத்துரோக வழக்குகள் அதிகரித்து வருகின்றன. பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், படைப்பாளர்கள், சினிமா இயக்குநர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் என கருத்தியல் தளத்தில் இயங்கும் அனைவரின் மீதும் இந்தச் சட்டம் பாய்கிறது. சமீபத்தில், கர்நாடக மாநிலத்தில் பிடார் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் சி.ஏ.ஏ சட்டம் குறித்து நாடகம் இயற்றிய, குழந்தைகள் கூட போலீஸால் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் நாடகத்தில் நடித்த மாணவி ஒருவரின் தாய் ஆகியோர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டது. இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

பாலகங்காதர் திலகர்
பாலகங்காதர் திலகர்

தேசத்துரோக வழக்கு என்றால் என்ன?

இந்தச் சட்டத்தை 1837-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசியல்வாதியும் வரலாற்று ஆசிரியருமான தாமஸ் மெக்காலே உருவாக்கினார். 1860-ம் ஆண்டு, இந்திய தண்டனைச் சட்டம் இயற்றப்பட்ட போது, இந்தச் சட்டம் முதலில் அதில் சேர்க்கப்படவில்லை. பின்னர், 1870-ம் ஆண்டு சிறப்பு மசோதா இயற்றப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தில் இது இணைக்கப்பட்டது. இந்தியாவிலேயே, பழைமையான சட்டத்தில் இதுவும் ஒன்று. இந்திய தண்டனைச் சட்டத்தில் 124ஏ பிரிவுதான் தேசத்துரோகத்தை வரையறுக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அரசுக்கு எதிராகப் பேசுதல், எழுதுதல், அரசை அவமதிக்கும விதத்தில் நடத்தல் அல்லது அவ்வாறு நடப்பவர்களை ஊக்குவித்தல் போன்ற செயல்கள் தேசத்துரோகமாகக் கருதப்படுகின்றன. சமீபத்தில், பெங்களுருவில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி முன்னிலையில் சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அப்போது, மாணவச் செயற்பாட்டாளர் அமுல்யா என்பவர் `பாகிஸ்தான் ஜிந்தாபாத் ' என்று திடீரென கோஷமிட, பதறிப்போன அசாதுதீன் ஓவைசி அந்த மாணவியிடமிருந்து மைக்கைப் பிடுங்கினார். ஏனென்றால், தடுக்காவிட்டால், அவர் மீதும் தேசத்துரோக வழக்கு பாய்ந்து விடும் அபாயம் இருந்ததே. `பாகிஸ்தான் மக்கள் மிகவும் நல்லவர்கள்' என்று பேசியதற்காக தேசத்துரோக வழக்கும் பாய்ந்திருக்கிறது. அது குறித்து கட்டுரையின் பிற்பகுதியில் பார்ப்போம்.

தேசத்துரோகம் செய்தால் தண்டனை என்ன?

தேசத்துரோக வழக்கு பதியப்பட்டால், ஜாமீனில் வெளி வர முடியாது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், 3 ஆண்டுகள் குறைந்தபட்ச தண்டனையாகவும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் கிடைக்கலாம். சில சமயங்களில் அபராதமும் விதிக்கப்படும். அரசுப் பணிகளில் சேரமுடியாது. பாஸ்போர்ட்டை நிரந்தரமாகவோ அல்லது தேவைப்படும் போதோ, நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

தேசத்துரோக வழக்கு
தேசத்துரோக வழக்கு

தேசத்துரோக வழக்கின் ஆதரவாளர்கள் கருத்து என்ன?

`ஐ.பி.சி 124ஏ சட்டம், பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. வன்முறை மற்றும் சட்டவிரோதமாக அரசை அகற்றுவதற்கான முயற்சிகள் நடந்தால், அவற்றிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. அரசின் நிலையான தன்மை, தேசத்தின் ஒற்றுமைக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கியமானதாகும். நீதிமன்ற அவமதிப்பு செய்தால், தண்டனை வழங்கப்படுவது போல அரசை அவமதித்தால் தண்டனை கிடைக்கும் என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது' என்று கருதுகின்றனர் இதன் ஆதரவாளர்கள். பல மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அரசைக் கவிழ்க்க முயன்று, பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இவற்றைத் தடுத்து, அரசை நிலைநாட்ட இந்தச் சட்டம் பயன் படுத்தப்படுவதாக இதன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

124 ஏ சட்டம் ஏன் தேவையில்லை? எதிர்ப்பாளர்கள் சொல்வது என்ன?

`தேசத்துரோகச் சட்டம், காலனிய ஆதிக்கத்தின் நினைவாக இன்னும் இந்தியாவில் இருந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டுக்கு இதுபோன்ற சட்டங்கள் பொருந்தாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் குடிமக்களுக்குத் தந்த பேச்சு சுதந்திரத்தை இந்தச் சட்டம் பறிக்கிறது' என்று இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். அரசின் கருத்துக்கு எதிராக நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, விவாதம் நடத்துவது ஜனநாயகத்திற்குத் தேவையான அத்தியாவசியமான விஷயங்கள். ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் உரிமை, விமர்சிக்கும் உரிமை மக்களின் அடிப்படைத் தேவை. ``தேசத்துரோக வழக்கை வைத்து இந்தியர்கள் மீது அடக்குமுறையை ஏவிய, பிரிட்டன் தன் நாட்டில் தேசத்துரோக சட்டத்தையே ரத்து செய்து விட்டது. இந்தியாவில் இந்தச் சட்டம் இன்னும் பயன்பாட்டில் இருப்பது ஏன்?" என்கிற கேள்வியும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் எழுகிறது.

தேசத்துரோக  வழக்குகள்
தேசத்துரோக வழக்குகள்
Vikatan Infographics

அரசியல் தலைவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பாய்வதும் காலம் காலமாக நடந்துகொண்டிருக்கிறது. கடந்த காலங்களில், காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளியது. 2019-ம் ஆண்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிராமசபைகளுக்கு உரிமை அளித்து, மத்திய, மாநில அரசுகளை நிராகரித்து, நிலம் கையகப்படுத்துதலைத் தவிர்த்த பழங்குடிகள் 10,000 பேரின் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தது அப்போதைய ஜார்க்கண்ட் மாநில பி.ஜே.பி அரசு. `பதல்காடி' என்று அழைக்கப்பட்ட இந்த இயக்கத்தின் மீதான வழக்குகளை, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ரத்து செய்தார் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன்.

2014-ம் ஆண்டு முதல் 2016- ம் ஆண்டு வரை தேசத்துரோக வழக்கு 179 பேர் மீது பாய்ந்துள்ளது. இதில், 70 சதவிகித வழக்குகளில் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை.

தேசத்துரோக வழக்கு பாய்ந்த தலைவர்கள்

பிரிட்டிஷார் காலத்தில்தான் பத்திரிகையாளர்கள் மீது தாறுமாறாக தேசத்துரோக வழக்குகள் பாய்ந்துள்ளன. 1891- ம் ஆண்டு `பங்கோபாஸி' என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஜோகேந்திர சந்திரபோஸ் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது. பாலகங்காதர் திலகர் தன் `கேசரி' பத்திரிகையில் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். 1897, 1909, 1916 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை திலகர் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இந்தியர்களை அடக்கி வைக்கவே தேசத்துரோகச் சட்டம் திட்டமிட்டு இயற்றப்பட்டுள்ளது
மகாத்மா காந்தி

இதில் 18 மாதங்கள் திலகர் சிறையில் அடைக்கப்பட்டார். 1922-ம் ஆண்டு மகாத்மா காந்தி, `யங் இந்தியா' இதழில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கட்டுரை எழுதினார். இதையடுத்து, காந்தி மீதும் `யங் இந்தியா' வெளியீட்டாளர் சங்கர்லால் பாங்கர் மீதும் இந்தச் சட்டம் பாய்ந்தது. ``இந்தியர்கள் மீது அடக்குமுறையைப் பாய்ச்சுவதற்காகவே இந்தச் சட்டம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்று காந்தி, 124ஏ பிரிவு குறித்து கூறியுள்ளார். ஜவஹர்லால் நேரு `இது ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் ஆட்சேபனைக்குரிய சட்டம்'' எனத் தெரிவித்துள்ளார்.

தேசத் துரோக வழக்கில் சமீபத்திய கைதுகள் 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் தேசிய சின்னங்களையும் அவமதித்ததாக பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆஷிம் திரிவேதி மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும் போராட்டங்கள் வெடித்ததாலும் வழக்கு திரும்பப் பெறப்பட்டது. 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக 60 காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டன. பின்னர், சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில் வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

நடிகை ரம்யா
நடிகை ரம்யா

இதே ஆண்டு கேரளாவில் சினிமா தியேட்டரில் தேசியகீதம் பாடப்பட்டபோது எழுந்து நிற்காத ஏழு பேர் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது. 2015- ம் ஆண்டு டாஸ்மாக் வருவாய் மூலம் தமிழக அரசு இயங்குவதாகப் பாடல்களை வெளியிட்ட பாடகர் கோவன் மீது இந்த வழக்கு போடப்பட்டது. 2016-ம் ஆண்டு ஜே.என்.யூவில் கண்ஹையா குமார் உள்ளிட்ட மூவர் மீது இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. பின்னர், ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். `பாகிஸ்தான் ஒன்றும் நரகம் அல்ல. பாகிஸ்தானியர்களும் இந்தியர்கள் போலத்தான். விருந்தினர்களை உபசரிப்பதில் மிகச்சிறந்தவர்கள்' என்று அண்டை நாட்டு மக்களைப் பாராட்டியதற்காக அரசியல்வாதியும் நடிகையுமான ரம்யா மீதும் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. பின்னர், தான் சொன்ன கருத்துக்காக ரம்யா மன்னிப்பு கேட்டார். ம.தி.மு.க தலைவர் வைகோ மீதும் தேசத்துரோக வழக்கு பாய்ந்துள்ளது.

கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சுப உதயகுமார் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. அவரிடம் இது குறித்து பேசினோம். ``கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து, நாங்கள் இரண்டு ஆண்டுகள் நடத்திய போராட்டத்தில், எங்கள் மீது 20 தேசத்துரோக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. ஏறத்தாழ 9,000 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்த வழக்கையே கிண்டல் செய்வதுபோல இருக்கிறது. தேசத்துரோகம் என்றால் எது தேசத்துரோகம்? நாட்டைக் காட்டிக் கொடுப்பது, நாட்டுக்காக வேவு பார்த்து அந்நிய நாட்டிற்குத் தகவல்களைத் தருவது முதலானவை தேசத்துரோகமாகக் கருதப்படலாம். நாட்டில் வரக்கூடிய வளர்ச்சித் திட்டம், எங்கள் பகுதி மக்களுக்கு ஆபத்தை உருவாக்குகிறது என்பதால் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்வது தேசத்துரோகம் ஆகாது. இதைச் சில நீதிபதிகளும், சமூகச் செயற்பாட்டாளர்களும் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் காவல்துறை இவற்றைக் காதில் போடாமல், இப்படியான வழக்குகளைப் பதிவுசெய்து மக்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்கிறது. எங்கள் போராட்டத்தில் 380 வழக்குகள் போடப்பட்டன. உச்சநீதிமன்றம் சொன்னதால், அதில் 200 வழக்குகளைத் திரும்பப் பெற்றனர். திரும்பப் பெற்ற 200 வழக்குகளில் ஒன்றுகூட தேசத்துரோக வழக்கு கிடையாது. தேசத்துரோக வழக்கு, தேசத்திற்கு எதிராகப் போர் தொடுத்த வழக்கு என 20 பிரிவுகளை வைத்து, நம்மைத் திட்டமிட்டு அச்சுறுத்துகிறது காவல்துறை. இந்தச் சட்டத்தைக் காவல்துறை தவறாகப் பயன்படுத்துகிறது. இது கண்டிக்கப்பட வேண்டியது" என்றார்.

சுப. உதயகுமார்
சுப. உதயகுமார்

மேலும் அவர், ``இது பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம். அந்தக் காலத்தில் பிரிட்டிஷுக்கு எதிராக இருந்தவர்களைத் `தேசத்துரோகிகள்' என்று அழைத்தனர். மகாத்மா காந்தி தேசத்துரோகியாக இருந்தார். பகத்சிங் தேசத்துரோகியாக இருந்திருக்கிறார். மக்களை அடக்கி ஆள ஒரு சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்றால் அதை எதிர்க்க வேண்டும். எங்கள் பகுதிகளில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்பும் இளைஞர்களுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதில்லை. அதனால் பலரின் குடும்பம் வறுமையில் இருக்கிறது. அவர்கள் செய்த ஒரே குற்றம், இந்தத் திட்டம் எங்களுடைய நலன்களுக்கு உகந்ததல்ல என்று சொன்ன ஒரே காரணத்திற்காக மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த அராஜகமான சட்டம் முழுவதுமாக நீக்கப்பட வேண்டும்" என்றார்.

தேசத்துரோக வழக்கு குறித்து பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் நாராயணனிடம் கேட்ட போது, ``124ஏ என்ற வழக்கு, தேசத்துரோகத்தைக் குறிக்கிறது. தேசம் என்பது ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் குறிக்கும். இந்தச் சட்டத்தின் படி, அரசுக்கு எதிராக அவதூறாகவோ, பொதுமக்களை அரசுக்கு எதிராக எழுத்து மூலமாகவோ, சொற்கள், சைகைகள் மூலமாகவோ தூண்டி விட்டு அரசு மீது வெறுப்பை ஏற்படுத்துவது, அரசுக்குத் துரோகம் செய்வது போன்றவைதான் தேசத்துரோக வழக்கு என்று சொல்லப்படுகிறது. ஜனநாயகம் என்பது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. ஜனநாயக நாட்டில் விமர்சனங்கள் மிக மிக அவசியம். ஆனால் ஒரு அரசுக்கு எதிராக உண்மைக்குப் புறம்பாகச் சொல்வது உறுதியாகத் தவறு. தற்போது இருக்கும் அரசின் மீது தேசத்துரோக வழக்கைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்படுமானால், அது தவறு. 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சட்டம் நம் நாட்டில் இருக்கிறது. உதாரணமாக, நெடுவாசல் போராட்டத்தை எடுத்துக் கொண்டால், மக்கள் எங்களுக்கு இந்தத் திட்டம் தேவையில்லை என்று சொல்வதில் தவறு இல்லை. ஆனால் அதைக் காரணமாகக் கொண்டு, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு மக்களைத் தூண்டி விடுபவர்கள் மீது இந்தச் சட்டம் பாய்வதில் எந்தத் தவறும் இல்லை" என்றார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

தொடர்ந்து, ``ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து போராடிய மக்களை அரசு எதிர்கொண்டது. அந்த நேரத்தில், சமூக விரோதிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், பிரதமர், அரசு ஆகியவை குறித்து அவதூறாகப் பேசியது தவறு. விமர்சனங்களோ, கருத்து வேறுபாடுகளும், அரசுக்கு எதிரான நிலைப்பாடுகள் தவறில்லை. ஆனால், அது சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் மீதும் தேசத்துரோக வழக்கு போடப்படக்கூடாது; ஆனால், அந்த மக்களைத் தூண்டிவிட்டு, அரசுக்கு எதிராகச் செயல்படச் செய்பவர்கள் மீது இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்" என்றார்.

இந்தியாவில் தேச துரோக வழக்கு நீக்கப்படுமா?

இந்தியாவில் தேசத்துரோக வழக்கு என்ற சட்டத்தை இயற்றிய பிரிட்டன், 2009-ம் ஆண்டு இந்தச் சட்டத்தைத் தங்கள் நாட்டு நீதித்துறையில் இருந்தே நீக்கிவிட்டது. ஆஸ்திரேலியாவில் நீக்குவதற்கு அந்த நாட்டு சட்ட மறுசீரமைப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்திய சட்ட ஆணையமும், `அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ஒருவர் விரக்தியின் வெளிப்பாடாகப் பேசும் கருத்துகளைத் தேசவிரோதச் செயல்களாகப் பார்க்கக் கூடாது. சாதக, பாதக கருத்துகளைத் தெரிவிப்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. மக்களின் கருத்துகளுக்காகத் தேச விரோத வழக்கு பாய்ந்தால், சுதந்திரத்துக்கு முன்பு அல்லது சுதந்திரத்துக்குப் பின்பு என்கிற எந்த வித்தியாசமும் இல்லாமலேயே போய்விடும். சுதந்திரமாக கருத்துகளை வெளியிடுவதைத் தடுக்கும் கருவியாக இந்தச் சட்டம் இருத்தல் கூடாது'' என்கிற கருத்தை முன் வைத்துள்ளது. 2019-ம் ஆண்டு, ஜூலை 3 அன்று, நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், ``எந்தக் காரணத்தைக் கொண்டும் தேசத்துரோக சட்டம் ரத்து செய்யப்படாது, தேச விரோத, பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதிகளைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது'' என்றார்.

`பா.ஜ.க டெல்லி தலைமையின் செல்லப்பிள்ளை!’ - எப்படி தேர்வானார் எல்.முருகன்?

மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை. மக்கள் தங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத சூழலில், அரசின் நிலைப்பாடுகளை விமர்சிக்கிறார்கள். விமர்சனங்களைக் களைவதற்கு முயற்சி செய்ய வேண்டிய அரசு, மக்களைத் துரோகிகளாக சித்திரிக்கக் கூடாது. கடந்த காலங்களின் தேசத்துரோக வழக்குகள் உணர்த்தும் செய்தி அதுவே!

அடுத்த கட்டுரைக்கு