Published:Updated:

கெஜ்ரிவாலுடன் சந்திப்பு... பஞ்சாப் தேர்தல்! - பாஜக-வால் குறிவைக்கப்படுகிறாரா நடிகர் சோனு சூட்?!

`பஞ்சாப் தேர்தலையொட்டி ஆம் ஆத்மியில் இணையவிருக்கிறார் சோனு சூட்' என்கிற தகவல் தீயெனப் பரவ, அவருக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் மூன்று நாள்களாக நடந்துகொண்டிருக்கின்றன... பாஜக-வால் குறிவைக்கப்படுகிறாரா நடிகர் சோனு சூட்?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாலிவுட் படங்கள் பலவற்றிலும் நடித்திருக்கும் சோனு சூட், தமிழில் `சந்திரமுகி', `மஜ்னு', `நெஞ்சினிலே', `அருந்ததி' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். படங்களில் நடித்ததைவிட, கொரோனா காலத்தில் உதவிகள் செய்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் நடிகர் சோனு சூட். கொரோனா முதல் அலையில் தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாத புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பேருந்து, ரயில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். இரண்டாம் அலையில் ரெம்டெசிவர், ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்தவர்களுக்கு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தார். இதுபோல பல உதவிகளைச் செய்து எளிய மக்கள் மத்தியில் பெயர் பெற்றார் சோனு.

சமீபகாலமாகவே, `சோனு சூட் அரசியலுக்கு வரப்போகிறார்போல. அதனால்தான் இத்தனை உதவிகளைச் செய்துவருகிறார்' என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், `என்னுடைய சமூக சேவைக்கும், அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை' எனப் பல முறை மறுத்திருக்கிறார் சோனு.

சோனு சூட்
சோனு சூட்
twitter
'இரவில் வந்த போன் கால்! விடிய விடிய அலைந்து, 22 பேர் உயிரைக் காப்பாற்றிய சோனு சூட்!'

இந்தநிலையில், மூன்று வாரங்களுக்கு முன்பாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்தார் சோனு சூட். `ஆம் ஆத்மியில் சேரப்போகிறாரா சோனு?' என்கிற கேள்விகள் எழுந்துகொண்டிருந்தபோது, அவரை டெல்லி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டும் திட்டத்துக்குத் தூதுவராக அறிவித்தார் கெஜ்ரிவால்.

இந்தச் சம்பவம் அரங்கேறிய சில நாள்களிலேயே சோனு சூட்டுக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறைச் சோதனை நடந்துவருகிறது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலுள்ள ஆறு இடங்களில், செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கிய இந்தச் சோதனைகள், மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இதற்கிடையில், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் மனிஷா, ``இது பாஜக அரசால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட வருமான வரிச் சோதனை. பாஜக குறிப்பிட்ட ஆட்களைக் குறிவைத்து வேண்டுமென்றே இது போன்று நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. பாஜக-வினர் தாலிபன்களைப்போல நடந்துகொள்கிறார்கள்'' என்றார்.

பா.ஜ.க Vs சிவசேனா
பா.ஜ.க Vs சிவசேனா

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக மகாராஷ்டிர பாஜக எம்.எல்.ஏ ராம் கதாம், ``இது போன்று மத்திய அரசு நிறுவனங்கள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் பாஜக-வைக் குறை சொல்வதையே எதிர்க்கட்சிகள் அனைத்தும் வாடிக்கையாக வைத்திருக்கின்றன. இந்த நிறுவனங்கள் வேலை செய்வதை நிறுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறார்களா? அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத் தன்மையோடுதான் நடக்கின்றன'' என்றிருக்கிறார்.

இந்தநிலையில், சோனு சூட்டுக்குச் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்று மாலை வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிவைக்கப்படுகிறார் சோனு சூட்?

வேண்டுமென்றே குறிவைக்கப்படுகிறாரா சோனு சூட் என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் சிலர், ``சோனு சூட் பஞ்சாப் மாநிலம், மோகாவைச் சேர்ந்தவர். 2022-ம் ஆண்டில் பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கு தற்போது பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி, எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டுமென, கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது. பஞ்சாப் காங்கிரஸ் பிளவுபட்டிருப்பதும், ஆம் ஆத்மிக்கு பலமாக இருக்கிறது. இந்தநிலையில், இந்தியா முழுவதும் பிரபலமடைந்திருக்கும் சோனு சூட்டை பஞ்சாப் தேர்தலில் களமிறக்கினால், அது அந்தக் கட்சிக்கு கூடுதல் பலமாகவே அமையும். எனவே, ஆம் ஆத்மி அதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

சோனு சூட்
சோனு சூட்
`நேரு, ஸ்டாலின் புகழாரம்; மத்திய அமைச்சர் கைது!' - சிவசேனா, பாஜக விரிசல் அதிகரிக்கிறதா?!

கடந்த ஜூன் மாதத்தில் சிவசேனாவின் சஞ்சய் ராவத், ``சோனு சூட்டுக்குப் பின்னால் பாஜக-தான் இருக்கிறது'' என்று பேசியிருந்தார். சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் பலரும், ``ஒரு வில்லன் நடிகருக்கு இவ்வளவு உதவிகள் செய்வதற்குப் பணம் ஏது? அவருக்குப் பின்னால் இருப்பது பாஜக-தான். இன்னும் சில நாள்களில் பாஜக-வில் இணைந்துவிடுவார் சோனு சூட்'' என்றார்கள். அந்தச் சமயத்தில் சோனு சூட், பா.ஜ.க-வில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள்கூட வந்தன. ஆனால், பா.ஜ.க-வினரே அதிர்ச்சியடையும் வகையில், அவர் கெஜ்ரிவாலைச் சந்தித்துவிட்டு வந்தார். பா.ஜ.க-வில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட சோனு, ஆம் ஆத்மியில் இணைந்துவிடுவாரோ என்கிற எண்ணத்தில்கூட இந்த வருமான வரித்துறை சோதனையை பா.ஜ.க கையிலெடுத்திருக்கலாம்.

அதேநேரத்தில் சோனு சூட், பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே, உண்மையிலேயே அவர்மீது வந்த புகாரின் அடிப்படையில்கூட இந்தச் சோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு