Published:Updated:

நாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு?

அ.தி.மு.க கூட்டணி
அ.தி.மு.க கூட்டணி

அ.தி.மு.க கூட்டணியில் இந்தமுறை எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றன... எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., பிரேமலதா, அன்புமணி ஆகியோர் எந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனர் என்கிற விவரங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

பதினைந்தாவது தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் வரும் மே மாதத்தோடு நிறைவடையவிருக்கிறது. ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத முதல் வாரத்திலோ தமிழகத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன. பிரதான கட்சிகள், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகத்தையும் தொடங்கிவிட்டன. ஆனால், தேர்தல் காலத்தில் மிக நெருக்கடியான காலக்கட்டம் என்பது தொகுதிப் பங்கீடுதான். ஓர் இடம், இரண்டு இடங்களுக்காகக் கடைசி நேரத்தில் எதிர்க் கூட்டணிக்குத் தாவும் காட்சிகள் பலமுறை அரங்கேறியிருக்கின்றன. மாலையில் ஒரு கட்சியோடு கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி, காலை விடிந்ததும் கையில் பூங்கோத்தோடு, எதிரணித் தலைவரைச் சந்திக்கும் காட்சிகளைக் காண தமிழக மக்கள் தயாராக இருக்கவேண்டும்.

தி.மு.க கூட்டணிக் கட்சிகள்
தி.மு.க கூட்டணிக் கட்சிகள்

தற்போதைய நிலவரப்படி, தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க.,கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க கூட்டணியில், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகியவையும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இடங்கள் ஒதுக்கீடு நடக்கும்போது, இதில் பல மாற்றங்கள் நிகழவும் வாய்ப்பிருக்கிறது.

தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதை இந்நேரம் நிச்சயமாக முடிவு செய்திருக்கும். ஆனால், இன்னும் சில நாள்களில், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவார்கள். இந்தநிலையில், அ.தி.மு.க கூட்டணியில் இந்த முறை எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்களை ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்து, அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகள்
அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகள்

``எங்கள் கட்சியின் சார்பில் இந்த முறை 170-172 இடங்களில் நிச்சயமாகப் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை, பா.ஜ.க-வுக்கு 20 இடங்கள், பா.ம.க-வுக்கு 22, தே.மு.தி.க-வுக்கு 10, த.மா.கா-வுக்கு 5, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டு இடங்கள், தவிர பேராசியர் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியும் எங்கள் கூட்டணிக்கு வரவிருக்கிறது. அவர்கள் வரும்பட்சத்தில் அவர்களுக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகிய மூவரும் தொடர்ச்சியாக சசிகலாவை முன்னிறுத்திப் பேசிவருகின்றனர். அதனால், அவர்களுக்கு இந்த முறை நிச்சயம் சீட் கிடையாது.

பா.ஜ.க முதலில் 40 இடங்கள் கேட்டு பிறகு முப்பது இடங்களுக்கு வந்து நின்றார்கள். ஆனால், `அதிக இடங்களை வாங்கி தேவையில்லாமல் தி.மு.க ஜெயிப்பதற்கு வழிவகுத்துவிடாதீர்கள். பா.ஜ.க வேட்பாளரைவிட, அ.தி.மு.க நிற்கும்போது தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்'' என முதல்வர் சொன்னதும் பா.ஜ.க-வினர் ஓரளவுக்கு இசைந்துவந்திருக்கின்றனர். அதிலும் நாங்கள் கேட்கும் தொகுதிகளைத்தான் ஒதுக்க வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தனர். ஆனால், 10 தொகுதிகள் அவர்கள் கேட்கும் இடங்களும், மீதமுள்ள 10 தொகுதிகள் நாங்கள் சொல்லும் இடங்களிலும் நிற்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

எல்.முருகன்
எல்.முருகன்

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை, 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது, 72 தொகுதிகளில் 30,000-க்கும் அதிகமான வாக்குகளை வாங்கியிருக்கின்றனர். 22 தொகுதிகளில் 40,000-க்கும் அதிகமாகவும் 10 தொகுதிகளில் 50,000-க்கும் அதிகமாகவும் வாங்கியிருக்கின்றனர். 80 தொகுதிகளில் 15-20 ஆயிரம் வாக்குகளையும் 50 தொகுதிகளில் 5-10 ஆயிரம் வாக்குகளையும் வாங்கியிருக்கின்றனர். ஆகமொத்தம், 100 தொகுதிகளில், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக பா.ம.க-வின் வாக்குகளே இருக்கின்றன. அவர்கள், எங்கள் கூட்டணியில் இருப்பது எங்களுக்குக் கூடுதல் பலம்தான்.

மகனை வீழ்த்த அம்மாவின் பாணி... அ.தி.மு.க தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகள்!

ஆனால், தே.மு.தி.க எங்கள் கூட்டணியில் நீடிப்பதை துணை முதல்வர் விரும்பவில்லை. பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில், தி.மு.க-வுக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்கவைக்கும் அவர்கள் நம்முடன் எதற்கு என ஏகக் கடுப்பில் இருக்கிறார். ஆனால், முதல்வர்தான் பரவாயில்லை இருந்துவிட்டுப் போகட்டும் எனச் சொல்லியிருக்கிறார். அதேவேளையில், நாம் தமிழர் கட்சியுடனும் பேசிவருகிறோம். அவர்களுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் வரை வாக்குகள் இருக்கின்றன. இழுபறியாக இருக்கும் இடங்களில் அந்த வாக்குகள் எங்கள் வெற்றிக்குக் கைகொடுக்கும் என நினைக்கிறோம். தே.மு.தி.க-வைக் காட்டிலும் நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குவங்கி இருக்கிறது. அதனால், நாம் தமிழர் கட்சி கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு 10 இடங்களை ஒதுக்கிவிட்டு, தே.மு.தி.க வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி

அதேபோல, தமிமுன் அன்சாரி, தி.மு.க கூட்டணியின் பக்கம் போவதால், மனிதநேய மக்கள் கட்சி எங்கள் கூட்டணிக்கு வரும் நிலையில் இருக்கிறது. அதுபோக, தி.மு.க கூட்டணியில் ஐந்து இஸ்லாமியக் கட்சிகள் இருப்பதால், எங்களுடன் வருவதையே ஜவாஹிருல்லாவும் விரும்புகிறார். பா.ஜ.க எங்கள் கூட்டணியில் இருந்தாலும், எங்கள் தலைமையில்தான் கூட்டணி இருப்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்கள் வருவது எங்கள் கூட்டணிக்குக் கூடுதல் பலம்'' என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு