Published:Updated:

`ஆபரேஷன் லோட்டஸ்’ - பாஜக வியூகத்தால் அலறுகிறதா ஆம் ஆத்மி?!

ஆம் ஆத்மி - பாஜக

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்கள் தலா ரூ.20 கோடி கொடுத்து, அவர்களை தன் கட்சிக்கு இழுக்கும் பா.ஜ.க-வின் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ தோல்வியடைந்துவிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகிறார்.

`ஆபரேஷன் லோட்டஸ்’ - பாஜக வியூகத்தால் அலறுகிறதா ஆம் ஆத்மி?!

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்கள் தலா ரூ.20 கோடி கொடுத்து, அவர்களை தன் கட்சிக்கு இழுக்கும் பா.ஜ.க-வின் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ தோல்வியடைந்துவிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகிறார்.

Published:Updated:
ஆம் ஆத்மி - பாஜக

பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி, அங்கு ஆட்சியைப் பிடிக்கும் வேலையில் ஈடுபடுவதாக பா.ஜ.க-மீது தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இத்தகைய உத்தியின் மூலமாக, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சியைக் கவிழ்த்து, தன் கைப்பாவையாகச் செயல்படும் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கிவிட்டது என்று பா.ஜ.க விமர்சிக்கப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இதேபோன்ற உத்தியின் மூலமாக, பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தின் ஆட்சியைக் கவிழ்த்து, தனது ஆட்சியைக் கொண்டுவர பா.ஜ.க முயன்றது என்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வளவுக்கும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிதான், ஐக்கிய ஜனதா தளம். தன் கூட்டணியில் இருக்கும் கட்சியின் ஆட்சிக்கு எதிராக பா.ஜ.க செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பா.ஜ.க-வின் அடுத்த இலக்கு ஆம் ஆத்மி கட்சி. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில், மணீஷ் சிசோடியா துணை முதல்வராக இருக்கிறார். மதுக் கொள்கை விவகாரத்தில் சிசோடியா வீட்டில் நடைபெற்ற சி.பி.ஐ சோதனை டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு, `பா.ஜ.க-வில் சேர்ந்தால் தன்மீதான சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறுவதாக பா.ஜ.க-வினர் பேரம் பேசினர்' என்று சிசோடியா வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது, ஆம் ஆத்மியின் 40 எம்.எல்.ஏ-க்களை விலை பேசி தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த பா.ஜ.க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ரூ.800 கோடி செலவில் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் ஆம் ஆத்மிக்கு எதிரான நடவடிக்கையில் பா.ஜ.க ஈடுபட்டதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருக்கிறார். ‘ஆபரேஷன் லோட்டஸ்’ தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா

ஆம் ஆத்மியை பா.ஜ.க குறிவைப்பதன் பின்னால் பல அரசியல் கணக்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி, பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியைப் பிடித்து பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அடுத்ததாக, கோவா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அங்கு மாநில கட்சி என்ற அந்தஸ்த்தை அது பெற்றது. இன்னும் சில மாதங்களில் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட, ஆம் ஆத்மி ஆயத்தமாகிவருகிறது.

இலவச மின்சாரம் போன்ற ஆம் ஆத்மியின் வாக்குறுதிகள் சமான்ய மக்களைக் கவர்ந்துவிடும். எனவே, குஜராத்தில் பா.ஜ.க-வின் வெற்றியை அது பாதித்துவிடும் என்று பா.ஜ.க அஞ்சுகிறது. இந்த சூழலில்தான், தேர்தல் இலவசங்களுக்கு எதிரான பிரசாரத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுவருகிறார்.

மேலும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற நடவடிக்கையில் பா.ஜ.க ஈடுபட்டது என்கிறார்கள். தங்கள் எம்.எல்.ஏ-க்களை இழுக்க பா.ஜ.க முயன்றதால் அச்சமடைந்த கெஜ்ரிவால், உடனடியாக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டினார். டெல்லியில் ஆம் ஆத்மிக்கு 62 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அவர்களில், 53 எம்.எல்.ஏ-க்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி சட்டமன்ற சபாநாயகர் வெளிநாட்டில் இருக்கிறார் என்றும், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இமாச்சல் பிரதேசத்தில் இருக்கிறார் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது. கூட்டத்தில் பங்கேற்காத எம்.எல்.ஏ-க்களிடம் முதல்வர் கெஜ்ரிவால் செல்போனில் பேசினார் என்றும், அவர்கள் ஒவ்வொருவரும், தங்களின் இறுதிமூச்சு இருக்கும் வரை ஆம் ஆத்மியில்தான் இருப்போம் என்று உறுதியளித்ததாகவும் ஆம் ஆத்மி தெரிவித்திருக்கிறது.

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

இந்த விவகாரத்தில் கெஜ்ரிவால் ரொம்பவே உணர்ச்சிவயப்பட்டிருக்கிறார். “ஆம் ஆத்மியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் சேர்ந்தால், ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 20 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு எம்.எல்.ஏ கூட அவர்கள் பக்கம் செல்லவில்லை என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கெஜ்ரிவால் நெகழ்ச்சியுடன் கூறினார். மேலும், “ஒரு நேர்மையான கட்சியைத் தேர்வு செய்தீர்கள். நாங்கள் செத்தாலும் டெல்லி மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்” என்று கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்

“போன ஜென்மத்தில் செய்த நற்செயல்களால் மணீஷ் சிசோடியா போன்றவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். பா.ஜ.க-வின் பேரத்துக்கு அவர் அடிபணியவில்லை. டெல்லி முதல்வர் பதவி தருவதாகவும் சிசோடியாவிடம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் செய்வதாகக்கூட கூறியிருக்கிறார்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

சிசோடியாவுக்கு எதிராக பொய் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அவரது வீட்டில் 12 மணி நேரம் சி.பி.ஐ சோதனை செய்தும், அவர்களால் கணக்கில் வராத பணத்தையோ, ஆவணங்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை” என்றும் கெஜ்ரிவால் நெகிழ்ந்திருக்கிறார்.

‘ஆபரேஷன் லோட்டஸ் மூலமாக கெஜ்ரிவாலை பா.ஜ.க அலறவிட்டிருக்கிறதா?’ என்பது தற்போதைய கேள்வி. ‘தன் தேர்தல் உத்திகளின் மூலமாக குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை கெஜ்ரிவால் அலறவிடப் போகிறரா?’ என்பது இன்னும் சில மாதங்களில் எழப்போகிற கேள்வி.