Published:Updated:

குஜராத்: பாஜக-வின் இமாலய வெற்றியும் ஆம் ஆத்மி பெற்ற வாக்குகளும்..! - ஒரு பார்வை

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபிலும் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, முதன் முறையாக குஜராத்தில் தனது கணக்கைத் தொடங்கியிருக்கிறது.

Published:Updated:

குஜராத்: பாஜக-வின் இமாலய வெற்றியும் ஆம் ஆத்மி பெற்ற வாக்குகளும்..! - ஒரு பார்வை

டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபிலும் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, முதன் முறையாக குஜராத்தில் தனது கணக்கைத் தொடங்கியிருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் தனது கணக்கை ஆரம்பித்திருக்கிறது. டெல்லியைத் தாண்டி பிற மாநிலங்களிலும் கால் பதிக்க வேண்டும் என்பது ஆம் ஆத்மியின் திட்டம். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, அங்கும் ஆட்சியைப் பிடித்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

அதைத் தொடர்ந்து குஜராத், இமாச்சலப்பிரதேச சட்டமன்றத் தேர்தல்களிலும் ஆம் ஆத்மி களமிறங்கியது. இந்த இரு மாநிலங்களிலும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், இந்துத்துவா ஆதரவு வாக்குகளைக் கவரும் வகையில் பல வாக்குறுதிகளை வழங்கினார். ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்களை அச்சிட வேண்டும் என்ற அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் ரூட்டில் கெஜ்ரிவால் பயணிக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

தற்போது, டெல்லி மாநகராட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஆம் ஆத்மி பெற்றிருக்கிறது. 250 வார்டுகளைக் கொண்ட டெல்லி மாநகராட்சிக்குத் தேர்தல் நடைபெற்று, அதன் முடிவுகள் வெளியாகின. பெரும்பான்மைக்கு 126 இடங்கள் தேவை. அதையும் தாண்டி, 134 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. பா.ஜ.க 104 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி வெறும் ஒன்பது இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கின்றன.

கெஜ்ரிவால் - மோடி
கெஜ்ரிவால் - மோடி

டெல்லி மாநகராட்சித் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, குஜராத்திலும் ஆம் ஆத்மி வெற்றியை தொடங்கி இருக்கிறது. அங்கு நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கும் ஆம் ஆத்மி, ஒரு தொகுதியில் முன்னிலை வகித்துவருகிறது. இமாச்சலப்பிரதேசத்தில் ஒரு தொகுதியைக்கூட ஆம் ஆத்மியால் பிடிக்க முடியவில்லை.

ஆரம்பத்தில், ‘ஊழல் எதிர்ப்பு’ என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து அரசியலுக்கு வந்த கெஜ்ரிவால், மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீீர் ஆகியவை தொடர்பாக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்று ஆம் ஆத்மிதான் என்று முங்கிய கெஜ்ரிவால், பா.ஜ.க-வின் `பி’ டீம் என்று விமர்சிக்கப்பட்டார். டெல்லி முதல்வராக இருக்கும் கெஜ்ரிவால், டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து வாய் திறந்ததில்லை. 2002-ல் நடந்த குஜராத் வன்முறை பற்றியும் அவர் பேசியதில்லை.

பிரதமர் மோடியுடன் கெஜ்ரிவால்
பிரதமர் மோடியுடன் கெஜ்ரிவால்

சமீபத்தில், ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லஷ்மி படங்களை அச்சடிக்கலாம் என்ற யோசனையை அவர் முன்வைத்தார். ‘நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த கடவுள்களின் ஆசீர்வாதமும் வேண்டும்’ என்று கெஜ்ரிவால் கூறிய கருத்து, நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது. ஆர்.எஸ்.எஸ் வழியைப் பின்பற்றி இந்தியாவில் இந்துத்துவாவை நிலைநிறுத்த கெஜ்ரிவால் நினைக்கிறார் என்று எதிர்க் கட்சியினர் விமர்சித்தனர்.

இதன் பின்னணியில் குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு கிடைத்திருக்கும் வெற்றியைப் பார்க்க வேண்டியிருக்கிறது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெற்ற பகுதிகளில்தான் ஆம் ஆத்மி வெற்றிபெற்றிருக்கிறது. மேலும், பா.ஜ.க-வின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆம் ஆத்மி துணைபுரிந்திருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

மதியம் 1 மணி நிலவரம்
மதியம் 1 மணி நிலவரம்

மொத்தம் 182 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில், 2017-ல் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க 99 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றிபெற்றது. இந்த முறை, 150 தொகுதிகளை பா.ஜ.க தாண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸின் பலம் வெகுவாகச் சரிந்திருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதில் ஆம் ஆத்மியின் வரவும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை.